யாக் 1:19. ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/wXJdt1lbqR8
கோபத்திற்கு ஆங்கிலத்தில் Anger என்று சொல்லுகிறோம். Angerக்கும் Dangerக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம் என்றார் ஒரு ஊழியக்காரர். உண்மையில் கோபம் நம்மை பெரிய ஆபத்திற்கு நேராக அழைத்துசெல்லுகிறது. பிர 7:9 கூறுகிறது, உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும். நாகமானுக்கு இருந்த கவுரவ பிரச்சனை தான் அவனை கோபம் கொள்ளும்படி செய்தது. நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப் போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன் என்று 2 இராஜா 5:11 கூறுகிறது. உங்களுக்கிருக்கும் கோபம் என்னும் சுபாவம் நீங்க, முதலாவது உங்களுக்குள்ளிருக்கும் கவுரவம் பெருமை போன்றவற்றிலிருந்து வெளியே வரவேண்டும்.
கோபம் வருவதற்கான மற்றொரு காரணம், பொறாமை என்னும் குணாதிசயம் நமக்குள் இருப்பதால் தான் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். காயீனுக்கு ஆபேல் மேல் வந்த பொறாமை தான் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது. சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று சொன்னமாத்திரத்தில், சவுல் தாவீதின் மீது பொறாமை கொண்டான். அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்.
மோசே கோபப்பட்டதினிமித்தம் தான் கானானுக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை அவன் இழந்தான். உசியா கோபப்பட்டதால் தான் அவனுக்கு குஷ்டம் பிடித்தது. ஆகையால் கோபம் கொள்ளும் சுபாவம் பெரிய இழப்புகளை கொண்டுவரும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
ஒருவேளை கோபப்பட்டுவிட்டால்,அதை வெகுநேரம் உங்கள் இருதயத்தில் வைத்திராதேயுங்கள். நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது என்று எபே 4:26 கூறுகிறது. தேவனுடைய நீதியான கோபம் கூட தற்காலிகமானது தான் என்பது தெரியுமா? அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு என்று சங் 30:5 கூறுகிறது. நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே என்று கர்த்தர் ஏசா 57:16ல் கூறுகிறார். ஆண்டவருடைய கோபமே தற்காலிகமானது என்றால், நாம் ஏன் மற்றவர்களோடு எப்பொழுதுபார்த்தாலும் கோபப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். கோபம் ஆவிக்குரிய வாழ்வில் வீழ்ச்சியை கொண்டுவரும் என்பதை அறிந்து உங்கள் வாழ்க்கையில் கோபத்திற்கு இடம் கொடாமல் இருங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

