பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார், அவர் கையில் தூக்குநூல் இருந்தது (ஆமோஸ் 7:7).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/0HyC335FGxc
தூக்குநூல் என்பது கட்டிடம் கட்டுபவர்கள் சுவர்கள் செங்குத்தாகக் காணப்படுகிறதா என்பதை சோதித்து உறுதிசெய்வதற்கு பயன்படுத்துகிற ஒரு சிறிய கருவி. அது ஒருபோதும் பொய் சொல்வதில்லை, மாறாக அது அந்த வேலையின் நம்பகத் தன்மையையும், தரத்தையும் வெளிப்படுத்தும். கர்த்தர், நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைக்கிறவர் என்று ஏசாயா 28:17 கூறுகிறது. தேவனுடைய ராஜ்யத்தில் பாவத்தோடு எப்படிப் பிரவேசிக்க முடியாதோ, அதுபோல கோணல்களோடும், மாறுபாடுகளோடும், அநீதிகளோடும் பிரவேசிக்க முடியாது. ஆமோஸ் கண்ட தரிசனத்தில், கர்த்தர் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார், அவர் கையில் தூக்குநூல் இருந்தது, அதைக்கொண்டு அந்த மதில் தூக்குநூல் பிரமாணத்தின் படிச் சரியாய் கட்டப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தார், இல்லை என்று கண்ட வேளையில் தண்டிக்கச் சித்தம் கொண்டார். இஸ்ரவேல் ஜனங்களுடைய வாழ்க்கைச் செவ்வையாகும் என்றும், கர்த்தருடைய பிரமாணமாகிய அவருடைய வார்த்தையின் படி ஜீவிப்பார்கள் என்றும் எதிர்பார்த்து ஏமாந்த வேளையில், இனி அவர்களை மன்னிக்கமாட்டேன் என்று கர்த்தர் திருவுளம் பற்றினார் என்று ஆமோஸ் 7:7,8 கூறுகிறது. நம்முடைய ஒவ்வொரு காரியங்களையும் தூக்கு நூல் பிரமாணத்தின் படி சரியாய் காணப்படுகிறதா என்பதைச் சோதித்து அறிகிறவர்.
கோரேஸ் ராஜா, இடிக்கப்பட்ட இஸ்ரவேலின் ஆலயத்தைத் திரும்ப எடுத்துக்கட்ட கடந்து செல்ல விருப்பமுள்ளவர்கள் யார் என்று தன் பெர்சிய சாம்ராஜ்யத்தின் கீழ்க்காணப்பட்ட யூதர்களிடம் கேட்டவுடன், செருபாபேல் அந்த பொறுப்பை தன்மேல் எடுத்துக்கொண்டு சுமார் 900 மைல்கள் கடினமான பிரயாணம் செய்து எருசலேமுக்கு வந்தார். தேவனுடைய ஆலய வேலையை உத்தமாகவும், உண்மையாகவும் செய்ய செருபாபேல் பிரயாசப்பட்டதை கர்த்தருடைய கண்கள் சந்தோஷத்தோடு பார்த்தது. கர்த்தருடைய பிள்ளைகளுடைய கரங்களில் கர்த்தர் கொடுத்திருக்கிற வேலைகளை நாம் சரியாய் செய்ய வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். தாலந்துகளைச் சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறார். ஆகையால் நாம் எதைச் செய்தாலும் அதை கர்த்தருடைய கண்கள் சந்தோஷத்தோடு பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் செய்கிறவர்களாயும் கூட காணப்படவேண்டும். உத்தமமாய் கர்த்தருடைய காரியங்களைச் செய்யும் போது, கர்த்தர் உங்களை முத்திரை மோதிரமாக வைத்து அதிகாரப்படுத்துவார். செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார் (ஆகாய் 2:23).
ஆகையால், கர்த்தருக்காக எதைச் செய்தாலும் மனப்பூர்வமாய் செய்யுங்கள், உத்தம இருதயத்தோடு செய்யுங்கள். ஆதாயத்திற்காயல்ல, கட்டாயத்தின் பேரிலும் அல்ல, உற்சாகமாய் கர்த்தரைச் சேவியுங்கள். கர்த்தருடைய கண்கள் உங்களைச் சந்தோஷமாய் பார்க்கும் போது நீங்கள் இம்மையிலும், மறுமையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

