கைகளை உயர்த்துங்கள்(Lift up your hands).

யோசுவா 8 : 26. ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Uh2EVyPBgL4

கைகளை உயர்த்தி ஜெபிப்பதின் வல்லமையை கிருஸ்துவர்களாகிய நாம் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கரங்களை தட்டி துதிக்கலாம், முழங்கால் படியிட்டு ஜெபிக்கலாம், நடந்து ஜெபிக்கலாம், அமர்ந்தவாறு ஜெபிக்கலாம் அதுபோல கரங்களை உயர்த்தி ஜெபிப்பது மிகவும் முக்கியம், அவசியமான ஒன்றும் கூட.

யோசுவா ஆயி பட்டணத்தை பிடித்து தீருமட்டும் நீட்டின தன்னுடைய  கையை மடக்கவில்லை. இதன் ரகசியத்தை கர்த்தர் மோசே மூலமாக ஏற்கனவே யோசுவாவுக்கு கற்பித்துக்கொடுத்திருந்தார் . அமலேக்கியர்களை முறியடிக்கும்படி மோசே, யோசுவாவை யுத்த களத்தில் நிறுத்தினான். மோசேயும், ஆரோனும், ஊரும் மலையின் மேல் ஏறி கரங்களை உயர்த்தி ஜெபித்தார்கள். மோசேயின் கரங்கள் எப்பொழுதெல்லாம் கீழே இறங்குகிறதோ, அப்பொழுது அமெலேக்கியர்கள் இஸ்ரவேல் ஜனங்களை மேற்கொண்டார்கள். எப்பொழுதெல்லாம் மோசேயின் கரங்கள் உயர்த்திருந்ததோ, அப்பொழுதெல்லாம் இஸ்ரவேல் ஜனங்கள் அமெலக்கியர்களை மேற்கொண்டார்கள். முடிவில் அமெலேக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். இந்த காரியத்தை ஒரு புஸ்தகத்தில் எழுதி யோசுவாவின் காது கேட்க வாசி என்று கர்த்தர் மோசேக்கு சொன்னார். யோசுவா ஒரு வேலை அப்பொழுது நினைத்திருக்கக்கூடும், ஏன் கர்த்தர் இந்த சம்பவத்தை என் காது கேட்க வாசிக்க சொன்னார் என்று. இந்த சம்பவத்தை நாம் யாத்திராகமம் 17ம் அதிகாரத்தை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். யோசுவா ஆயி பட்டணத்தை பிடிக்கும் போது மோசே மூலமாக கர்த்தர் கற்பித்துக்கொடுத்த அதே மாதிரியை யோசுவா பின்பற்றுவதை யோசுவா 8ம் அதிகாரத்தை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். யோசுவா தன் கையை நீட்டியவாறு இருந்தான். அதனால் எப்படி மோசே அமெலேக்கியர்களை முறியடித்தானோ, அதே போல யோசுவாவும் ஆயி பட்டணத்து ஜனங்களை முறியடித்தான்.

ஒரு தேவமனிதர் கரங்களை உயர்த்தி ஜெபிப்பதின் ரகசியத்தை அறிந்துகொண்ட பின்பு, அப்படி ஜெபிக்க முயற்சியை மேற்கொண்டார். ஒரு நாள் காலையில், நான்கு மணிநேரம் கரங்களை உயர்த்தி ஜெபிக்கவேண்டுமென்று தீர்மானம் பண்ணினார். ஜெபம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில் அவர் கை வலியினால் தளர்ந்து போனது. இருந்தாலும் விடாமல் தன்னுடைய இருதயத்தை கர்த்தருக்கு நேராக திருப்பி இடைவிடாமல் கரங்களை உயர்த்தி ஜெபித்துக்கொண்டே இருந்தார். கர்த்தருடைய பிரசன்னம் அளவில்லாமல் அந்த இடத்தை மூடியதை அந்த தேவ மனிதர் உணர்ந்தார். கர்த்தர் அவரைக்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களை, தரிசனங்களை வெளிப்படுத்தினார். அந்த நாளில் தான் ஊழியத்தின் முக்கியமான காரியங்களை கர்த்தரிடம் பெற்றுக்கொண்டார். ஜெபம் முடிந்தவுடன் அவர் சொன்னார், ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது, ஆனால் நான்கு மணிநேரம் எப்படி போனது என்றே தெரியாதவண்ணம் கர்த்தர் தேவபிரசன்னதினால் நிரப்பினார்.

நீங்கள் கரங்களை உயர்த்தி ஜெபிக்கும் போது, கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள். நீங்கள் ஜெயத்தை பெற்றுக்கொள்வீர்கள். தேசத்தை சுதந்தரித்துக்கொள்வீர்கள். ஏதோ ஒரு காரியத்தில் தோல்வி, கவலை, மீளமுடியாத கடன் சுமை, தாங்கிக்கொள்ளமுடியாத பாரம் என்ற சூழ்நிலையில் இருப்பீர்களென்றால், இன்று முதல் கரங்களை உயர்த்தி ஜெபித்துப்பாருங்கள். காரியம் ஜெயமாய் முடிவதை பார்ப்பீர்கள். ஆரம்பத்தில் ஒருவேளை கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம் அல்லது கரங்கள் வலிக்கலாம்; இருந்தாலும் விடாமல் முயற்சிசெய்யுங்கள். வெற்றியுள்ள வாழ்க்கை வாழ, ஜெயமுள்ள ஜீவியம் செய்ய, எதிரிகளை ( சத்துருக்களை ) வீழ்த்த, கரங்களை உயர்த்தி ஜெபம் செய்யுங்கள்.

அப்போஸ்த்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போதும் கூட 1 தீமோத்தேயு 2 : 8ல் . அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன் என்று சொல்வதை பார்க்கலாம்.

புலம்பல் 2 : 19. எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.

கரங்களை கர்த்தருக்கு நேராக உயர்த்துங்கள்; ஜெயத்தை கர்த்தர் தருவார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *