திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா. சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் இரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள். உன்னதப்பாட்டு 6:13.
மணவாளனாகிய இயேசுவுக்கும் மணவாட்டி சபைக்கும் உள்ள அன்பின் ஐக்கியத்தைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம் உன்னதப்பாட்டாய் காணப்படுகிறது. சூலமித்தியே திரும்பிவா என்பது மணவாட்டி சபையே என்னண்டை திரும்பி வா என்று கர்த்தர் அழைப்பதற்கு ஒப்பாகக் காணப்படுகிறது. கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளின் ஐக்கியத்தை விரும்புகிற தேவன். பகலின் குளிர்ச்சியான வேளைகளில், ஆதிப் பெற்றோராகிய ஆதாம் ஏவாளோடு ஐக்கியமாய் ஏதேனில் உலாவினவர். அவர்கள் பாவம் செய்து ஒளிந்துகொண்ட வேளையில், அந்தப் பிரிவைத் தாங்கக் கூடாமல், ஆதாமே எங்கேயிருக்கிறாய் என்று அங்கலாய்த்தார். நான் உங்கள் நடுவில் வாசம் பண்ணும்படி ஒரு கூடாரத்தை ஆயத்தப்படுத்தும்படியாக மோசேயிடம் கூறினவர். தேவனுடைய வாசஸ்தலம் மனுஷர்களின் நடுவில் காணப்படுகிறது என்றும் வேதம் கூறுகிறது.
நம்முடைய பாவங்களும், மீறுதல்களும் நம்மை தேவனிடத்திலிருந்து பிரிக்கிறது. இளைய குமாரன் தகப்பனோடு காணப்படுவதை விரும்பாமல், தன் ஆஸ்திகளின் பாகத்தை வாங்கிக்கொண்டு, தகப்பனை விட்டுத் தூரம் போனதுபோல, நாமும் ஆண்டவரை விட்டு தூரம் போய்விடுகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், அவரைவிட்டு நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம் (ஏசாயா 53:3-6) என்று எழுதப்பட்டிருக்கிறது. நம்மைத் தேவனுடைய அன்பைவிட்டுப் பிரிப்பதற்குச் சத்துரு விரித்த வலைகளிலும் மறைவான கண்ணிகளிலும் சிக்குண்டு ஆண்டவரைவிட்டு தூரம் போய்விட்டோம். எபேசு சபை, ஆதியில் தன் பேரில் கொண்டிருந்து அன்பை விட்டுவிட்டது என்று கர்த்தர் வேதனைப்பட்டார். எபேசு சபையின் ஜனங்கள் மாத்திரமல்ல, கடைசிக் கால சபையின் விசுவாசிகளும் ஆண்டவரை விட்டு சோரம் போன தூரம் போன வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிற நாட்கள் இவை. நட்சத்திரங்களாய் இலங்கிப் பிரகாசித்தவர்கள் கூட பாவங்களில் விழுந்து கர்த்தரை விட்டு தூரம் போய்விட்டார்கள்.
கர்த்தர் நம்மை அவரண்டை திரும்பும்படி அழைக்கிறார். இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய். வார்த்தைகளைக் கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி, தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம் (ஒசியா 14:1,2), என்று கூறி கர்த்தரண்டை திரும்பும் போது, நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களைவிட்டு நீங்கும் (ஒசியா 14:4) என்று கர்த்தர் வாக்களிக்கிறார். நாம் கர்த்தரிடத்தில் திரும்பும்போது அவர் நம்மைக் குணமாக்குவார்; அவர் நம்முடைய காயங்களைக் கட்டுவார் (ஓசியா 6:1). உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்பும்போது, அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவராய் உங்களுக்கு ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார். எலியாவின் நாட்களில் பலிபீடத்தின் மேல் அக்கினி இறங்கின வேளையில், ஜனங்கள் கர்த்தரே தெய்வம் என்று சொல்லி கர்த்தரண்டை திரும்பினது போல, கடைசி நாட்களில் கர்த்தருடைய ஜனம் முழுவதுமாய் கர்த்தரண்டைத் திரும்ப கர்த்தர் விரும்புகிறார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar