ஆலயத்தினுடைய பிரமாணம்(Law of the house of God)

ஆலயத்தினுடைய பிரமாணம் என்னவென்றால்: மலையுச்சியின்மேல் சுற்றிலும் அதின் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாயிருக்கும், இதுவே ஆலயத்தினுடைய பிரமாணம் (எசே. 43:12).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/K9U_y7609bU

கர்த்தருடைய ஆலயத்தின் பிரமாணம் என்னவென்றால் அதின் எல்லையெங்கும் பரிசுத்தமாய் காணப்பட வேண்டும். நம்முடைய சரீரமாகிய ஆலயமாய் காணப்பட்டாலும் சரி, நாம் கூடி கர்த்தரை ஆராதிக்கிற ஆலயமாய் காணப்பட்டாலும் சரி அதின் அடிப்படைச் சட்டம் பரிசுத்தம் என்பதாய் காணப்படுகிறது. பரிசுத்தமானது நித்திய நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது என்று சங்கீதக்காரனும் சங்.93:5ல் கூறுகிறதைப் பார்க்கமுடிகிறது.

பூமிக்குரிய நம்முடைய கூடாரமாகிய சரீரம் கர்த்தர் தங்குகிற ஆலயமாய் காணப்படுகிறது.  உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள்  உங்களுடையவர்களல்லவென்றும்  அறியீர்களா என்று 1 கொரி. 6:19 கூறுகிறது. ஆகையால் நம்முடைய சரீரத்தைப் பரிசுத்தமாய்க் காத்துக்கொள்ளுவதற்கு வேண்டிய முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும். கண்கள் சரீரத்தின் விளக்காய் காணப்படுகிறது. கண்கள் தெளிவாயிருந்தால் சரீரம் முழுவதும் தெளிவாயிருக்கும். ஆகையால் கண்களோடு உடன்படிக்கைச் செய்து, இச்சைகளுக்கு விலகி வாழ பழகுங்கள். விலக்கப்பட்ட விருட்சத்தின் கனி ஏவாளுடைய பார்வைக்கு இன்பமாய் காணப்பட்டது, ஆனால் அது அவளுடைய ஆவிக்குரிய கண்ணைக்  குருடாக்கிவிட்டது.  சிம்சோனுடைய கண்களுக்கு பெலிஸ்தியப் பெண் இன்பமானவளாய் காணப்பட்டாள், கடைசியில் தன் சரீரக் கண்களை இழந்து தவித்தான். சாலொமோனின் கண்கள்  இச்சித்தவைகளில் ஒன்றையும் அவைகளுக்கு விலக்கவில்லை, கண்டவர்களையெல்லாம் திருமணம் செய்து கொண்டான், அவர்கள் அவனுடைய இருதயத்தைத் தேவனை விட்டு வழுவிப்போகும் படிக்குச் செய்தார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் கண்களுக்குக் காவல் வையுங்கள். உங்கள் சரீரத்திற்கும் ஆத்துமாவிற்கும் விளக்காய் காணப்படுகிற உங்கள் கண்களை எல்லாப் பரிசுத்தத்தோடும் காத்துக்கொள்ளுங்கள். இந்நாட்களில் உலகமும் மாமிசமும் பிசாசும் இச்சைகளைத் தூண்டுகிறது, ஆகையால் கர்த்தரை உங்கள் கண்களுக்கு முன்பாக எப்பொழுதும் நிறுத்துங்கள், திரும்பும் திசையெல்லாம் அவருடைய அன்பின் முகம் உங்களுக்குத் தெரியட்டும், அவர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை நீங்களும் சிநேகியுங்கள்.

நாம் கூடிவந்து கர்த்தரை ஆராதிக்கிற இடமும் பரிசுத்தமாய் காணப்பட வேண்டும். அதற்குக் காரணம், இரண்டுபேராவது மூன்றுபேராவது கர்த்தருடைய நாமத்தினாலே எங்கே கூடிவருகிறோமோ, அங்கே நம் நடுவிலே கர்த்தர் வருகிறார்.  அவர் மகா பரிசுத்தமுள்ளவர், தீமையைப் பார்க்காத சுத்த கண்ணன். அவர் தம்முடைய தோட்டமாகிய சபையில் வந்து உலாவும் போது நம்மைப் பார்த்து, என் பிரியமே! நீ பூரண ரூபவதி, உன்னில் பழுதொன்றுமில்லை என்று சாட்சி பகிரவேண்டும். ஆகையால் சபையில் மற்ற நிகழ்ச்சிகளை விட அதிகமாய் பரிசுத்தத்தை  வாஞ்சியுங்கள்,   நம்மை பரிசுத்தப்படுத்துகிற காரியங்களுக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுங்கள். நாம் நிறைவற்றவர்களாய் கூடி வந்தாலும், கர்த்தருடைய சமூகம் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாய் பரிசுத்தப்படுத்திப் பூரணப்படுத்துகிறதாய் காணட்டும். நம்முடைய செய்கைகள் அனைத்தும் மற்றவர்களுக்குள் பக்தி விருத்தியைக் கொண்டு வரட்டும். மணவாட்டியைக்  கறைப்படுத்துவதற்கு  சத்துரு பல தந்திரங்களை இந்நாட்களில் செய்கிறான். உலகத்தின்  காரியங்களைச் சபைக்குள் கொண்டுவந்து ஜனங்களை  கறைப்படுத்துகிறான். ஆகையால் அவனுடைய தந்திரங்களை முன்னறிந்து, பரிசுத்தமே ஆலயத்தின் பிரமாணம் என்பதை அறிந்து நம்முடைய சரீரமாகிய ஆலயத்தையும், சபையையும் பரிசுத்தமாய் காத்துக் கொள்ளுவோம். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *