ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு (Abraham, Isacc, Jacob)

மத் 22:31,32 மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/RhvTMTeeyDU

வேதாகமத்தில் தேவனுக்கு அநேக பெயர்கள் இருக்கிறது. அவற்றில் ஒன்று அவர் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன் என்று அழைக்கப்படுகிறார். அதுபோல தான் ஆண்டவர் உங்களுடைய பெயரை அடைமொழியாக கொண்டு உங்கள் தேவன் என்று அழைக்கப்பட அவர் வெட்கப்படுவதில்லை. அப்படியென்றால் நீங்கள் எவ்வளவு பாக்கியசாலி என்பதை நினைத்துப்பாருங்கள்.

ஆபிரகாம் விசுவாசிகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ஆபிரகாம் ஆண்டவர் மீது வைத்த விசுவாசம் கொஞ்சமல்ல. அதேபோல ஆபிரகாம் மன்றாட்டு வீரன் என்பதையும் நாம் மறந்துபோய்விடக்கூடாது. கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே ஆபிரகாமுக்குத் தரிசனமானார். மூன்று புருஷர்கள் வந்து ஆபிரகாமை சந்தித்தார்கள். கர்த்தர் சோதோம் கொமோராவின் பாவங்களினிமித்தம் அந்த பட்டணங்களை அழிக்கப்போகிறேன் என்பதை ஆபிரகாமுக்கு தெரியப்படுத்தினார். மூன்று புருஷர்கள் சோதோமுக்கு நேராக போனபிறகும், ஆபிரகாம் என்ன செய்துகொண்டிருந்தான் தெரியுமா? கர்த்தர் தெரியப்படுத்தின காரியத்தை அறிந்து அவன் கேட்டும் கேளாதவன் போலிருக்கவில்லை, அந்த செய்தியை கேட்டு தன்னுடைய வேலையை செய்ய ஆபிரகாம் கடந்துசெல்லவில்லை. மாறாக, ஆதி 18:22ன் படி, ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். அவன் திகைத்துப்போய், மிகுந்த பாரத்துடன் கர்த்தரிடத்தில் லோத்துக்காக மன்றாடினான். இப்படிப்பட்ட பாரத்துடன் ஜெபிக்கும் ஆவி உங்களுக்கும் இருக்குமென்றால், அவர் உங்களுடைய தேவன் என்று அழைக்கப்பட வெட்கப்படுவதில்லை.

ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கை பாருங்கள். ஈசாக்கு என்றால் நகைப்பு என்று அர்த்தம். அவன் வெட்டின துரவை துன்மார்க்கர்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டான். அவர்கள் ஈசாக்கின் துரவை அபகரித்தபோதும், தன்னுடைய நகைப்பை, அதாவது கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதை இழக்கவில்லை. பிலி 4:4ன் படி கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். யார் உங்களுடையதை அபகரித்தாலும் உங்கள் சந்தோசம் உங்களைவிட்டு விடைபெற்றுச்செல்ல அனுமதிக்காதீர்கள். ஈசாக்கை போல கர்த்தர் மேல் பாரத்தை வைத்து, கவலையற்ற வாழ்க்கை வாழுங்கள். அதுமாத்திரமல்ல, தன்னுடைய மனைவி கர்ப்பம்படையும்படியாக, அவன் அவளுக்காக ஜெபித்தான். ஈசாக்கு விசுவாசத்துடன் ஜெபித்தான், பின்பு, ஏசாவையும் யாக்கோபையும் பெற்றெடுத்தான். நீங்களும் விசுவாசத்தோடு ஜெபிக்கும் குணாதிசயம் உடையவர்களாய் இருப்பீர்களென்றால், கர்த்தர் உங்களை அவருடைய தேவன் என்று அழைக்கப்பட வெட்கப்படுவதில்லை.

ஈசாக்கின் குமாரன் யாக்கோபை பாருங்கள். தன்னுடைய தந்திரமான ஏமாற்றும் குணத்தை ஆண்டவருடைய சமூகத்தில் சமர்ப்பித்து, நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். யாக்கோபு சமர்ப்பித்து ஜெபித்தான். நீங்களும் சமர்ப்பணத்தோடு ஜெபிக்கும் குணாதிசயம் உடையவர்களாய் இருப்பீர்களென்றால், கர்த்தர் உங்களை அவருடைய தேவன் என்று அழைக்கப்பட வெட்கப்படுவதில்லை.

ஆகையால் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபை போல, பாரத்துடன் ஜெபியுங்கள், விசுவாசத்துடன் ஜெபியுங்கள், அர்ப்பணித்து ஜெபியுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்கள் தேவனாய் இருப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *