சங் 27:4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/qW13Wf-4DV8
மார்த்தாள் இயேசுவினிடத்தில் கற்றுக்கொண்டது தேவையானது ஒன்று; அது இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவர் வசனத்தை கேட்பது. அதுபோல, தாவீது ஒன்றை கர்த்தரிடத்தில் நாடுகிறான். அது கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருந்து அவருடைய மகிமையை பார்க்க வேண்டும் என்பதே அவன் ஆசை வாஞ்சையாய் இருந்தது.
அந்தக் காலத்து ராஜாக்களுக்கு முக்கியமாக இரண்டு ஆசைகள் இருக்கும். ஒன்று தங்கள் தேசத்தின் எல்லையை விரிவுபடுத்துவது, மற்றொன்று செல்வத்தை குவிப்பது. இஸ்ரேல் இன்னும் மிகப் பெரிய தேசமாக இருக்கவில்லை, தாவீதும் மிகவும் செல்வந்தரான ராஜாவாகவும் இருக்கவில்லை. ஆனாலும், கர்த்தருடைய பிரசன்னத்தில் வாசம் செய்து அவருடைய அழகைக் காண்பதே தனது முதன்மையான ஆசை என்று அவர் கூறுகிறார். மேலும், தனது வாழ்நாள் முழுவதும் இதைத் தேடுவேன் என்றும் அவர் கூறுகிறார். ஒரு காதலி தனது காதலனின் முன்னிலையில் அமர்ந்து, அவருடைய அழகைப் பார்த்து, உலகம் முழுவதும் வேறு எதையும் விரும்பாத அளவிற்கு, தாவீது கர்த்தருடைய பிரசன்னத்தை நாடினான். இந்நாட்களில், கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்து அவருடைய பிரசன்னத்தில் இருக்கும் எல்லா வாய்ப்பும் இருந்தும், அவருடைய பிரசன்னத்தை அசட்டை செய்கிற கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். ஆலயத்திற்கு ஆராதனை ஆரம்பிக்கும் முன்பே வந்து அவருடைய பிரசன்னத்தில் நனைய வேண்டும் என்ற வாஞ்சையில்லாமல், இன்னும் சபையில் ஆராதனைக்கு தாமதமாக வரும் கிறிஸ்தவர்களும் உண்டு. இப்படிப்பட்டவர்களாய் நீங்கள் இருப்பீர்களென்றால், உங்கள் முன்னுரிமையை சரிப்படுத்தும் நேரமாக இது காணப்படுகிறது. அதிகமாய் கர்த்தருடைய பிரசன்னத்தை, அவருடைய மகிமையை காண வாஞ்சியுங்கள்.
ஒரு குறிப்பிட்ட Hyper marketல் மிகப்பெரிய சலுகையில் பொருட்களை வாங்கலாம் என்று அறிவித்தார்கள். அந்த சலுகை வெறும் இரண்டு மணிநேரம் தான் இருக்கும் என்று கூறினார்கள். அந்த மணிநேரம் சபை ஆராதனை நேரமாகவும் இருந்தது. இலட்சக்கணக்கான ஜனங்கள் அந்த Hyper Market டிற்கு ஓடினார்கள். அப்படியாக சில விசுவாசிகளும் சபை ஆராதனையில் கர்த்தருடைய பிரசன்னத்தை அசட்டைபண்ணி Hyper Market டிற்கு நேராக ஓடினார்கள். அப்படி ஓடின விசுவாசிகள் பின்னாட்களில் கர்த்தரால் அசட்டைபண்ணபட்டர்கள்; கனயீனப்படுத்தப்பட்டார்கள். கர்த்தருடைய ஆலயத்திற்கு நேராக வந்தவர்கள், அவருடைய பிரகாரங்களில் செழிப்பாய் வாழ்ந்தார்கள்.
தாவீது ஆண்டவரின் இருதயத்திற்கு ஏற்ற மனிதன் என்று வேதாகமம் குறிப்பிடப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. உண்மையை சொல்லப்போனால் தாவீது ஒரு சரியான மனிதர் அல்ல. அவர் தனது வாழ்க்கையில் ஒரு காலத்தில் பாவத்தில் ஆழமாக விழுந்து, விபச்சாரம் மற்றும் கொலை இரண்டையும் செய்தார். ஆனால் தாவீது மனந்திரும்பியபோது, ஆண்டவர் அவரை மன்னித்து, அவரைச் சுத்திகரித்து, தோல்வியின் ஆழத்திலிருந்து அவரை உயர்த்தினார், மேலும் அவரைத் தனது இருதயத்திற்கு ஏற்ற மனிதன் என்று அழைத்தார் (அப் 13:22). இதற்கு ஒரு காரணம், தாவீதின் இதயத்தின் ஆழத்தில் தனது ஆண்டவரின் மீது ஒரு தீவிர அன்பு இருந்தது. 1 சாமு 16:7ல், ஆண்டவர் மனிதனின் இருதயத்தைப் பார்க்கிறார் என்று தெளிவாகக் கூறுகிறார், மேலும் இந்த வார்த்தைகள் உண்மையில் தாவீதைப் பற்றிப் பேசப்பட்டதற்கு முக்கியத்துவம் இல்லாமல் இல்லை. எனவே, கர்த்தர் மீதான அன்பு என்பது கிறிஸ்தவ வாழ்க்கையில் மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாகும்.
தாவீதை போல உங்கள் வாழ்க்கையில் ஒன்றை நாடுங்கள். அது இயேசுவின் மீது அன்பு கூர்ந்து, அவர் பிரசன்னத்தில் நனைந்து, அவர் மகிமையை பார்க்கவேண்டும் என்ற தீராத வாஞ்சையாய் காணப்படட்டும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org