விசுவாசத் தொடுதல் (Touch of faith).

அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கின படியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும் படிக்கு வகைதேடினார்கள்(லூக்கா 6:19).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/JN3ag0wmP5c

இயேசுவின் ஊழியத்தின் நாட்களில் அவரிடத்தில் வந்த எல்லாருக்கும்   அற்புதங்களைச் செய்கிறவராகவும், அவர்களை நோய்களிலிருந்தும், பிசாசின் பிடியிலிருந்தும் விடுவிக்கிறவராகவும் காணப்பட்டார். அவரைத் தொடும் போது அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கின படியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும் படிக்கு வகைதேடினார்கள். இயேசு தொடும் போதும் அற்புதம் நடந்தது, அவரை ஜனங்கள் தொடும் போதும் அவர்களுக்கு அற்புதங்கள்  நடந்தது. அவரிடத்திலிருந்து புறப்பட்ட வல்லமையே அதற்குக் காரணமாய் இருந்தது. நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார், தேவன் அவருடனே கூட இருந்த படியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட  யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார் என்று அப். 10:38 கூறுகிறது. இயேசுவின் மூலமாய் புறப்பட்ட ஆவியானவரின் வல்லமை அற்புதங்களைச் செய்தது.

ஒருவிசை யவீருவின் பன்னிரண்டு வயது மகளைச் சொஸ்தமாக்கும் படிக்கு இயேசு அவனுடைய வீட்டிற்குச் சென்றார். இயேசு வந்து அவள் மேல் கைகளை வைத்து அவளைத் தொடவேண்டும் என்பது யவீருவின்  வேண்டுதலாய் காணப்பட்டது (மாற்கு 5:23). இயேசு தொட்டால் அவள் விடுதலையாகிவிடுவாள் என்று அவன் முழுவதுமாய் நம்பினான். போகிற வழியில் வேறொரு ஸ்திரீ அவளும் பன்னிரண்டு வருடமாய் பலகீனத்தின் நிமித்தம் பெரும்பாடு  படுகிறவளாய் காணப்பட்டாள். அவள் அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு  உண்டானவற்றையெல்லாம் செலவழித்தும், கொஞ்சம் கூட குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,  இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வ ஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி:  ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப்  பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.  உடனடியாக  இயேசுவினிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு அவளை  சொஸ்தப்படுத்தினது. அவளுடைய பன்னிரண்டு வருட வேதனை நீங்கி அவள் சுகமானாள். இயேசு தொடர்ந்து யவீருவின் வீட்டில் போவதற்கு முன்னே சிறுப்பெண்  மரித்துப் போளாள். ஆகிலும் இயேசு அவள் மேல் கைகளை வைத்து சிறுபெண்ணே எழுந்திரு என்றார்.  உடனே வல்லமை  அவரிடத்திலிருந்து  புறப்பட்டது, யவீருவின் மகள் உயிரோடு எழுந்து நடந்தாள் என்று மாற்கு 5:42 கூறுகிறது. 

கர்த்தருடைய பிள்ளைகளே, இயேசுவின் வல்லமை இன்னும் குறைந்து போகவில்லை. ஆகையால் உங்கள் வியாதியின் வேதனை எதுவாகக் காணப்பட்டாலும் உங்கள் விசுவாசக் கரங்களை நீட்டி அவரைத் தொடுங்கள். அவருடைய அற்புதத்தின் வல்லமை உடனே உங்களுக்கு வெளிப்படும்,  நீங்கள் சொஸ்தமாவீர்கள். அதுபோல, இயேசுவை  அபிஷேகித்திருந்த அதே பரிசுத்த ஆவியானவர் நம்மையும் அபிஷேகித்திருக்கிறார். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்று உயிர்தெழுந்த ஆண்டவர் நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார். ஆகையால் எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள் என்று ஏசாயா 52:1ல் எழுதியிருக்கிறபடி, கர்த்தருடைய மணவாட்டியாகிய சீயோன் என்று அழைக்கப்படுகிற நாம் கர்த்தருடைய வல்லமையால் நிறைந்து அனேகருடைய வாழ்க்கையில் விடுதலையைக் கொண்டு வருகிறவர்களாய் காணப்படுவோம். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *