நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும், அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து, என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்(யோபு 23:3,4).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/WbaEU-lCOTI
யோபு பாடுகளின் வழியாகக் கடந்து சென்ற வேளையில் நான் ஆண்டவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும் என்றான். நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை, பின்னாகப் போனாலும் அவரைக் காணேன் என்று அங்கலாய்த்தான். யோபு கர்த்தருக்குப் பயந்து உத்தமான நீதிக்குரிய ஜீவியம் செய்தவன். அவனுக்குப் பாடுகளும் கஷ்டங்களும் வந்த வேளையில் அவன் மனைவி அவனைக் கைவிட்டு விட்டாள், ஆறுதல் கூறும்படிக்கு வந்த நண்பர்களும் அவன் செய்த தவறுகள்தான் இதற்குக் காரணம் என்று மறைமுகமாகக் குற்றப்படுத்தினார்கள். இந்த நிலையில் தன்னுடைய நியாயத்தைக் கர்த்தருக்கு முன்பாக வரிசையாய் வைப்பதற்கு அவரை சந்திக்க வேண்டும் என்று விரும்பினான். இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த வேளையில் பிதா தன்னுடைய முகத்தைக் குமாரனுக்கு மறைத்த போது, என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கதறியது போல யோபுவும் கர்த்தரைச் சந்திக்கக் கூடாமல் கலங்கிப் போனான். சில வேளைகளில் நாமும் கூட உபத்திரவங்களையும் கஷ்டங்களையும் இழப்புகளையும் சந்திக்கும் போது ஆண்டவரே நீர் எங்கே போனீர் என்று கேட்கிற வேளைகள் உண்டு. லாசரு மரித்த வேளையில், நான்கு நாட்கள் கழிந்து இயேசு வந்த போது, மரியாள் வந்து, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்று கூறி அழுதாள். இயேசு நம்மோடு காணப்படும் போது அற்புதங்களும் அடையாளங்களும் நடக்கும், ஒரு தீங்கும் நம்மைச் சேதப்படுத்தாது.
கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் ஆராதிக்கிற, சேவிக்கிற தேவன் எப்போதும் நம்மோடு கூட காணப்பட விரும்புகிறவர். ஆண்டவர் உயிர்தெழுந்து பரமேறுவதற்கு முன்பு, இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று வாக்குக் கொடுத்தார். அவர் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு பரிசுத்த ஆவியானவராய் இறங்கி வந்து நம்மோடு வாசம் பண்ணுகிறார். நாம் அவருடைய ஆலயமாய் காணப்படுகிறோம். மண்ணான நம்முடைய சரீரத்தில் மகிமையின் தேவனை நாம் சுமக்கிறோம். நம்முடைய தனிப்பட்ட ஜீவியத்தில் மாத்திரமல்ல, சபையாகக் கூடிவரும் போதும் ஆண்டவர் நம்நடுவில் வெளிப்படுகிறார். இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறீர்களோ, அங்கே உங்கள் நடுவிலே இருக்கிறேன் என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தம். நம் நடுவில் அவருடைய வாசஸ்தலம் இருக்கிறது. நாம் கூடிவரும் போது பொற்கச்சை நிலையங்கி தரித்த பிரதான ஆசாரியனாய் இயேசு நம்நடுவில் வந்து உலாவுவார். என் நாமத்தைப் பிரஸ்தாபப் படுத்தும் எந்த இடத்திலும் நான் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன் என்றும் நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். இஸ்ரவேல் சபை தேவனைச் சந்திக்க சீனாய் மலையடிவாரத்தில் வந்த வேளையில், அவர்கள் தங்களை ஆயத்தப்படுத்தி, பரிசுத்தம் செய்து, வஸ்திரங்களைத் தோய்த்து தங்களைச் சுத்தப்படுத்தின வேளையில் ஆண்டவரைச் சந்தித்தார்கள். அதுபோல கர்த்தருடைய பிள்ளைகளாய் காணப்படுகிற நாமும் பயத்தோடும் நடுக்கத்தோடும் பரிசுத்த அலங்காரத்தோடும் ஆண்டவருக்குப் பயந்து அவரைச் சேவிக்கும் போது இயேசு எப்போதும் நம்மோடு கூட காணப்படுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae