மாற்கு 9:2 ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்;
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/zqXvSO6LPK4
இயேசு ஊழியம் செய்த நாட்களில் தன்னோடு 12 சீஷர்களை வைத்திருந்தார். பின்பு 70 சீஷர்களை ஊழியம் செய்யும்படி அனுப்பினார். அவர் போன இடமெல்லாம் இயேசுவை பின்பற்றிவந்த ஜனங்கள் எண்ணிலடங்காதவைகளாய் காணப்பட்டார்கள். இயேசுவின் மூலமாக அற்புதங்களையும் விடுதலையையும் பெற்றுக்கொண்ட ஜனங்கள் ஆயிரக்கணக்கானவர் இருந்திருப்பார்கள். இருந்தாலும் இயேசு தன்னோடு பேதுரு யாக்கோபு யோவானை மாத்திரம் நெருங்கிய வட்டாரத்தில் வைத்திருந்தார். இயேசு சிலுவை மரணத்திற்க்கு போகும் முன்பாக அவர் மறுரூபமானதை கண்ட பாக்கியசாலிகள் தான் இந்த மூன்று பேரும். யாவீருவின் மகளை உயிரோடு எழுப்ப போகும்போது இந்த மூன்று பேரை தவிர வேறெவரையும் இயேசு வீட்டிற்குள்ளே போக அனுமதிக்கவில்லை. அப்படி இயேசுவோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களின் பிரதான குணாதிசயம் நமக்கும் இருப்பது நல்லது.
பேதுரு துவக்கத்தில் எங்கு போனாலும் தூங்கினான் என்பது உண்மைதான். மலையில் தூங்கினான் (லுக் 9:32), சிறைச்சாலையில் தூங்கினான் (அப் 12:6-11). ஆனால் அவன் எழுதிய நிருபங்களில் விழித்திருப்பதைக்குறித்து அதிகமாய் எழுதியிருக்கிறான். ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள் என்று 1 பேதுரு 4:7ல் எழுதியிருக்கிறான். தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் என்று 1 பேதுரு 5:8ல் எழுதியிருக்கிறான். நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள் என்று 2 பேதுரு 3:14ல் எழுதியிருக்கிறான். இப்படியாக நாமும் பேதுருவைப்போல் ஜாக்கிரயுள்ளவர்களாய் ஜெபத்தில் விழித்திருக்கவேண்டும்.
யோவானின் சகோதரன்தான் யாக்கோபு. இவன் வேதாகமத்தில் எந்தவொரு நிருபத்தையும் எழுதவில்லை. ஆனால், எருசலேம் சங்கத்தில் தலைவனாய் இருந்தவன். மாத்திரமல்ல, இயேசுவின் சீஷர்களில் முதன்முதலாக இரத்தசாட்சியாக மரித்தவன். ஏரோது யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான் என்று அப் 12:2 கூறுகிறது. சுவிசேஷத்தினிமித்தம் தன்னுடைய உயிரை மாய்க்கவும் அவன் தயங்கவில்லை. இடிமுழக்கத்தின் மகன் என்றழைக்கப்பட்டவன், இயேசுவுக்காக எதையும் இழக்க முதன்முதலாக துணிந்தான். யாக்கோபை போல இயேசுவுக்காக எதையும் இழக்க நாம் ஐயப்படக்கூடாது.
யோவான் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்தவன். இயேசுவின் இதயத்துடிப்பை நன்றாக அறிந்தவன். கடைசிகாலங்களை குறித்த வெளிப்பாடுகளை ஆண்டவர் யோவானுக்கு தான் அதிகமாக வெளிப்படுத்தினார். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது (யோவா 1:1) என்று எழுத ஆரம்பித்த யோவான், கர்த்தருடைய வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவன். கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். தேவனுடைய சத்தம் நேரடியாக கேட்கவேண்டும் என்று மாத்திரம் நினைக்காமல், ஒவ்வொருநாளும் கர்த்தருடைய வசனத்திலிருந்து அவருடைய சத்தத்தை கேட்க அதிகமாய் வாஞ்சியுங்கள்.
பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று பேரும், இயேசுவோடு நெருங்கி ஜீவித்ததுபோல, நீங்களும், ஒவ்வொருநாளும் இயேசுவோடு நெருங்கி ஜீவிக்க விட்டுவிடாதிருங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

