யுத்தங்களின் செய்திகளை கேள்விப்படுவீர்கள் (You will continually hear of Wars).

மத் 24:6,7 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/2ryR5oXU04c

இந்நாட்களில் செய்தி தாள்களை திருப்பினாலோ, செய்திகளை தொலைக்காட்சியிலும் ஊடகத்தின் மூலம் பார்தோலோ, எங்கு பார்த்தாலும் கேட்கிற சத்தம், யுத்தங்களின் சத்தமாய் காணப்படுகிறது. இயேசு மேற்குறிப்பிட்ட வார்த்தையை சொல்லியும், யோவான் வெளிப்படுத்தல் புத்தகத்தை எழுதியதிலிருந்து, கடந்த 19 நூற்றாண்டுகளில் எப்போதும் யுத்தங்கள் நடைபெற்று வந்து கொண்டிருந்தது. ஆனால் 20 ஆம் நூற்றாண்டு வரை உலக யுத்தங்கள் என்று அழைக்கப்பட்ட எந்த யுத்தங்களும் இல்லை. 20 ஆம் நூற்றாண்டில் தேசங்களுக்கு இடையிலான யுத்தங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டு வரை பயங்கரவாதம், இப்போதெல்லாம் நாம் பார்ப்பது போல் இல்லை. ஆனால் இப்பொழுதோ பயங்கரவாதங்கள் பெருகிவிட்டது. இவைகளெல்லாம் இயேசுவின் வருகையை நமக்கு காட்டுகிறது. இயேசு வாசற்படியில் வந்துவிட்டார். அவருடைய வருகை எப்பொழுது வேண்டுமானாலும் காணப்படும்.

யுத்தங்கள் யுத்தங்களின் செய்திகளை நாம் வெறும் தலைப்பு செய்தியாக பார்க்காமல், இயேசுவின் வருகை எவ்வளவு சமீபத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஆகையால் நாம் எந்த ஒரு காரியத்திலும் முதலாவது மனம் திரும்புதலை தள்ளிப்போடக்கூடாது. நம்முடைய வாழ் நாள் குறுகியது என்று வேதத்தில் அநேக இடங்களில் நாம் பார்க்கிறோம். யோபு சொல்லுகிறான், என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும் (யோபு 7:6). சங்கீதக்காரன் சொல்லுகிறான் மனுஷனுடைய நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம் (சங் 144:4) என்பதாக. யாக்கோபு சொல்லுகிறான், மனுஷனுடைய நாட்கள் கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே (யாக் 4:14) என்பதாக. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று தமிழில் பழமொழி காணப்படுகிறது. வயது சென்ற பிறகே, மரணம் வரும் என்ற சூழ்நிலை மாறி, திடீர் மரணங்கள் அதிகம் சம்பவிப்பதை இந்நாட்களில் நிலவும் நோய்களும், யுத்தங்களும், பஞ்சங்களும், இயற்கை சீற்றங்களும் நமக்கு காண்பிக்கிறது. சீலோவாவின் கோபுரம் விழுந்து 18 பேர் உடனடியாக மரித்தார்கள் என்று லுக் 13:4 கூறுகிறது. ஆகையால் நம்முடைய நாட்கள், இந்த உலகில் கொஞ்சம் என்பதை கருத்தில்கொண்டும், இயேசுவின் வருகை சமீபமாய் இருக்கிறது என்று அறிந்தும், முதலாவது நாம் மனம் திரும்பி, பின்பு தேவ இராஜ்யத்தை கட்ட இன்னும் அதிகமாய் ஜெபிக்கிறவர்களாயும், செயல்படுகிறவர்களாயும் காணப்பட வேண்டும். நாட்கள் பொல்லாதவைகளாய் இருப்பதால், காலத்தை பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள, இருந்தாலும், கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள் என்றே இயேசு சொல்லியிருக்கிறார். எச்சரிக்கையாய் இருப்பது என்றால், முதலாவது, மனம் திரும்புவது. மனம் திரும்புங்கள் பரலோக இராஜ்யம் சமீபமாய் இருக்கிறது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *