அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடவுங்கள் (Walk worthy of your calling)

ஆதலால், கர்த்தர் நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, (எபே. 4:1)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/h54bpwPtHS8

அப்போஸ்தலனாகிய பவுல் ரோம சிறைச்சாலையிலிருந்து எபேசு சபை விசுவாசிகளுக்கு நிருபத்தை எழுதும் போது, உங்கள் அழைப்பிற்குப்  பாத்திரவான்களாய் நடந்துகொள்ளுங்கள் என்ற ஆலோசனையைக் கூறினார். கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் உங்கள் அழைப்பின் மேன்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். ஆபிரகாம் மெசொப்பொத்தாமியா  நாட்டில் காணப்பட்ட வேளையில் மகிமையின் தேவன் அவனுக்குத்  தரிசனமாகி நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்கு வா என்று அழைத்தார். ஆபிரகாம் அந்த அழைப்பிற்குப் பாத்திரவானாய் தன்னுடைய வாழ்நாட்கள் முழுவதும் வாழ்ந்தான். பவுல் தன்னை கர்த்தர் அழைத்த அழைப்பைக் குறித்துக் கூறும் போது அதைப் பரம அழைப்பு என்பதாகக் கூறினார். அந்த அழைப்பின்  பந்தயப்பொருளைப்  பெற்றுக்கொள்வதற்காக ஆசையாய் இலக்கை நோக்கி அனுதினமும்  தொடருகிறவனாய் அவன் காணப்பட்டான். அவர்களைப் போலத் தேவன் நம்மையும் பரிசுத்த அழைப்பினால் அழைத்து,   பரம அழைப்பிற்குப் பங்குள்ளவராக மாற்றியிருக்கிறார். பேதுரு அப்போஸ்தலன்,  சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள் என்றதைப் போல உங்கள் அழைப்பைக் குறித்து ஜாக்கிரதையுடையவர்களாய் காணப்படுங்கள். தேவனுடைய கிருபை வரங்களும், உங்களை அழைத்த அழைப்பும் மாறாதவையாய்  காணப்படுகிறது. ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகளாய் காணப்படுகிற நீங்கள் அந்த மேன்மையான அழைப்பிற்குப்  பாத்திரவான்களாய் வாழ உங்களை அர்ப்பணியுங்கள்.

நாம் தேவனால் வேறுபிரிக்கப்பட்டு, அழைக்கப்பட்ட ஜனங்கள் என்பதை நம்முடைய நடக்கையில், அதாவது அனுதின ஜீவியத்தில் வெளிப்படுத்துகிறவர்களாய்   காணப்பட வேண்டும். ஆண்டவர்  முன்குறித்தவர்ளை மாத்திரம்   அழைத்திருக்கிறார் என்று ரோமர் 8:30 கூறுகிறது. ஆகையால் உலக தோற்றத்திற்கு முன்பாகவே தேவன் உங்களை கிறிஸ்துவில் முன்குறித்து, ஊரில் ஒருவனாய் வம்சத்தில் இரண்டு பேராய் அழைத்திருக்கிறார் என்பதை அறிந்து நன்றியுள்ள இருதயத்தோடு அவருக்காக வாழுங்கள். கோடிக்கணக்கான ஜனங்கள் பூமியில் காணப்பட்டிருந்தும் ஜீவனுள்ள மெய் தேவனை அறியும் படிக்கு நம்முடைய கண்களைத் திறந்து, அவருடைய பிள்ளைகள் என்ற சிலாக்கியத்தைக் கொடுத்திருக்கிறார் என்ற உணர்வோடு நன்றியுள்ளவர்களாய் காணப்படுங்கள். 

இந்நாட்களில் அனேகக் கிறிஸ்தவர்கள் ஆண்டவர் அழைத்த அழைப்பின் மேன்மையை மறந்து, உலகத்து ஜனங்களைப் போல வாழ்கிறார்கள்.  ஆண்டரை அறிந்த ஜனங்களுக்கும் உலக ஜனங்களுக்கும் இடையே வித்தியாசத்தை இந்நாட்களில் பார்க்கமுடியவில்லை. ஆண்டவர் அழைத்த அழைப்பிற்குப் பாத்திரவான்களாய் ஜீவிக்கிறவர்களுடைய வாழ்க்கையில் மிகுந்த மனத்தாழ்மையும், சாந்தமும், நீடிய பொறுமையும்,   அன்பும்,  சமாதானமும் காணப்படும் என்று எபே. 4:2,3 கூறுகிறது. இவைகள் எல்லாம் இயேசுவில் காணப்பட்ட சுபாவங்களாய் காணப்படுகிறது. ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகளாய் காணப்படுகிற நாமும் இயேசுவின் சிந்தையைத் தரித்தவர்களாய் காணப்படும் போது, அவர் அழைத்த உன்னத அழைப்பிற்குப் பாத்திரவான்களாய் காணப்பட முடியும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *