பரலோகம் உங்களை அறிந்திருக்கிறதா? (Does heaven know you?)

அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச்  செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்(மத். 7:23).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/xBg4pqSdzZo

பரலோகம் நம்மை அறியாதிருக்கும் போது, இந்த பூமியில் புகழ்பெற்ற நபர்களாய், மிகுந்த செல்வந்தர்களாய், அதிகார பலத்தோடு வாழ்ந்து என்ன பிரயோஜனம். பரலோகம் நம்மை அறிவதற்கு, பூமியில் நாம் வாழும் போது தேவனுடைய பிரியத்தின் படியும், அவருடைய சித்தத்தின் படியும் எல்லாக் காரியங்களையும் செய்ய வேண்டும். இயேசு ஜெபிக்கக் கற்றுக் கொடுத்த வேளையில் கூட, பரலோகத்தில் தேவனுடைய சித்தம் செய்யப்படுவது போல, பூமியில் நம் வாழ்க்கையிலும் செய்யப்பட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே  பரலோக ராஜ்யத்தில்  பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை என்றும் மத்.7:21 கூறுகிறது. 

இந்நாட்களில் உலக ஜனங்கள் மத்தியில் மாத்திரமல்ல கிறிஸ்தவர்கள், குறிப்பாக ஊழியர்கள் நடுவில் கூட நான் பிரபலமான நபராய், உலகத்தால் அறியப்பட்டவராய் காணப்பட வேண்டும் என்பது ஆசையாய் காணப்படுகிறது.  அதற்காய் பல பிரயாசங்களை எடுத்து, தங்களை பிரபலப்படுத்துவதற்கு  முயல்கிறார்கள். ஆனால் உலகம் நம்மை அறிவதை விட,   பரலோகத்தின் தேவன் நம்மை அறிய வேண்டும் என்ற அதிக வாஞ்சை நமக்குள்ளாய்   காணப்பட வேண்டும். இயேசு தன்னுடைய மலைப் பிரசங்கத்தில், அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும்  உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய் கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன் என்றார் என்று மத். 7:22,23ல் எழுதப்பட்டிருக்கிறது. இயேசு  உங்களை அறியாதபடி, உங்களை அக்கிரமக்காரன் என்று அழைக்கும் போது, உலகப்பிரசித்தி பெற்ற நபராயிருந்து என்ன பிரயோஜனம்!  

கர்த்தருடைய பிள்ளைகளே, அத்திமரத்தின் கீழிருக்கும் போது நாத்தான் வேலை கர்த்தருடைய கண்கள்   கபடமற்ற உத்தம இஸ்ரவேலனாய் கண்டது. ஆகையால் அவனை தன்னுடைய சீஷனாய் கர்த்தர் தெரிந்துகொண்டார்.  சகேயு காட்டத்தி மரத்தின் மேலிருக்கும்போது,  தன்னை   அறியும் படிக்கு  அவனுக்குள்ளிருந்த வாஞ்சையை இயேசு கண்டு, அவனை அழைத்து, இரட்சித்து ஆபிரகாமின் குமாரனாய்  மாற்றினார். ஆண்டவர் நம்முடைய உட்காருதலையும் எழுந்திருக்குதலையும் அறிந்தவர், நம்முடைய இருதயங்களின் நினைவுகளையும், அதின் தோற்றத்தையும் அறிந்தவர். அவருடைய கண்களுக்கு மறைவாக ஒன்றையும் ஒருபோதும் செய்யமுடியாது. ஆகையால், கர்த்தரைக் குறித்த பயத்தோடும், பரிசுத்தத்தோடும், தாழ்மையோடும் வாழ உங்களை அர்ப்பணியுங்கள், பரலோகத்தின் தேவன் உங்களை அறியட்டும். அப்போது, அவர் உங்களை ஆசீர்வதித்து, உங்கள் பெயரைப் பெருமைப்படுத்தி, உங்களைக் கனப்படுத்தி உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *