எபேசியர் 3 : 2 அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Ut2VAWHU4Ug
அப்போஸ்த்தலனாகிய பவுல் எபேசு சபைக்கு எழுதும்போது கர்த்தர் அவனுக்கு ரகசியத்தை வெளிப்படுத்தினார் என்று சொல்வதை பார்க்கலாம். இந்த அதிகாரத்தில் கிட்டத்தட்ட நான்கு முறை ரகசியம் என்ற வார்த்தை வருவதை பார்க்கலாம். உடன் சுதந்திரர், ஒரே சரீரத்திற்குள்ளானவர்கள், உடன் பங்காளி என்பதை குறித்த ரகசியத்தை அதாவது இதுவரைக்கும் கேட்டிராத காரியங்களை கர்த்தர் பவுலுக்கு வெளிப்படுத்தினார்.
பொதுவாக ரகசியம் என்பது நாம் எல்லாரிடமும் சொல்வதில்லை. எல்லாரிடமும் சொல்லுகிற காரியமென்றால் அது ரகசியம் இல்லை; மாறாக அது ஒரு செய்தியாக இருக்கும். நாம் நம்முடைய ரகசியங்களை நமக்கு நெருக்கமானவர்களிடம் மாத்திரம் தான் பகிர்ந்துகொள்ளுவோம். நம்பகத்தன்மையுள்ள அல்லது மனதிற்கு பிடிக்கிற நபர்களிடம் மாத்திரமே ரகசியத்தை சொல்லுவோம். அதுபோல தான் கர்த்தராகிய யேசுகிறிஸ்து அவரோடு நெருக்குமாய் ஜீவிப்பவர்களுக்கு ரகசியத்தை வெளிப்படுத்துகிறவராய் இருக்கிறார்.
ஆண்டவர் ஆபிரகாமை சந்தித்து அவனுக்கு குறித்த காலத்தில் ஆண் பிள்ளை பிறக்கும் என்ற காரியத்தை வெளிப்படுத்தி, ஆதியாகமம் 18 : 18ல் “நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?” என்று உரிமையோடு சொல்லுகிறதை பார்க்கிறோம். அதாவது அபிராகாமிடம் சொல்லாமல் அவர் எதையும் செய்வதில்லை; அப்படியாக எல்லா ரகசியங்களையும் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தினார்.
எகிப்து ராஜாவுக்கு பாணபத்திரக்காரனும் சுயம்பாகியும் ஒரே ராத்திரியில் சொப்பனத்தை கண்டபோது, அந்த சொப்பனத்திற்கான அர்த்தத்தை / ரகசியத்தை கர்த்தர் யோசேப்புக்கு மாத்திரம் வெளிப்படுத்தினார். அதுபோல இரண்டு வருஷங்கள் கழிந்து பார்வோனும் ஒரு சொப்பனத்தை கண்டான். அந்த சொப்பனத்திற்கான அர்த்தத்தை எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளும், சாஸ்திரிகளும் சொல்லமுடியவில்லை. ஆனால் அதன் ரகசியத்தை கர்த்தர் அவருக்கு பிரியமான யோசேப்புக்கு மாத்திரம் வெளிப்படுத்தினார்.
நேபுகாத்நேச்சார் ஒரு ராத்திரியிலே சொப்பனம் கண்டார். அதின் அர்த்தத்தை சொல்லும்படி சாஸ்திரிகளை, ஜோசியரையும், சூனியக்காரரையும், கல்தெயரையும் அழைத்து அவர்களுக்கு கட்டளையிட்டான். அவர்களால் அதின் ரகசியத்தை அறிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால் கர்த்தர் அவருக்கு நெருக்கமான தானியேலுக்கு ரகசியத்தை வெளிப்படுத்தினார்.
சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டிவைகளை குறித்தும், நியாயத்தீர்ப்பை குறித்தும், உலகத்தின் முடிவை குறித்தும், சாத்தானின் தோல்வியை குறித்தும், ஆண்டவருடைய வருகையை குறித்ததுமான ரகசியத்தை கர்த்தர் அவருக்கு பிரியமான யோவானுக்கு வெளிப்படுத்தினார் என்பதை குறித்து வெளிப்படுத்தின விசேஷம் முழுவதுமாக படிக்கும்போது அறிந்துகொள்ளுகிறோம்.
இப்படியாக அநேக பரிசுத்தவான்களுக்கும், அப்போஸ்தலர்களுக்கும், ஊழியக்காரர்களுக்கும், மற்றும் தீர்க்கதிரிசிகளுக்கும் அவர் அவ்வப்போது ரகசியங்களை வெளிப்படுத்திக்கொண்டு வருகிறார். நீங்களும் அவருக்கு பிரியமாக, நெருக்கமாக, கீழ்ப்படிந்து இருக்கும்போது உன்னதங்களுக்குரிய மறைவான பொக்கிஷங்களை கர்த்தர் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
வெளி 10:6 இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்.
அவருடைய ரகசியத்தை அறிந்துகொள்ள ஆவலாயிருங்கள். கர்த்தர் உங்களை கொண்டு பெரிய காரியங்களை செய்வார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org