பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். சகரியா 2:7.
பாபேல் என்பதற்கு குழப்பத்தின் இடம் என்று அர்த்தம். ஜனங்கள் தங்களுக்குப் பேர் உண்டாக ஒரு நகரத்தையும் கோபுரத்தையும் கட்ட துவங்கின போது, கர்த்தர் அவர்களுடைய பாஷைகளைத் தாறுமாறாக்கினபடியால் ஜனங்கள் ஒரே கூட்டமாயிராமல் பிரிந்துசென்றார்கள். பாபேல் என்ற பெயரிலிருந்து தான் பாபிலோன் வந்தது. பாபிலோன் குமாரத்திகள் என்பது தேவனற்ற உலகத்தின் ஜனங்களைக் குறிக்கிறது. அசுத்தத்திலும், அக்கிரமத்திலும், குழப்பங்களிலும், மேட்டிமைகளிலும், பாவங்களிலும், வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களைக் குறிக்கிறது. உபதேசக் குழப்பங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிற ஜனங்களைக் குறிக்கிறது. சத்துரு ஜனங்களுடைய இருதயங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி, சண்டைகளையும், சமாதானக்கேடுகளையும், யுத்தங்களையும் எங்கும் தூண்டிவிடுகிறவனாய் காணப்படுகிறான்.
சீயோன் குமாரத்திகள் என்பது கர்த்தருக்காகப் பிரித்தெடுக்கப்பட்டு, பரிசுத்த ஜீவியம் செய்து, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிற, கர்த்தருடைய பிள்ளைகளைக் குறிக்கிறது. சீயோனின் ஜனங்கள், பாபிலோன் ஜனங்கள் மத்தியில் வாசம்செய்தாலும், நாம் பிரித்தெடுக்கப்பட்ட ஜனங்கள் என்ற உணர்வோடு வாழவேண்டும். பிலேயாம், கன்மலையுச்சியிலிருந்து, குன்றுகளிலிருந்து இஸ்ரவேல் ஜனங்களைப்பார்த்த வேளையில், அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பதைக் கண்டான் (எண்;. 23:9). அதுபோல, பூமியெங்கும் உலாவுகிற கர்த்தருடைய கண்கள் நம்மைப் பார்க்கும்போது, அவருக்காக பிரித்தெடுக்கப்பட்ட ஜனம் என்று நம்மைக் கண்டு மகிழத்தக்க ஜீவியம் நாம் செய்யவேண்டும். அதுபோல உலக ஜனங்களும் நம்மைக் காணும் வேளையில் நம்முடைய நற்கிரியைகளைக் கண்டு, இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள் என்று நம்மைக்குறித்து சாட்சி பகர வேண்டும்.
பாபிலோனியர்கள் மத்தியில் நாம் வாசம் பண்ணினாலும் நம்மை நாமே அவர்களுடைய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவித்துக்கொள்ளவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். உலகத்தின் கவர்ச்சிகளிலிருந்து, பாவப் பழக்கங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். பாபிலோனின் நடுவிலிருந்தோடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன்நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள் (எரேமியா 50:8) என்று கர்த்தர் சொல்லுகிறார். புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள் (ஏசாயா 52:11) என்றும் வேதம் எச்சரிக்கிறது.
லோத்தின் குடும்பம் சோதோமிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள மனதாயிராததினால், லோத்தின் குமாரத்திகள் சோதோமின் கலாச்சாரத்தைக் கற்றுக்கொண்டு பாவம் செய்தார்கள். அவன் மனைவியும் சோதோமை திரும்பிப்பார்த்து உப்புத் தூணானாள். எலிமலேக்கு, நகோமியின் குடும்பம் பஞ்ச நாட்களில் மோவாப்பிற்கு சென்று திரும்பிவந்துவிடலாம் என நினைத்திருக்கக் கூடும். ஆனால் மோவாபை விட்டு தங்களை விடுவித்துக் கொள்ள மனதில்லாமல், அங்கே அனேக வருடங்கள் தங்கினதால், எலிமலேக்கும் அவன் இரண்டு குமாரர்களும் அங்கே மரித்துப் போனார்கள். ஆனால், யோசேப்பு போத்திபாரின் மனைவியின் நிமித்தம் வந்த பாவச் சோதனைகளிலிருந்து தன்னைக் காத்துக்கொண்டான், அவளுடைய கண்ணிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். அதனிமித்தம் கர்த்தர் அவனை ஆசீர்வதித்து உயர்த்தினார். தானியேல் பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் போஜனத்தாலும் பானத்தினாலும் தன்னை தீட்டுப் படுத்தாமல், பாபிலோனியக் கிரியைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதினால், கர்த்தர் அவனை பத்து மடங்கு சமர்த்தனாக உயர்த்தி ஆசீர்வதித்தார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் உங்களை உலகத்தின் காரியங்களிலிருந்து, தேவனுக்கு பிரியமில்லாதவற்றிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள். அப்பொழுது மகிமை உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org