இயேசுவின் நேசக்கொடி (Jesus’ Banner of Love).

என்னை விருந்து சாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார் என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே (உன். 2:4).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ec9VJUfUCzw

மோசே இஸ்ரவேல் ஜனங்களை நாற்பது ஆண்டுகள்  வனாந்தரத்தில் நடத்திக் கொண்டு வந்தான். அந்தப் பிரயாணத்தின் முடிவில் அவன் கற்ற ஒரு மேலான பாடம், தேவன் மெய்யாகவே   ஜனங்களைச் சினேகிக்கிறார் என்பதாகும்(உபா. 33:3).  உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரத்தில் மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் இடையே நடக்கிற உரையாடலைக் குறித்து  எழுதப்பட்டிருக்கிறது. மணவாட்டி, நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின்  லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன் என்கிறாள். மணவாளன்,  முள்ளுகளுக்குள்ளே  லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள் என்கிறார். பின்பு மணவாட்டி, காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார், அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது. என்னை விருந்து சாலைக்கு  அழைத்துக்கொண்டுபோனார், என்மேல்   அவருடைய நேசக் கொடி பறக்கிறது என்கிறாள். மணவாளனுடைய நேசத்தின் மேன்மையை மணவாட்டி புரிந்து கொள்ளுகிறாள்.

ஆண்டவருடைய சுபாவங்களில் ஒன்று அவர் அன்புள்ளவர். அவர் நம்மேல் வைத்த அன்பு ஒருநாளும் மாறாது, அவர் அன்பாகவே இருக்கிறார். பிதாவின் அன்பு அவருடைய ஒரே பேரான குமாரனை நமக்காய் தந்தருளினதில் வெளிப்பட்டது. இயேசுவின் அன்பு நாம் பாவிகளாயிருக்கையில், முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்து,   கல்வாரிச் சிலுவையில் ஜீவனைக் கொடுத்ததில் வெளிப்பட்டது. பரிசுத்த ஆவியாகிய தேவனாலே அந்த அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, ஒரு புதிய மாதத்திற்குள் பிரவேசித்திருக்கிற உங்கள் ஒவ்வொருவரையும் ஆண்டவருடைய அன்பு   பாதுகாத்து, பராமரித்து, நடத்தும். உங்களை நேசிக்கிறவர் உங்கள் தேவைகளையெல்லாம் சந்திப்பார். அவருடைய நேசக்கொடி உங்கள் மேல் பறக்கும் போது, நீங்கள்  இயேசுவினுடையவர்கள்  என்பதை உலகத்தின் ஜனங்கள் காண்பார்கள். நீங்கள் கொடிகள் பறக்கும் படையின் (உன். 6:4) அங்கத்தினர்களாய் காணப்படும் போது சத்துரு உங்களை ஒருநாளும் மேற்கொள்ள முடியாது. நீங்கள் அவருடைய  அன்பிற்குப் பாத்திரவான்களாய் மட்டும் காணப்படுங்கள்.  எபேசு சபையின் விசுவாசிகளைப் போல, ஆண்டவர் மேல் கொண்ட அன்பை விட்டுவிடாதிருங்கள்.

கர்த்தருக்கு பயந்து நடக்கிறவர்களுக்கு,  சத்தியத்தினிமித்தம்  ஏற்றும்படியாக,   ஒரு கொடியை அவர்களுக்குக் கொடுத்தார் என்று சங். 60:4 கூறுகிறது. நீங்கள் கர்த்தருக்கு பயந்து, அவருடைய சத்திய வசனத்திற்கு நடுநடுங்கி ஜீவிக்கும் போது, நீங்கள் எல்லா இடங்களிலும் வெற்றிக் கொடியை நாட்டுவீர்கள். உங்கள் தோல்விக்குரிய காரியங்கள் மேல் இயேசுவின் கொடியை ஏற்றும் போது, அது ஜெயமாக மாறும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *