எல்லாவற்றையும் சோதித்துப் பாருங்கள்(Prove all things)

எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள் (1 தெச. 5:20,21).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/LmHCZ15kxgc

பவுலும், சில்வானும், தீமோத்தேயுவும் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட  தெசலோனிக்கேய சபை விசுவாசிகளுக்கு எழுதும் போது, நீங்கள் எல்லாவற்றையும் சோதித்துப் பாருங்கள் என்றும், நலமான காரியங்களைப்  பிடித்துக் கொள்ளுங்கள் என்றும், பொல்லாங்காய் தோன்றுகிற எல்லா காரியத்தையும் விட்டு விலகுங்கள் என்ற ஆலோசனையைக் கூறுகிறார்.  கடைசிக் காலத்தில் காணப்படுகிற தேவ ஜனங்களாகிய நமக்கு இந்த ஆலோசனைகள் மிகவும் பொருந்துகிறதாய் காணப்படுகிறது. 

முதலாவதாக, ஆவியான தேவன் எல்லாவற்றையும் சோதித்துப் பாருங்கள் என்று கூறுகிறார். உலகத்தின் காரியங்களாய் காணப்பட்டாலும், ஆவிக்குரிய காரியங்களாகக் காணப்பட்டாலும் எல்லாவற்றையும் சோதித்துப் பாருங்கள். ஆதிப்பெற்றோராகிய ஆதாம் ஏவாள் நாட்களிலிருந்து சோதித்து அறிவது என்பது ஒரு பிரச்சினையாகவே  காணப்படுகிறது. சாத்தான் ஏவாளிடம் விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியை புசிக்கும் படிக்குக் கூறின வேளையில் தன் புருஷனாகிய ஆதாமிடம் குறுக்கு சோதனை செய்தபின்பு பதில் கூறுகிறேன் என்று ஏவாள் விலகியிருப்பாளே என்றால் பாவத்தில் விழுந்திருக்கமாட்டாள். சில வேளைகளில் பூமிக்குரிய காரியங்களைச் சோதித்துப் பார்க்கிறவர்கள் கூட, ஆவிக்குரிய காரியங்களில் அவ்வாறு செய்வதில்லை. கடைகளில் சென்று துணிகள், ஆபரணங்கள், மற்றும் பொருட்கள் வாங்கும் போது  அதிக  கரிசனையோடு சோதித்துப் பார்க்கிறவர்கள் கூட ஆவிக்குரிய காரியங்களை முக்கியப்படுத்துவதில்லை. ஆகையால் தான் சபைகளில் வேதம் காட்டாத  வேறொரு இயேசுவும், வேறொரு ஆவியும், வேறொரு சுவிஷேசமும் அறிவிக்கப்படும் போது, பெரேயா  பட்டணத்துச் சபையின் விசுவாசிகளைப் போலப்  பகுத்தறியாதவர்களாய் காணப்படுகிறார்கள். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான் என்று 1 கொரி. 2:15 கூறுகிறது. கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள் என்று எபேசியர் 5:10 கூறுகிறது. 


இரண்டாவதாக, சோதித்துப் பார்த்த பின்பு நலமாய் தோன்றுமென்றால் அதை உறுதியாய் பிடித்துக் கொள்ளுங்கள். ஆவியோடும் உண்மையோடும்  கர்த்தரைச் சேவிக்கிற நல்ல ஒரு ஆவிக்குரிய சபையைச் சோதித்து, தெரிந்தெடுத்தபின்பு அதில் உறுதியாய் நிலைத்திருங்கள். உண்மையுள்ளவைகளெவைகளோ,  ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ,  நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளை உறுதியாய் பிடித்துக் கொள்ளுங்கள். மூன்றாவதாக, பொல்லாங்காய் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள். ஒன்றிரண்டு காரியங்களை மாத்திரம் அல்ல, எல்லாவற்றையும் விட்டு விலகும் படிக்கு வசனம் ஆலோசனைக் கூறுகிறது.  தீய காரியங்கள் எங்கும் பெருகிக் காணப்படுகிறது. பொல்லாங்கன் ஜனங்களைப் பாவத்தைத் தண்ணீரைப் போல பருகும் படிக்குச் செய்கிறான்.  ஒழுக்கக்கேடுகள்  எங்கும் பெருகிக் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கர்த்தருடைய ஜனங்கள் பூமிக்கு உப்பாகவும், உலகத்திற்கு வெளிச்சமாகவும், சத்துருவின் கிரியைகளைத் தடைசெய்கிற பாத்திரங்களாகவும் காணப்படுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *