கர்த்தாவே எழுந்தருளும்(Rise up, O Lord).

பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான்.  அது தங்கும்போது: கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக என்று சொல்லுவான் (எண். 10:35,36).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Pub9NGpIr40

கர்த்தாவே எழுந்தருளும் என்பது மோசேயின் கருத்தான ஜெபமாய் காணப்பட்டது.  இஸ்ரவேல் சபை வனாந்தரத்தில் 40 வருடங்கள் காணப்பட்ட வேளையில் பாளையம் புறப்படும் வேளையில், கர்த்தாவே எழுந்தருளி எங்களுக்கு முன்பாக செல்லும் என்றும்,  தங்கும் வேளையில் கர்த்தாவே எங்களிடத்தில் திரும்பும் என்று சொல்லி ஜெபிக்கிறவனாகக் காணப்பட்டான். வாழ்க்கை என்பதும் பிரயாணமாய், போக்கும் வரத்துமாய் காணப்படுகிறது. நாமும் கூட, கர்த்தாவே எழுந்தருளி எங்களுக்கு முன்பாக செல்லும் என்றும் நாம் தங்கும் இடங்களில் எங்களோடு தங்கியிரும் என்றும் மோசேயைப் போல ஜெபிக்கலாம்.

கர்த்தர் எழுந்தருளி முன் செல்லும்போது சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பிரயாணத்தில் அனேக சத்துருக்களைச் சந்தித்தார்கள். அமலேக்கியர்கள் துவங்கி, கானானுக்குள் பிரவேசித்த பின்பும் 31 ராஜாக்கள், 7 ஜாதிகள் என்று பலவிதமான சத்துருக்களை எதிர்கொண்டார்கள். ஆனாலும் ஒருவராலும் இவர்களை மேற்கொள்ள முடியவில்லை. காரணம் இவர்களோடு சென்ற கர்த்தர் சத்துருக்களை சிதறடித்தார். நாமும் அனுதினமும் வாழ்க்கை என்னும் ஓட்டத்தில் மறைவான கண்ணிகள், பார்க்கக்கூடிய மற்றும் கூடாத யுத்தங்கள், சத்துருவின் தந்திரங்கள், தீயநோக்கங்களோடு பழகும் ஜனங்கள் என்று பலவிதமான சத்துருக்களைச்  சந்திக்கிறோம். ஆனால் கர்த்தர் நமக்காய் எழுந்தருளும் போது, அவர்கள் நம்முடைய சத்துருக்கள் அல்ல, அவருடைய சத்துருக்களாய் காணப்படுகிறார்கள். நம்முடைய தேவன் யுத்தத்தில் வல்லவர். எல்ஷடாய் என்பது அவருடைய நாமம். அவர் சர்வ வல்லமையுள்ளவர். யார் அவரோடு யுத்தம் செய்ய முடியும்? ஒரு பாதாளத்தின் வல்லமைகளும் அவரை எதிர்த்து நிற்க முடியாது. ஆகையால் சத்துருக்கள் அரைத்துப் பொடித்த மாவைப்போல, காற்றில் தூசி பறந்து மறைவதைப் போலக் காணப்படாமல் போய்விடுவார்கள். உங்கள் யுத்தம் கர்த்தருடையது, நீங்கள் சும்மாயிருப்பீர்கள்.

கர்த்தர் எழுந்தருளி முன் செல்லும்போது உங்களைப் பகைக்கிறவர்கள் ஓடிப்போவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் காணப்பட்ட போது வெளியிலிருந்து சத்துருக்கள் ஒருபுறம் எதிரிட்டு வந்தாலும், சபைக்குள்ளிருந்தும் சொந்த ஜனங்கள் அனேகர் காரணமில்லாமல் பகைவர்களாக எழும்பினார்கள். ஆனால் ஒருவனாலும் மோசேக்கு முன்பாக நிற்கமுடியவில்லை. அதுபோல உங்களோடு நண்பர்களாயிருந்தவர்கள், நாட்கள் செல்லும்போது வெறுக்கத் துவங்குவார்கள், பின்பு பகைக்க துவங்குவார்கள். ஆனால் உங்களுக்காகக் கர்த்தர் எழுந்தருளுவதால் உங்களைப் பகைக்கிறவர்கள் உங்களுக்கு முன்பாக ஓடிப்போவார்கள். அன்று தாவீதுக்கு முன்பாக தண்ணீர்கள் உடைத்தோடுகிறதுபோல, அவனுடைய சத்துருக்களைக் கர்த்தர் அவனுக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் (1 சாமு. 5:20). அதுபோல உங்களைப் பகைகிறவர்களை உடைத்து ஓடப்பண்ணுவார்.

இஸ்ரவேல் ஜனங்கள் பாளையம் இறங்கி ஓரிடத்தில் தங்கும் போது, கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக என்று சொல்லி மோசே ஜெபிப்பான். காரணம் வனாந்தரத்தில் கொள்ளிவாய் சர்ப்பங்கள், கொடிய மிருகங்கள், விஷப்பூச்சிகள் என்று பல ஆபத்துகள் காணப்படுகிறது. கர்த்தர் ஒருவரால் தான் தன்னையும் தன் ஜனங்களையும் பாதுகாக்கமுடியும் என்பதை மோசே அறிந்திருந்தான். கர்த்தருடைய பிள்ளைகளுடைய தங்கும் இடங்கள், வீடுகள், வாசஸ்தலங்கள் எல்லாவற்றிலும் கர்த்தர் உங்களோடு தங்க விரும்புகிறார். உங்களையும் உங்கள் குடும்பத்தின் அங்கங்களையும், சபை என்னும் குடும்பத்தையும் வாரிக்கொள்ளுவதற்குச் சத்துரு அனேக உபாய தந்திரங்களை செய்கிறான். பில்லிசூனியம், மந்திரவாதம், செய்வினைக் கட்டுகள் என்று அனேக போராட்டங்கள் ஜனங்களுக்கு விரோதமாகக் காணப்படுகிறது. கர்த்தர் உங்களோடு தங்கியிருக்கும் போது அவர் உங்களைச் சுற்றிலும் அக்கினி மதிலாக இருப்பார். உங்களைக் காக்கும் தேவன் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை. உங்களைக் கண்ணின் மணிபோல பாதுகாப்பார். உங்கள் ஆத்துமாக்களைக் காப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவருக்காகவும் எழுந்தருளுவாராக! ஆமென்.   

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *