தாழ்மை Vs உயர்வு.

யாக்கோபு 4:10 கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

அனைவரும் ஆசிப்பது அவர்களுடைய வாழ்க்கையில் உயர்வு வேண்டுமென்று. அதில் ஒரு தவறுமில்லை. ஆனால் கர்த்தர் உங்களை உயர்த்தவேண்டுமென்றால் ஒரு கட்டளையை நாம் அனைவரும் பின்பற்றவேண்டுமென்று அவர் விரும்புகிறார். அதுவென்னவென்றால் நாம் நம்மை தாழ்த்துவது; தாழ்மைப்படுவது; தாழ்மையான சிந்தையை தரித்துக்கொள்வது.

அநேகர் நினைத்துக்கொள்வது தாழ்மை என்றால் ஏதோ கந்தல் ஆடை அணிந்துகொள்வது இல்லையென்றால் முகத்தை சோர்வாக வைத்துக்கொள்வது இல்லையென்றால் நம்முடைய அரசியல் தலைவர்களை போல மற்றவர்களின் கால்களில் சுயத்திற்காக விழுவது என்று.

தாழ்மைக்கு மிக சிறந்த உதாரணம் நம்முடைய கர்த்தராகிய யேசுகிறிஸ்து. அவர் கர்த்தாதி கர்த்தராய் இருந்தும், அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (பிலிப்பியர் 2:8 ). இயேசு நமக்கு ஒரு மாதிரியாக எப்படி தாழ்மையின் சிந்தையை தரித்துக்கொள்ளவேண்டும் என்று வாழ்ந்து காண்பித்திருக்கிறார். ஆனால் கிருஸ்த்தவர்களாகிய நாம் அநேக காரியங்களில் மேட்டிமையுள்ளவர்களாக, தற்புகழ்ச்சியை நாடுகிறவர்களாக, தங்களை தாங்களே சுயத்திற்காக விளம்பரப்படுத்திக்கொள்கிறவர்களாக, பெருமையுள்ளவர்களாக இருப்பது கர்த்தருடைய சாபத்தை வருவித்துக்கொள்ளும். ஏனென்றால் I பேதுரு 5:5ல் வசனம் சொல்கிறது அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் என்று வாசிக்கமுடிகிறது. வீணான புகழ்ச்சி உங்களை அழிவுக்கு நேராக அழைத்துச்செல்லும், வீணான பெருமை கர்த்தர் உங்களை எதிர்க்கக்கூடிய சூழ்நிலைக்கு கொண்டுசெல்லும். சற்று சிந்தித்து பாருங்கள் அண்ட சராசரங்களையும் படைத்தவர் உங்களுக்கு எதிர்த்து நின்றால் சூழ்நிலை எப்படி இருக்குமென்று. மத்தேயு 11:29ல் நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று இயேசு சொல்லியும் கற்றும் கொடுத்திருக்கிறாரே.

மோசே ஒருபோதும் என்னுடைய சுயத்தினால் இருபதுலட்ச ஜனங்களை வழிநடத்தினேன் என்று சொல்லவில்லை; யோசேப்பு என்னுடைய திறமையினால் பார்வோனுக்கு அடுத்த பதவியில் வந்தேன் என்று சொல்லவில்லை; தானியேல் என்னுடைய நேர்மையால் நான் உயர்த்தேன் என்று சொல்லவில்லை; தாவீது என்னுடைய அரசியல் பெலத்தால் சமஸ்த இஸ்ரவேலுக்கு ராஜாவானேன் என்று சொல்லவில்லை; யோசுவா என்னுடைய ராணுவ யுக்தியால் நான் தேசத்தை சுதந்தரித்தேன் என்று சொல்லவில்லை; யோபு என்னுடைய இரண்டு மடங்கு ஆசீர்வாதம் என்னால் வந்தது என்று சொல்லவில்லை; இப்படி அநேக பரிசுத்தவான்களை பட்டியலிடலாம். எல்லாரும் ஆண்டவருக்கு முன்பாக தாழ்த்தினார்கள், கீழ்ப்படிந்தார்கள், அவரை சார்த்திருந்தார்கள். அதனால் தான் கர்த்தர் அவர்களை உயர்த்தினார். உங்களையும் உயர்த்துவார்.

ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள். ( ரோமர் 12:16 ). ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள் (பிலிப்பியர் 2:3 ).

தாழ்மை உங்களை மேன்மைப்படுத்தும். அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமென்று சொன்ன வார்த்தையின் படி இயேசு பெறுக உங்களை தாழ்த்துங்கள். உயர்வை கர்த்தர் உங்களுக்கு கட்டளையிடுவார்.

கர்த்தர் தாமே உங்களை உயர்த்துவராக. ஆமென்!.

Bro. Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *