போதிக்கிறவர்.

சங்கீதம் 32:8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

அறிவு, ஞானம், எது நல்லது, எது சரியான பாதை, எந்த படிப்பு படிக்க வேண்டும், எந்த வேலையை செய்ய வேண்டும், எப்படியாக கர்த்தரை தொழுதுகொள்ள வேண்டும் என்ற அனைத்து காரியங்களையும் குறித்து போதித்து நடத்துகிறவர் நம்முடைய தேவன். உலகத்தில் அநேகர் ஒரு குறிப்பிட்ட காரியங்களுக்கு மாத்திரம் போதிக்க முடியும்; காரணம் எல்லாரும் எல்லா காரியங்களையும் கற்றவர்கள் அல்லது தெரிந்தவர்கள் அல்ல. கர்த்தர் ஒருவரே சகலத்தையும் அறிந்தவர். ஞானம் அவரிடத்திலிருந்து புறப்படுகிறது. அவர் ஒருவரே எல்லா காரியங்களிலும் வழி இதுவே இதிலே நடவுங்கள் என்று சொல்லி போதிக்க கூடிய நல்ல பிரதான ஆசாரியன். சங்கீதம் 27 : 11ல் தாவீது சொல்லுகிறான் எனக்கு உமது வழியை போதித்தருளும் என்று. சங்கீதம் 32ல் கர்த்தர் தாவீதை பார்த்து கர்த்தர் சொல்கிறார் நான் உனக்கு போதிப்பேன், நடத்துவேன், ஆலோசனை சொல்லுவேன் என்று. நாமும் தாவீதை போல உமது வழியை எனக்கு போதியும் என்று கேட்போம் என்றால், நிச்சயமாக அவர் போதித்து நடத்துவார்.

ஒரு வாலிபன் தன்னுடைய வாலிப பிரயாயத்தில் கர்த்தரிடம் சொன்னான்; ஆண்டவரே நான் படிப்பறிவில்லாதவன், எழுத்து கூட்டி கூட எனக்கு வாசிக்க தெரியாது. ஆனால் எனக்கு உம்மடைய வேதத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. எனக்கு நீர் போதியும் என்று மிகுந்த வாஞ்சையோடு கேட்டானாம். ஒரு நாள் கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி, மேகத்தில் எழுத்துகளை உண்டாக்கி அவனுக்கு போதித்தாராம். இன்று அவர் வேதத்தை கற்று ஒரு நல்ல ஊழியக்காரராக இருக்கிறார். எனக்கு எல்லாம் தெரியும், என்னுடைய சுய பெலத்தால் நான் சாதித்துவிடுவேன் என்று சொல்லும் போது, கர்த்தரால் நீங்கள் போதிக்கப்பட முடியாது. தாவீதை போல நீர் எனக்கு போதியும் என்று விட்டு கொடுக்கும் போது அவர் போதித்து நடத்துகிறவராக காணப்படுவார்.

ஞானி இப்படியாக சொல்கிறார்,  அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய் (நீதிமொழிகள் 4:4 ).

ஏசாயா 28:26ல் இப்படியாக வாசிக்கிறோம், அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துகிறார் என்று. அவர் நன்றாய் போதிக்கிறவர். மலை பிரசங்கத்தில் கர்த்தர் கொடுத்த போதனைக்கு ஒப்பாக இன்றளவும் ஒன்றையும் சொல்ல முடியாது. இந்திய தேசத்தின் தந்தை என்றழைக்க கூடிய மகாத்மா காந்தியடிகளும் கூட ஒருமுறை இப்படியாக சொன்னார்; இயேசு மலை பிரசங்கத்தில் போதித்த காரியங்களுக்கு ஒப்பாக ஒன்றுமில்லை என்று.

உங்களுடைய வாழ்க்கையில் யாரும் உங்களுக்கு நல்ல ஆலோசனை கொடுத்து நடத்துகிறவர்கள் இல்லையே என்று கலங்கி போய் இருப்பீர்களென்றால் நீங்கள் செய்யவேண்டிய காரியம், கர்த்தரிடத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள். அவர் உங்களுக்கு போதிக்க வேண்டும் என்று கேளுங்கள்; நிச்சயமாக கர்த்தர் உங்களுக்கு நல்ல, பிரயோஜனமாக போதிப்பார்; நடத்துவார்; ஆலோசனை சொல்லுவார்.

ஏசாயா 48:17 இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *