எரேமியா 17:9. எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
உலகத்தில் மனுஷன் இந்நாட்களில் எல்லாவற்றையும் கண்டு பிடித்துவிட்டாலும், இருதயத்தில் இருப்பது என்ன என்பதை அறியத்தக்கவைகள் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. புருஷன் மனைவியின் இருதயத்தில் இருப்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. மனைவி புருஷனுடைய இருதயத்தில் இருப்பதை அறியமுடியவில்லை. பெற்றோர்கள் பிள்ளைகளின் இருதயத்தில் இருப்பதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பிள்ளைகள் பெற்றோரின் இருதயத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவருக்கொருவர் தங்களை மறைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், மனுஷனுடைய இருதயத்தில் இருப்பது என்ன என்பதைக் கர்த்தர் தெளிவாக அறிவார். கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன் (எரேமியா 17:10).
பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன், ஆகையால் நீ போய் அவனை ராஜாவாக அபிஷேகம் பண்ணு என்று சாமுவேல் தீர்க்கதரிசியைக் கர்த்தர் அனுப்பினார். அவன் போய் ஈசாயின் மூத்த குமாரனான எலியாபைப் பார்த்தவுடனே, அவனுடைய தோற்றத்தைப் பார்த்தவுடன் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுபவன் இவன் தான் என்றான். கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன், மனுஷன் முகத்தைப் பார்ப்பான், கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்(1 சாமு. 16:7) என்று கூறுவதைப் பார்க்கமுடிகிறது. ஈசாயின் கடைசி குமாரனான தாவீதை தன் இருதயத்திற்கு ஏற்றவனாகக் கர்த்தர் கண்டு அவனை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார். கர்த்தர் இருதயத்தைப் பார்த்து அதில் இருப்பவைகளை அறிந்துகொள்ளுகிற தேவன்.
தேவன் மனுஷனைச் செம்மையானவனாக சிருஷ்டித்தார். ஆனால் பாவத்தில் விழுந்தபின்பு அவனுடைய இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாய் போயிற்று. மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும்(மாற்கு 7:21,22) என்று வேதம் கூறுகிறது. இத்தனையும் பொல்லாப்புகளைச் செய்தும் யாரும் என்னைக் காணவில்லை என்ற மதியற்றவனாய் மனுஷன் வாழ்ந்துகொண்டிருக்கிறான். ஆனால் கர்த்தர் இருதயங்களைத் தெளிவாய் அறிகிறார்.
கர்த்தர் என்னைப்பார்க்கிறார். என் இருதய நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறார். என் ஒவ்வொரு செய்கைகளையும் கர்த்தர் கவனிக்கிறார், நான் என் குடும்பத்திற்கு மறைத்து, போதகர்களுக்கு மறைத்துச் செய்கிற ஒவ்வொரு காரியங்களையும் கர்த்தர் அறிவார். உண்மையும் உத்தமும் இல்லாத என் ஜீவியத்தைக் கர்த்தர் அறிவார். இப்படிப்பட்ட ஒரு உணர்வு நமக்குள்ளாக இருந்தால் போதும் தேவனுக்குப் பயந்த ஒரு ஜீவியம் செய்ய நம்மை அற்பணித்துவிடுவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar