கர்த்தருடைய வார்த்தையைக் கனம் பண்ணுங்கள் (Honour God’s Word)

யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருளனைத்தும் கணப்பிலுள்ள அக்கினியிலே வெந்துபோகும்படி, கணப்பிலிருந்த அக்கினியில் எறிந்துபோட்டான் (எரே. 36:23).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/GB8nnqzs5ag

யோயாக்கீம் என்ற யூதாவின் ராஜா, எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டு, பாரூக்கால் எழுதப்பட்ட கர்த்தருடைய வார்த்தை அடங்கிய சுருளை, வேதபாரகர்கள் பயன்படுத்தும் சூரிக்கத்தியினால் அறுத்து, அக்கினியில் வெந்துபோகும் படிக்கு, அக்கினியில் எறிந்தான். கர்த்தருடைய வார்த்தை எரிய அதில் அவன் குளிர்காய்கிறவனாய் காணப்பட்டான்;. ராஜாவாயினும், அவனுடைய சகல ஊழியக்காரராயினும் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்படவுமில்லை, மனஸ்தாபப்பட்டு தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளவுமில்லை என்று வேதம் கூறுகிறது. அதற்குக் காரணம் அதில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் எல்லாம் அவனுடைய பாவத்தையும் மீறுதலையும் குறித்தும், அவனுடைய ஜனங்களின் பாவத்தையும் மீறுதலையும் குறித்துமாயிருந்தது. அவர்கள் மனந்திரும்பாத பட்சத்தில் பாபிலோனிய ராஜாவின் கரங்களில் கர்த்தர் விற்றுப் போடுவார் என்ற எச்சரிப்புமாயிருந்தது.

சூரிக்கத்தியினால் கர்த்தருடைய வார்த்தையை அறுப்பது இன்றும் தொடர்கிறதாய் காணப்படுகிறது. சிலர் இந்நாட்களிலும் கர்த்தருடைய வார்த்தையில் சிலப்பகுதிகள் உண்மையென்றும் வேறுசில பகுதிகள் கதைகள் என்றும் கூறுகிறார்கள். சிலபகுதிகள் இக்காலகட்டத்திற்குப் பொருந்தாதது என்று சொல்லி சிலர் அவற்றை ஒதுக்குகிறவர்களாய் காணப்படுகிறார்கள். சிலர் அதில் காணப்படுகிற தவறுகளைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். சிலர் வேதத்தில் முரண்பாடுகள் காணப்படுகிறது என்று சொல்லி ஒதுக்குகிறார்கள். வேறுசிலர் தேவனுடைய சகல ஆலோசனைகளும் நமக்காகவும் நம்முடைய பிள்ளைகளுக்காகவும் கொடுக்கப்பட்டிருந்தும், குறிப்பிட்ட பகுதிகள் மாத்திரம் நமக்குரியது என்று சொல்லுகிறார்கள். பழைய ஏற்பாடு, அது பழையது என்று சொல்லி அதை வாசிக்காமலே காணப்படுகிறவர்களும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் யோயாக்கீமைப் போலக் கர்த்தருடைய வார்த்தையை அறுத்து, அக்கினியால் அழித்தொழிக்க வகை தேடுகிறவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். கர்த்தருடைய பிள்ளைகளே வேதவாக்கியங்கள் எல்லாம் கர்த்தருடைய ஆவியினால் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. நாம் கிறிஸ்துவுக்குள் தேறினவர்களாய் காணப்படுவதற்காகக் கர்த்தருடைய ஆவியானவர் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் கொடுத்திருக்கிறார். ஆகையால் தேவனுடைய சகல ஆலோசனைகளிலும் தேறினவர்களாய் காணப்பட பிரயாசப்படுங்கள்.

கர்த்தருடைய வார்த்தையை யாராலும் அழிக்க முடியாது. கிறிஸ்துவுக்கு பின் 300ம் வருஷத்தில் டயோகிலிசன் என்ற ரோமப் பேரரசர் எல்லா வேதாகமத்தையும் சுட்டெரிக்குப்படிக்கு கட்டளையிட்டான். அவனால் வேதத்தை அழிக்கமுடியவில்லை. அதன்பின்பு தோன்றின ரோம சபை வேதத்தை ஒரு குறிப்பிட்ட ஜனங்கள் மட்டும் வாசிக்கவேண்டும், எல்லாருடைய கரங்களிலும் காணப்படக் கூடாது என்று சட்டம் போட்டார்கள், அவர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. கர்த்தருடைய வார்த்தையில் அவருடைய ஜீவன், அவருடைய உயிர் காணப்படுகிறது. கர்த்தருடைய வார்த்தைதான் ஒரு மருத்துவருடைய கத்தியைப்போல, நம்முடைய ஆத்துமாவை அறுவைசிகிச்சை செய்து ஆவிக்குரியதையும் மாம்சத்திற்குரியதையும் அறுத்து வகையறுக்குமே ஒழிய, ஒருவனாலும் கர்த்தருடைய வார்த்தை அடங்கிய சுருளையோ, புஸ்தகத்தையோ அறுத்து, அக்கினியினால் சுட்டெரித்து அதை ஒழிக்கமுடியாது. ஆகையால் நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கனம் பண்ணும் போது, அவர் உங்களை கனம் பண்ணி ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *