உங்களை நீங்களே திருடாதீர்கள் (Don’t rob yourself)

1 கொரி 6:19,20 உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/heq3sLZLkts

ஒரு ஊரில் மிகப்பெரிய பண்ணை வீடு இருந்தது. அந்த வீடு மிகப்பெரிய மாளிகையாக கட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டில் வசிக்கும் நபர்கள் யாவரும் மரித்துப்போனதால், அந்த ஊரில் உள்ள மக்கள் யாவரும் நாளுக்கு நாள் அந்த பங்களாவில் உள்ள செங்கல்களை, இரும்புகளையும் உடைத்து தங்களுக்கென்று எடுத்து சென்றார்கள். சிலர் அந்த பங்களாவில் உள்ள மரக்கதவுகளையும் உடைத்து தங்களுக்கென்று எடுத்து சென்றார்கள். இதை பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஊழியக்காரர், ஒரு நாளில் அந்த பங்களாவின் மேற்புறத்தில் ஒரு சிலுவையை கொண்டு வந்து நிறுத்தினார். அடுத்த நாள், வழக்கம்போல அந்த பங்காளவிலுள்ள பொருட்களை கொள்ளையிட வந்தவர்கள், வீட்டின் மேற்புறத்திலுள்ள சிலுவையை பார்த்து, இது இனிமேல் கோயில் வீடு என்று சொல்லி, அந்த வீட்டிலுள்ள பொருட்களை கொள்ளையிடுவதை நிறுத்திவிட்டார்கள். மீறி கொள்ளையிட்டால் அது தெய்வ குற்றமாகும் என்று அஞ்சினார்கள்.

அதுபோல தான், எப்பொழுது நீங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு இரட்சிக்கப்பட்டீர்களோ, அன்றிலிருந்து நீங்கள் உங்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல. உங்கள் சரீரம் பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயமாயிருக்கிறது. காரணம் நீங்கள் கிரயத்திற்கு கொள்ளப்பட்டீர்கள். இப்படியிருக்க, உங்கள் சரீரத்தை வேசித்தனத்திற்கும், விபச்சாரத்திற்கு, வேறெந்த புறம்பான காரியங்களுக்கும் உபயோகப்படுத்தினால், உங்கள் சரீரத்தை நீங்களே திருடுகிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள். காரணம், உங்கள் சரீரம் உங்களுக்கு சொந்தமானதாக இல்லை, உங்கள் சரீரம் ஆண்டவருக்கு சொந்தம். இதை தான், 1 கொரி 6:18 ல் வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நீங்கள் உங்கள் பெயரில் ஒரு நிலத்தை வாங்குகிறீர்கள். உங்கள் பெயரில் கடினமாக உழைத்து ஒரு நல்ல வீட்டை கட்டுகிறீர்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்து கட்டின வீட்டை திருட யாரவது வந்தால், உங்களுக்கு எப்படி இருக்கும்? எவ்வளவு வேதனை காணப்படும்? அதுபோலத்தான், கிரயத்துக்குகொள்ளப்பட்ட உங்கள் சரீரத்தை நீங்களே புறம்பான காரியங்களுக்கு பயன்படுத்தினால், உங்கள் சரீரத்திற்கு சொந்தக்காரரான கர்த்தர் எவ்வளவு துக்கப்படுவார்.? இதை உணர்ந்து உங்கள் சரீரத்தின் ஒவ்வொரு அவயவங்களும் இயேசுவை மாத்திரம் மகிமை படுத்த உபயோகியுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *