உத்தம இருதயத்தைத் தந்தருளும் (Give him a loyal heart)

என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும் உம்முடைய கட்டளைகளையும்  கைக்கொள்ளும்படிக்கும்,  இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம் பண்ணின இந்த அரமனையைக் கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்(1 நாளா. 29:19).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/EIyHGbptAmM

தாவீது ராஜா தன் மகன் சாலொமோனுக்காக ஏறெடுத்த கடைசி ஜெபமாய் மேற்குறிப்பிட்ட வசனம் காணப்படுகிறது. கர்த்தர் தன்னுடைய குமாரனுக்கு உத்தம இருதயத்தைக் கொடுக்க வேண்டும் என்பது அவனுடைய விண்ணப்பமாயிருந்தது.  அதற்கு முன்பு சாலொமோனுக்கு தாவீது  ஆலோசனைக் கொடுத்த வேளையில்,  என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி, கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார், நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார், நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார் என்று 1 நாளா. 28:9ல் கூறினார். நீ உத்தம இருதயத்தோடு ஆண்டவரைச் சேவி என்பது தகப்பனுடைய ஆலோசனையாய் இருந்தது. 

உத்தம இருதயம் என்பது நீதிக்குரிய, பூரண அர்ப்பணிப்புள்ள, மறைமுக நோக்கங்கள் இல்லாத, விசுவாசமுள்ள, தேவனுக்குப் பயந்த,  கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கையைக் குறிக்கிறது. காலேப், யோசுவாவைக்  குறித்துக் கர்த்தர் கூறும்போது என்னை உத்தமமாய் பின்பற்றினார்கள் என்று கூறினார். தாவீது உத்தம இருதயத்தோடு ஆண்டவரைச் சேவித்தான்.  சாலொமோனும் துவக்கத்தில் கர்த்தரிடத்தில் அதிகமாய் அன்பு கூர்ந்து அனேகப் பலிகளைச் செலுத்தி கர்த்தரைத் தொழுதுகொண்டான்.  பின்னாட்களில் அவன் அனேக புறஜாதி ஸ்திரீகளை விவாகம் பண்ணினான், சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள், அதனால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை என்று 1 இரா. 11:4 கூறுகிறது. தேவன் சொப்பனத்தில் இரண்டு முறை எச்சரித்தும் அவன் கீழ்ப்படியாமல் போனான். என் குமாரனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்று ஜெபித்த தாவீதின் ஜெபத்திற்கு  அபாத்திரவானாய் போய்விட்டான்.

கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களுடைய இருதயம் ஆண்டவருக்கு முன்பாக உத்தமமாய் காணட்டும். எலியாவின் நாட்களில் இஸ்ரவேல் சபை ஜனங்கள் காணப்பட்டதைப் போல இருநினைவுகளினால் குந்திக் குந்தி நடக்காதிருங்கள்.  அனலும் இல்லாமல் குளிருமில்லாமல் வெதுவெதுப்பாய் காணப்பட்டால், கர்த்தர் வாந்திப்பண்ணிப் போடுவார் என்று வேதம் எச்சரிக்கிறது. இருநினைவு உள்ளவன் தன் வழிகளில் நிலையற்றவன் என்று வேதம் கூறுகிறது. நாம் நம்மைச் செம்மைப்படுத்த வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஒருநாளும் கர்த்தருடைய ஜனங்கள் இரண்டு எஜமான்களை சேவிக்கமுடியாது. தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்யமுடியாது. நீங்கள் உத்தம இருதயத்தோடும், உண்மை மனதோடும் கர்த்தரைச் சேவிக்கும் போது கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *