ஞானமுள்ள வெட்டுக்கிளிகள் (Wise Locusts)

நீதி 30:24-27 பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/nZrabqJ_gTw

வெட்டுக்கிளிகள் அழிவை கொண்டுவருகிற ஒரு உயிரினம் என்று யாத் 10:12-15 வசனங்கள் கூறுகிறது. அதுபோல சங் 105 :34,35 கூறுகிறது, அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து, அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது என்பதாக. இருந்தாலும், இந்த வெட்டுக்கிளிகள் மூலமாக நாம் ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆகூர் என்ற பக்தன் மூலமாக ஆவியானவர் கூறுகிறார்.

வெட்டுக்கிளிகளுக்கு ராஜா இல்லை அதாவது அவற்றை மேல்பார்வைரையிட ஒரு தலைவர் இல்லை. இன்றைக்கு வேலை ஸ்தலத்தில் உயர் அதிகாரி பார்ப்பார் என்ற அச்சத்திலேயே அநேகர் வேலைபார்ப்பார்கள். கர்த்தருடைய பிள்ளைகள், அதிகாரி கவனித்தாலும் கவனிக்க தவறினாலும் நேர்த்தியும் கிரமமுமாக வேலை செய்யவேண்டும்.

இந்த வெட்டுக்கிளிகளுக்கு ஒரு தலைவர் இல்லாவிட்டாலும், ஒற்றுமையாக இருந்தது. எங்கு சென்றாலும் பவுஞ்சு பவுஞ்சாய்ப் போகும், அதாவது, அணியணியாக ஒற்றுமையாக கடந்துசெல்லும். அவைகள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில்லை. அவைகள் ஒரு வயலைத் தாக்கும்போது, ​​ஒன்றாகச் செல்கிறது. இன்றைக்கு பல விசுவாசிகளைப் போல அவைகள் தங்களுக்குள் சண்டையிட்டு நேரத்தை வீணாக்குவதில்லை. அவைகள் முழு பயிரையும் சாப்பிட வேண்டும் பட்சிக்கவேண்டும் என்று அவைகளுக்கு தெரியும்; ஆகையால், அவைகள் ஒன்றாக இருக்கிறது. அவைகளின் பலம் ஒற்றுமையாக இருப்பதிலிருந்தே வருகிறது என்பதை ஞானமாய் அறிந்துகொண்டது. வெட்டுக்கிளிகளுக்கு ஒற்றுமையாக இருப்பதற்கான ஞானம் இருக்கிறது, ஆனால், பல விசுவாசிகளுக்கு இன்றைக்கு அப்படிப்பட்டதான ஞானம் இல்லை என்பது தான் உண்மை. சில கணவன் மனைவிகள் கூட ஒற்றுமையாக இருந்தால் அவர்கள் வலிமையானவர்கள் என்பதை புரிந்து கொள்வதில்லை. சாத்தானுக்கு எதிரான நமது பலம் ஒற்றுமையாக இருப்பதிலிருந்தே வருகிறது என்பதை விசுவாசிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். அதுதான் தேவன் நமக்காக வைத்திருக்கும் ஞானத்தின் மூன்றாவது பாடம், அதை வெட்டுக்கிளிகளிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். எறும்பு, குழிமுசல் மற்றும் வெட்டுக்கிளிகள், ஆகிய மூன்று விலங்குகளும் அணிவகுத்துச் செல்கின்றன. போர் விமானங்களை கவனித்து பார்த்தீர்களா? அவைகள் அணிவகுத்து தங்கள் நிலையில் சரியாக பறக்கும். அதுபோல, ஒரு சபையிலுள்ள ஒவ்வொரு விசுவாசியும் தங்கள் ஊழியத்தை அறிந்து, பொறாமை மற்றும் போட்டி இல்லாமல், மற்ற அனைவருடனும் ஒற்றுமையுடன் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது எத்தனை ஞானமுள்ள செயல் என்பதை அறிந்துகொள்ளுங்கள். வெட்டுக்கிளிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய ஞானம் அதுதான். சபையில் நீங்கள் பல ஊழியம் செய்தாலும், யார் மேலும் கசப்பும் வெறுப்பும் இல்லாமல் ஒற்றுமையோடு ஞானத்தோடு செயல்படுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *