ஆத்துமாக்களை மரணத்தினின்று தப்புவியுங்கள் (Save souls from death).

யாக்கோபு 5:20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/zl-hwPIsxyQ

இந்த உலகத்தில் சுமார் 820 கோடி ஆத்துமாக்கள் இருக்கிறார்கள். இந்திய தேசத்தில் மாத்திரம் சுமார் 145 கோடி ஆத்துமாக்கள் இருக்கிறார்கள். உலக ஜனத்தொகையில் இந்தியாவின் பங்கு மாத்திரம் சுமார் 17% மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் மரணத்திற்கு ஏதுவானவர்கள், இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, மனம் திரும்பாத, இரட்சிக்கப்படாத ஜனங்கள், கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அழிவுக்கு நேராக செல்லுகிற ஆத்துமாக்களை இரட்சிப்புக்கு நேராக நடத்தும் உன்னத பணியும், கடமையும் நமக்கு காணப்படுகிறது. சாதாரணமாக ஒருவருக்கு ஒருமுறை இயேசுவை பற்றி கூறிவிட்டேன் என்று நாம் திருப்தி அடைகிறவர்களாய் காணப்படலாகாது. அவர்களின் இரட்சிப்பிற்காக இடைவிடாது உழைக்கிறவர்களாய் நாம் ஒவ்வொருவரும் காணப்படவேண்டும்.

ஒரு நபர் உங்கள் கண்களுக்கு முன்பாக விஷம் குடித்து சாகும்படியாக முயற்சிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் ஒரு விஷமருந்தை திறந்து வாயில் ஊற்றப்போகிறார். அப்பொழுது அவரிடம் சென்று தற்கொலையினால் வருகிற தாக்கம் மற்றும் இழப்புகளை கூறி, அவரிடம் யூதாஸ் ஸ்காரியோத்து தற்கொலை செய்ததினால், அவன் இரட்சிக்கப்படாமல் போய்விட்டான் என்று அந்த நபரிடம் பிரசங்கம் செய்தபிறகு, இனிமேல் நீ இந்த விஷமருந்தை குடிக்கவேண்டுமானால் குடி, குடிக்க விருப்பம் இல்லையென்றால் கீழே போடு என்று சொல்லிவிட்டு கடந்து சென்றுவிடுவீர்களா? அப்படி யாரும் சொல்லிவிட்டு கடந்து செல்லமாட்டார்கள். மாறாக, அவன் கையில் இருக்கும் விஷமருந்தை வேகமாக போய் வாங்கி, கீழே போட்டு உடைத்தோ இல்லை தூக்கி எரிந்தோ அவனை மரணத்திற்கு நீங்கலாக்கி தப்புவிப்பீர்களல்லவா? அந்த நபரிடம், பேசியோ கெஞ்சியோ உணர்த்தியோ போதித்தோ, அவன் தற்கொலை செய்வதிலிருந்து தப்புவிப்பீர்களல்லவா? அதுபோல தான், ஆத்துமாவில் மரணத்தை சந்திக்கிற கோடிக்கணக்கான ஜனங்கள் இரட்சிக்கப்பட நாம் இன்னும் அதிமாக செயல்படுகிறவர்களாய் காணப்பட வேண்டும். ஒருமுறை பிரசங்கம் செய்தாகிவிட்டது, ஆகையால் என்னுடைய கடமை முடிந்துவிட்டது, அந்த நபர் இரட்சிக்கப்பட்டால் இரட்சிக்கப்படட்டும், இல்லையென்றால் எப்படிவேண்டுமானாலும் போகட்டும்; என் கடமை ஒருமுறை பிரசங்கம் செய்ததோடு முடிந்துவிட்டது என்று நினைத்துவிடக்கூடாது. அந்த ஆத்துமாவின் இரட்சிப்பிற்காக நாம் தொடர்ந்து அவர்களுக்கு சத்தியத்தை போதிக்கிறவர்களாகவும், ஜெபிக்கிறவர்களாகவும், உபதேசிக்கிறவர்களாகவும், கண்டிக்கிறவர்களாகவும், உணர்த்துகிறவர்களாகவும், அன்போடும் பாசத்தோடும் கூடிய எச்சரிப்போடும் அவர்கள் இரட்சிப்பிற்காய் பிரயாசப்படுகிறவர்களாய் நாம் காணப்பட வேண்டும். அப்படி நீங்கள் ஒரு ஆத்துமாவை மரணத்திலிருந்து தப்புவிப்பீர்களென்றால், அந்த ஆத்துமாவினிமித்தம் பரலோகம் பரவசமடையும். அதற்கு காரணமாய் நீங்கள் இருக்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய அனுபவமாக இருக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள். ஒரு ஆத்துமா மரணத்திலிருந்து இரட்சிப்படையும்போது, பரலோகமே குதூகலிக்கிறது.

ஆகையால் ஆத்துமாக்களுக்காக செலவு செய்ய தயங்காதிருங்கள். எந்தெந்த வகையில் ஆத்துமாக்களை இரட்சிப்புக்கு ஏதுவாக நடத்தமுடியுமோ, அத்தனைவகையான வழிகளையும் செய்ய கவனமாயிருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *