யோசுவா 6 : 27. இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.
யோசுவாவின் புஸ்தகத்தில், தேசத்தை சுதந்திரிப்பதை குறித்து அதிகமாக வாசிக்க முடியும்; மற்றும் ஒரு வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வதை பற்றி அதிகமாக படித்து தெரிந்துகொள்ளலாம்.
மோசே மரித்தபிறகு இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும்படியாக யோசுவாவை கர்த்தர் முன்குறித்தார். இதுவரைக்கும் யோசுவாவை குறித்து அதிகமாக கேள்விப்படாத ஜனங்கள், நாடுகள் அவனை குறித்து கேள்விப்படும்படியாக நேர்ந்தது. காரணம் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார். விசுவாசத்தினால் நடந்தவர் யோசுவா; மற்றும் யோசுவா தைரியம், கீழ்ப்படிதல், விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்ந்தவர்; யோசுவா சிறுபான்மையினராக இருக்கத் துணியவில்லை. சிறுபான்மையினராக இருக்க விரும்பும் ஆண்கள் தற்போது மிகக் குறைவு; அவர்கள் எப்போதும் பெரும்பான்மையில் இருக்க விரும்புகிறார்கள்; பல நாடுகள் சேர்ந்து வந்து இஸ்ரவேலுக்கு எதிராக படையெடுத்துவந்த போதிலும், யோசுவா கர்த்தரை மாத்திரம் சார்ந்திருந்தான். யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் எல்லா பட்டணங்களையும் யுத்தம் பண்ணி பிடித்தார்கள் (யோசுவா 11 : 19 ) என்று பார்க்கிறோம்.
கர்த்தர் முதலாவது யோசுவாகூட இருக்கிறார் என்பதை இஸ்ரவேல் ஜனங்களுக்கு காண்பித்தார். யோசுவா 3 :7ல் . கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன் என்று சொன்னவர் யோசுவா 4 : 14ல் அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார் என்று வாசிக்க முடியும். பின்பு யோசுவாவை கொண்டு கர்த்தர் எரிகோ பட்டணம், ஆயி பட்டணம் மற்றும் இன்னும் பல தேசங்களை இஸ்ரவேல் ஜனங்கள் சுதந்தரிக்கும்படி செய்தார். யோசுவாவின் கீர்த்தி தேசமெங்கும் பறம்பியது. காரணம் அவனுக்குள் இருந்த தைரியம், கீழ்ப்படிதல் மற்றும் கர்த்தர் மேல் கொண்ட விசுவாசம். நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால் கர்த்தருக்கு கீழ்ப்படிதல். கர்த்தர், “அதைச் செய்” என்று சொன்னார், யோசுவா அதைச் செய்தார்; அவர் வெற்றி பெற்றார். யோசுவாவின் பெயர் கீர்த்திபெற்றது.
மறுபக்கம், கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக்குறித்து சொல்லும்போது இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். காரணம் கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுக்காமல் இருந்ததில் விளைவு தான். இதினிமித்தம் கர்த்தர் யோயாக்கீம் ராஜாவின் கீர்த்தியை அற்று போகும்படி செய்தார் என்று எரேமியா 22ம் அதிகாரத்தில் வாசிக்க முடியும்.
யோயாக்கீமைபோல அல்ல யோசுவாவை போல கீழ்ப்படிந்திருங்கள், உங்களுடைய பெயரை கீர்த்தியடையும்படி செய்வார்.
இயேசு கலிலேயா கடற்கரையில் ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார் (மத்தேயு 4 : 23 ). அதனிமித்தம் இயேசுவின் கீர்த்தி சீரிய தேசம் எங்கும் பரவியது. மாத்திரமல்ல இயேசுவால் அற்புதத்தை பெற்றுக்கொண்டவர்கள் அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப் பிரசித்தம்பண்ணினார்கள் (மத்தேயு 9 : 31 ). மாத்திரமல்ல, அக்காலத்தில் வாழ்ந்த காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியை குறித்து கேள்விப்பட்டான் என்று மத்தேயு 14 : 1ல் வாசிக்கமுடிகிறது.
நீங்களும் யேசுகிறிஸ்துவை குறித்து பிரசங்கிக்கும் போது, அவருடைய நாமத்தினால் வியாதிகளையும், நோய்களையும் நீக்கும்போது, உங்களுடைய பெயர்களையும் கீர்த்தியடையும்படியாக நாம் ஆராதிக்கிற தேவன் செய்வார் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை. தேசத்தின் தலைவர்களும் உங்களை குறித்து அறியும்படியாக செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் பெயரை கீர்த்தியடையும்படி செய்வாராக!. ஆமென்.
Robert Jegadheesh
Word of God Church
Doha – Qatar
www.wogim.org