நோவா, தானியேல், யோபு (Noah, Daniel, Job)

எசே 14:14 அப்பொழுது நோவா, தானியேல், யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/CFvQNTd_-oo

பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த பரிசுத்தவான்களில் கர்த்தர் நோவா, தானியேல், யோபுவை மாத்திரம் இந்த வசனத்தில் நீதியாய் வாழ்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இதை எழுதிய எசேக்கியேல் தீர்க்கதரிசி, அவன் வாழ்ந்த காலத்தில் தான் தானியேல் வாழ்ந்தான். தானியேலை காட்டிலும் எசேக்கியேல் வயதில் மூத்தவன். இருந்தாலும் எசேக்கியேல் தீர்க்கதரிசி தானியேல் இளைஞனாயிருந்தாலும் அவனை நீதிமான் என்று எழுதுவதில் அகங்காரம் காட்டவில்லை.

ஆதி 6:9ல் நோவாவின் நீதியை: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான் என்று எழுதியிருக்கிறது. தானி 6:4ல் தானியேலின் நீதியை: அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை என்று எழுதியிருக்கிறது. யோபு 1:1ல் யோபுவின் நீதியை: ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான் என்று எழுதப்பட்டிருக்கிறது.

விசுவாசத்திற்கும் நீதிக்கும் ஒன்றோடொன்று தொடர்பு உள்ளது. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து வாழவேண்டும் என்று பவுல் (பிலி 3:9) கூறுகிறான். நோவா, தானியேல், யோபு இந்த மூன்றுபேரும் விசுவாசத்தினால் சோதிக்கப்பட்டு தங்கள் நீதியை வெளிப்படுத்தியவர்கள். நோவா முதன்முதலாக மழையினால், வெள்ளத்தினால் வரும் சோதனையை தாண்டி தன்னுடைய விசுவாசத்தை காண்பித்தவன். தானியேல் சிங்கங்களின் கெபியில் போடும் சோதனையை சகித்து தன்னுடைய விசுவாசத்தை காண்பித்தவன். யோபு சாத்தானால் சோதிக்கப்பட்டும், தேவன் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தை காண்பித்தவன். இவர்களெல்லாரும் தங்களுடைய கடினமான சூழ்நிலையிலும் விசுவாசத்தை விட்டுவிடவில்லை.

அதுபோலத்தான், உங்களுக்கு வரும் கடினமான சோதனைகளில் கர்த்தர் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தை விட்டுவிடாதிருங்கள். நீங்கள் நீதிமானாக வாழ்ந்தால் தான் வருகிற ஆக்கினைக்கு தப்பமுடியும். இதை தேவன் தெளிவாக மேற்குறிப்பிட்ட வசனத்தில் சொல்லிவிட்டார். நோவா, தானியேல், யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள். மற்றவர்களை தப்புவிக்கமுடியாது என்று கூறிவிட்டார். மற்றவர்களின் நீதியினிமித்தம், தாங்கள் இரட்சிக்கப்பட முடியாது. இக்காலத்து பாடுகள் இனிவரும் மகிமைக்கு ஒப்பாய் இருக்காது. ஆகையால் இப்பொழுது வரும் சோதனைகளில் துவண்டுபோய்விடாமல், விசுவாசத்துடன் நீதிக்குரிய ஜீவியம் செய்யுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *