அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்(ரோமர் 8:11).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/__zz6McLM_A
இயேசு உயிர்தெழுந்து பரமேறி செல்வதற்கு முன்பு, அவருடைய சீஷர்களிடம் எருசலேமை விட்டுப் போகாமல் நான் கூறின பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். ஆகையால் அவர்கள் ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஒலிவ மலையிலிருந்து எருசலேமுக்கு போனார்கள். இயேசு உயிர்தெழுந்து அவரை வெளிப்படுத்துவதற்கு முன்பு, சீஷர்களுக்குள் பின் மாற்றம் காணப்பட்டது. இரண்டு சீஷர்கள் எம்மாவூருக்கு நேராக போய்விட்டார்கள், பேதுரு மீன்பிடிக்கப் போகிறேன் என்று கூறி மற்றவர்களையும் மீன்பிடிப்பதற்க அழைத்துச் சென்றான். தோமாவுக்குள் அவ்விசுவாசம் காணப்பட்டு சீஷர்களை விட்டு தனியாய் காணப்பட்டான். ஆனால், இயேசு உயிர்தெழுந்து தன்னை நாற்பது நாட்கள் சீஷர்களுக்கு வெளிப்படுத்திய பின்பு அவர்களுக்குள் உயிர் மீட்சி வந்தது, அதினிமித்தம் ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து அவருடைய வாக்குத்தத்தம் நிறைவேற எருசலேமில் காத்திருந்தார்கள். அவர்களோடு சில ஸ்திரீகளும், இயேசுவின் தாயாகிய மரியாளும், இயேசுவின் சகோதரருங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள் என்று அப். 1:14 கூறுகிறது. இயேசு உயிர்தெழுந்து தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு, அவருடைய சகோதரர்கள் அவ்விசுவாசிகளாய் காணப்பட்டார்கள். ஆகையால் இயேசு தன் தாயையும் அவர்களிடம் ஒப்படைக்கவில்லை. பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான், அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள் என்று யோவான் 7:4,5 கூறுகிறது. ஆனால், இப்பொழுது உயிர்தெழுதலின் வல்லமை அவர்களையும் உயிர்ப்பித்து சீஷர்களோடு மேல்வீட்டறையில் காணப்படும் படிக்குச் செய்தது.
இயேசு பாடுபட்டு, அடக்கம்பண்ணப்பட்டு, உயிர்த்தெழுவதற்கு முன்பு, சீஷர்களிடம் ஒருமனமின்மைக் காணப்பட்டது. தங்களுக்குள் யார் பெரியவன் என்ற போட்டி காணப்பட்டது. அவர்களுக்குள் பொறாமையும் எரிச்சலும் காணப்பட்டது. செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் (மாற்கு 10:37) என்றவுடன் மற்ற சீஷர்களுக்குள் எரிச்சல் வந்தது. ஆனால் உயிர்தெழுந்த ஆண்டவர் அவர்களைச் சந்தித்தபின்பு அவர்களுக்குள் ஒருமனம் காணப்பட்டது. அத்துடன் எல்லாரும் ஜெபத்திலும் வேண்டுதலிலும் இடைவிடாமல் தரித்திருந்தார்கள். சுமார் பத்து நாட்கள், இயேசு பரமேறின நாற்பதாவது நாளிலிருந்து, ஐம்பதாவது நாள் பெந்தெகோஸ்தே பண்டிகை வந்த நாள் வரை (அப். 2:1) அவர்கள் மேல்வீட்டில் தொடர்ந்து ஜெபத்திலே காணப்பட்டார்கள். ஆண்டவரோடு, கெத்சமனேயில், ஒரு மணி நேரம் விழித்திருந்து ஜெபிக்கமுடியாதவர்கள் இப்பொழுது பத்து நாட்கள் காத்திருந்து ஜெபிக்கும் படிக்கு அவர்களுக்குள் உயிர் மீட்சி வந்தது. ஆகையால் ஆதி சபையில் பலத்த எழுப்புதல் காணப்பட்டு மூவாயிரம், ஐயாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளே, இந்த கடைசி நாட்களில் இயேசுவின் உயிர்த்தெழுதலின் வல்லமை நம்மையும் சந்தித்து, நம்மையும் உயிர்ப்பித்தால் நலமாயிருக்கும். அப்பொழுது நமக்குள் கீழ்ப்படிதல் வரும், பின் மாற்றங்கள் விலகும், அவ்விசுவாசம் நீங்கும், யார் பெரியவன் என்ற மேட்டிமைகள் மாறும், ஒருமனம் ஒற்றுமை உண்டாகும், காத்திருந்து ஜெபிக்கிறவர்களாய் காணப்படுவோம், நம்மூலம் தேசங்கள் எழுப்புதலைக் காணும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae