உங்கள் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே நீங்கள் இருக்கிறீர்கள் (As a man thinks in his heart, so is he)

அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான், புசியும், பானம் பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது (நீதி. 23:7).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/t3_hRmhSbBY

வேதத்தில் காணப்படுகிற வசனங்களில் தவறாய் பயன்படுத்தப்படுகிற வசனங்களில் இதுவும் ஒன்றாய் காணப்படுகிறது. மேலோட்டமாக வாசிக்கும் போது, நம்முடைய  இருதயத்தின் நினைவுகள்  எப்படிப்பட்டதாய் காணப்படுகிறதோ அப்படியே வெளிப்புறமான  நம்முடைய சுபாவங்களும், வாழ்க்கையும் காணப்படும் என்பதாகும். இந்நாட்களில்  நேர்மறை எண்ணங்களையும்(Postive thinking), சிந்தனைகளையும் குறித்து அதிகமாய் பேசப்படுகிறது. விசுவாசமும், நேர்மறையான  எண்ணங்களும்  வெவ்வேறானவை. விசுவாசம் என்பது தேவசித்தத்தற்கு  நம்மைப் பூரணமாய் விட்டுக்கொடுத்து அவருடைய திட்டத்திற்கு  நம்மை முழுவதுமாய் அர்ப்பணிப்பதாகும். ஆனால் நேர்மறையான எண்ணம் என்பது நம்மைப் பற்றியதும், நாம் அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசுவதினால் நமக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பற்றியதுமாகும். சுருக்கமாய் கூறும் போது விசுவாசம் என்பது தேவனைப்பற்றியதும், நேர்மறையான எண்ணம் என்பது நம்மைப் பற்றியதாகவும் காணப்படுகிறது. விசுவாசத்தினால் ராஜ்யங்களை ஜெயிக்கவும் கூடும், அதேவேளையில் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அனுபவிக்கவும் கூடும். நேர்மறை எண்ணங்கள் என்பது நாம் பேசுகிறதின்படி ஆகும் என்பதும், எப்பொழுதும் நன்மையே நடக்கும்  என்பதுமாய் காணப்படுகிறது. சிலவேளைகளில் அவ்வாறு பேசியும் எதிர்மறை காரியங்கள் நடக்கும் போது ஏமாற்றமும், விரக்தியும் அடைந்து, ஆண்டவரை விட்டு விலகுவதற்கும் இது காரணமாகிவிடும். 

மேற்குறிப்பிட்ட நீதிமொழி   எழுதப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலையைப்  பார்க்கும் போது   கஞ்சனாய், வன்கண்ணனாய் காணப்படுகிற  ஒருவனைக் குறித்தும் அவன் இருதயம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றியதுமாகும். நீதி. 23:6-8 வசனங்களை வாசிக்கிற வேளையில், கஞ்சனுடைய ஆகாரத்தை  புசியாதிருங்கள் என்றும், அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை  இச்சியாதிருங்கள் என்றும், அவன் இருதயத்தின் நினைவானது ஒவ்வொன்றையும் கணக்குப் பார்க்கும் என்றும்,  புசியுங்கள் குடியுங்கள் என்று சொல்லுவான் ஆனால்   அவன் இருதயம் உங்களோடு இராது என்றும், நீ புசித்த அவன் உணவை வாந்திப் பண்ணுவாய் என்றும், உன் இனிமையான வார்த்தைகளை வீணடித்து விடுவாய் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. கருமி ஒவ்வொரு காரியங்களையும் தன் இருதயத்தில் கணக்குப் பார்த்து  செய்கிறவனாய்  காணப்படுவதினால் அவனுடைய வெளிப்புறமான வாழ்க்கையும் அப்படியே கஞ்சத்தனமாகவே காணப்படும். பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை, செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை என்று பிரசங்கி 5:10 கூறுகிறது.  பொதுவாகத் தங்களைக் குறித்த சிந்தை மாத்திரம் உள்ளவர்கள் கஞ்சனாகக் காணப்படுவது இயல்பு.

இயேசு, எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு  ஊழியஞ்செய்யக்கூடாது என்றும், தேவனுக்கும் உலகப்பொருளுக்கும்  ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றும் லூக்கா 16:13ல் கூறினார். உலகத்தின் பொருட்களும், ஐசுவரியமும் இயேசுவை விட மேலானதாய் நமக்குக் காணப்படும் போது, ஆண்டவருடைய பிள்ளைகளாகவும் ஊழியக்காரர்களாகவும்   காணப்படமுடியாது. வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு, அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும்  வறுமையடைவாரும் உண்டு, உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும், எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும் என்ற வார்த்தையின் படி,  கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்கள் உதாரகுணமுள்ளவர்களாய் காணப்படுங்கள், அப்போது   செழித்திருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *