நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் (They will know that I am the Lord)

எசே 38:23 இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/N4tvliV_6pE

எசே 35 ,36 ,37 ,38 போன்ற அதிகாரங்களின் கடைசி வசனங்களிலெல்லாம் ஒரே வார்த்தை திரும்ப திரும்ப எழுதப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம். எசே 39 ஆம் அதிகாரத்திலும் கடைசி வசனத்திற்கு முந்தின வசனமும் இதே வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்பதே. கடைசி காலத்தில் எழுப்புதல் உண்டாகும்போது நானே கர்த்தர் என்று முழு உலகத்திலும் இயேசு அறியப்படுவார். அநேக ஜாதிகளுக்கு முன்பாக என்பது, ஆங்கிலத்தில் Many Nations என்று எழுதப்பட்டுள்ளது. இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு கடைசி காலத்தில் ஆண்டவர் பல தேசங்களுக்கு கர்த்தர் என்று தன்னை வெளிப்படுத்துவார். அந்நாட்களில் உலர்ந்த எலும்புகளெல்லாம், மாபெரும் சேனையாய் எழும்பி நிற்கும் (எசே 37:10). பல வருடங்களாக இரட்சிக்கப்படாதவர்களும், இயேசு தன்னுடைய மகத்துவத்துவத்தையும், பரிசுத்தத்தையும் வெளிப்படுத்தும்போது, ஒரே நாளில் இரட்சிக்கப்பட்டுவிடுவார்கள். காரணம் பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய கல்லான இருதயத்தை அறுவை சிகிச்சை செய்து சதையான இதயமாக மாற்றிவிடுவார் ( எசே 36:27). கர்த்தர் பின்மாரியையும் முன்மாரியையும் வருஷிக்கப்பண்ணுவார். ஆகையால் தான் பக்தர் இப்படி பாடினார்: அருள் ஏராளமாய் பெய்யும் ஆண்டவர் வாக்கிதுவே, ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயிர்ப்பிக்கும் என்று அழகாக பாடினார்.

அந்நாட்களில் கர்த்தர் அவருடைய மகத்துவத்தை வெளிப்படுத்துவார். கர்த்தருடைய மகத்துவம் என்பது என்ன என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம். ஒரு லென்ஸை வைத்து சிறிய பொருளை பார்த்தால், அந்த பொருள் மிகவும் பெரியதாக தெரியுமல்லவா? அதுபோல, அவருடைய மகத்துவம் என்பது: அவர் எல்லாவற்றிலும் பெரியவர் என்பதையும், எல்லாவற்றின் மேலும் ஆளுமை உடையவர் என்பதையும் வெளிப்படுத்தும். இயேசு அசுத்த ஆவி பிடித்த ஒருவனை விடுவித்தபோது, எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பிரமித்தார்கள் (லுக் 9:43) என்று வசனம் கூறுகிறது. பேதுரு சொல்லுகிறான்: நாங்கள் அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டோம் (2 பேது 1:16) என்பதாக. அதுபோல, கடைசி நாட்களில் எல்லாரும் அவருடைய மகத்துவத்தை கண்ணார காண்பார்கள். அப்பொழுது இயேசு தான் கர்த்தர் என்று எல்லாராலும் அறியப்படுவார்.

மாத்திரமல்ல, அவர் தன்னுடைய பரிசுத்தத்தை விளங்கப்பண்ணுவார். பிசாசுகூட ஒத்துக்கொண்டான், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று (மாற் 1:24). வெளி 15:4ல் தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆண்டவர் தன்னுடைய பரிசுத்தத்தை விளங்கப்பண்ணும்போது, அவர் அநேக ஜாதிகளுக்கு, தேசங்களுக்கு கர்த்தர் என்று அறியப்படுவார். நமக்கு பிடித்த நபர் முதலமைச்சராக எல்லாராலும் அறியப்பட்டால், நம்முடைய உள்ளம் துள்ளுமல்லவா? அதுபோல தான், நம்முடைய நாயகராகிய இயேசுகிறிஸ்து, உலக ஜனங்களால் கர்த்தர் என்று அறியப்படப்போகிறார். ஆகையால் இப்பொழுதே உங்கள் உள்ளம் பரவசமடைந்து, உங்கள் நாயகரை குறித்து மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *