யோவா 10:10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/y5NHZ_Pqxbo
சாத்தானை திருடன் என்று வேதம் கூறுகிறது. அநேக வேலைகளில் அவனை திருடன் என்று கூறிவிட்டு நம்மை பரிசோதிக்காமல் இருந்துவிடுகிறோம். இயேசுவோடு சிலுவையிலறையப்பட்ட இரண்டு பேரும் திருடர்கள். அவர்கள் சிலுவையில் மரித்தார்கள். இன்று அநேக விசுவாசிகள் உயிர்வாழும் திருடர்களாய் இருக்கிறார்களென்றால் ஆச்சரியமில்லை.
மத் 26:40ல், இயேசு பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? என்று கூறினார். ஆண்டவருக்கு கொடுக்கவேண்டிய நேரத்தை கொடாமலிருப்பது திருட்டு என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். மல் 3:8ல் கர்த்தர் சொல்லுகிறார்: மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே என்றார். கர்த்தருக்கு கொடுக்க வேண்டிய தசமபாகத்தையும் காணிக்கையையும் கொடுக்காமல் இருப்பதும் திருட்டு என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ளுங்கள். மத் 22:21 ல் அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அரசாங்கத்துக்கு செலுத்தவேண்டிய வரியை செலுத்தாமலிருப்பதும் திருட்டு என்பதை அறிந்துகொள்ளுங்கள். 1 கொரி 3:6,7ல் பவுல் சொல்லுகிறான் நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும். தேவனுக்கு கொடுக்கவேண்டிய கனத்தையும் மகிமையும் மனிதன் எடுத்துக்கொள்ளுவதும் திருட்டு என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எபே 4:28. திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன் என்று வசனம் கூறுகிறது. குறைச்சலுள்ளவர்களுக்கு கொடுக்காமலிருப்பதும், செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இருப்பதும் திருட்டு என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
தேவஜனங்களாகிய நாம், ஆண்டவர் இதை செய் என்று கட்டளையிட்டிருக்க, நாம் செய்யாமலிருப்பது நல்ல சீஷனுக்கு அழகல்ல. அரசியல்வாதிகளும் தொண்டர்களும் சொல்லுவார்கள், தலைவா நீங்கள் கட்டளையிடுங்கள், நாங்கள் செய்கிறோம் என்பதாக. நம்முடைய தலைவர், குரு, எஜமானன், மூத்த சகோதரன், தகப்பன் கட்டளையிட்ட எல்லா காரியங்களையும் செய்வதே நம்முடைய கடமை என்றறிந்து, பிசாசின் சுபாவம் இல்லாமல் நாம் காணப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

