இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார், நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை (எரே. 4:1).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/noeykQ3ZX4I
எரேமியா தீர்க்கதரிசி யூதாவின் கடைசி ஐந்து ராஜாக்களின் காலத்தில் தீர்க்கதரிசனம் சொன்னவன். யோசியா ராஜா முதல் சிதேக்கியா ஆட்சி செய்த நாட்கள் வரைக்கும் தீர்க்கதரிசனம் சொன்னான். எரேமியா தீர்க்கதரிசி, யோசியா ராஜாவின் மூலம் யூதா தேசத்தில் வந்த எழுப்புதலையும், அதன்பின்பு தோன்றின நான்கு ராஜாக்களின் நாட்களில் வந்த ஆவிக்குரிய வீழ்ச்சியையும் கண்டவன். ஆகையால், யூதாவின் குடிகளைப் பார்த்து, நீங்கள் ஆண்டவரண்டை திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் திரும்புங்கள் என்று கூறினான், அவ்வாறு நீங்கள் செய்தால், இனி அலைந்து திரிவதில்லை என்ற கர்த்தருடைய வார்த்தையைக் கூறினான். யூதாவின் குடிகள் மனம் திரும்ப மனதில்லாமல் காணப்பட்டதினால், அவர்கள் பாபிலோனிலும், மேதிய பெர்சிய சாம்ராஜ்யங்களிலும் பின்னாட்களில் அடிமைகளாய் அலைந்து திரிந்தார்கள்.
ஆண்டவர் யாரும் மனம்திரும்ப வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதில்லை, அவர் மென்மையானவர். இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான் என்று வெளி. 3:20ல் கூறினார். தட்டும் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறக்கிறவர்களுடைய வாழ்க்கையில் பிரவேசித்து அவர்களுக்குள் வாசம் பண்ணுவார். சூலமித்தி தட்டும் நேசருடைய சத்தத்தைக் கேட்டும் கதவைத் திறப்பதற்கு மனதில்லாமல் போனதால் அவர் கடந்து சென்றுவிட்டார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவருடைய வார்த்தை வெளிப்படும் போது, மனம் திரும்ப வேண்டிய காரியங்களில் மனம் திரும்பி விடுங்கள், கீழ்ப்படிய வேண்டிய காரியங்களில் கீழ்ப்படிந்து விடுங்கள், கைவிட வேண்டிய பாவப்பழக்கங்களைக் கைவிட்டுவிடுங்கள். நீங்கள் மனம்திரும்பும் பட்சத்தில் அது உங்களுக்கு நன்மையாய் முடியும். அப்போது நீங்கள் இனி அலைந்து திரிவதில்லை. பிசாசு வறண்ட நிலங்களில் அலைந்து திரிகிறவன் என்றும், பூமியெங்கும் உலாவி அதில் சுற்றித்திரிகிறவன் என்றும் அவனைக் குறித்து வேதம் கூறுகிறது. சிலர் பிசாசின் சுபாவம் உடையவர்களாய் சபைகள் தோறும் அலைந்து திரிவார்கள், வீடுகள் தோறும் அலைந்து திரிவார்கள். சிலர் இரவு வேளை என்றும் பாராமல் தெருக்களில் அலைந்து திரிவார்கள். ஆண்டவர் எருசலேமின் குடிகளைப் பார்த்து நீங்கள் தாறுமாறாய் ஓடுகிற பெண்ணொட்டகம் என்றும் காட்டுக்கழுதை என்றும் கடிந்து கொண்டார். நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்கு மெய்யாய் செவிகொடுக்கும் போது கர்த்தர் உங்களை ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, பாதுகாப்பார். ஆண்டவர் ஒருபோதும் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. நீங்கள் மனம் திரும்ப வேண்டிய காரியங்கள் என்ன என்பது உங்களுக்கும் ஆண்டவருக்கும் தெரியும். நீங்கள் மனம்திரும்ப மனதாயிருந்தால் மனம்திரும்புங்கள். அவ்வாறு நீங்கள் செய்யும் போது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

