லுக் 17:3,4 உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/v0BQ5G5L5dE
வரும் காலங்களில் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளவும், அற்புதத்தை பெற்றுக்கொள்ளவும், சரீர நன்மைகளை பெற்றுக்கொள்ளவும் விசுவாசம் வேண்டும். இப்படியிருக்க பிறரை மன்னிக்க விசுவாசம் வேண்டுமா? இதென்ன புதிய விந்தையாய் இருக்கிறதே என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்.
விசுவாச குறைச்சல் இயேசுவோடு இருந்த சீஷர்களுக்கு இருந்தது. சுமார் நான்கு முறை சீஷர்களுக்கு இருந்த விசுவாச குறைச்சலை கண்ட இயேசு அவர்களை கடிந்துகொண்டார். சீஷர்களும் இயேசுவிடம் நன்றாக வாங்கிக்கொண்டார்கள். முதலாவதாக, சீஷர்களுக்கு என்னத்தை உண்போம் என்னத்தை உடுப்போம் என்ற கவலை இருந்தது. இந்த கவலை எப்படி சீஷர்களுக்கு வந்தது. காரணம் அவர்களுடைய விசுவாசக்குறைச்சலினால் கவலை வந்தது. ஆகையால் இயேசு சொன்னார், அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? (மத் 6 :30 ) என்று சீஷர்களுடைய விசுவாச குறைச்சலினிமித்தம் கடிந்துகொண்டார். இரண்டாவதாக, புயலும் கடல் சீற்றத்தையும் பார்த்து சீஷர்கள் மடிந்துபோகிறோம் என்று சொல்லி பயந்துவிட்டார்கள். இந்த பயம் அவர்களுக்கிருந்த விசுவாச குறைச்சலினால் தான் வந்தது. இயேசு சொன்னார், அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று (மத் 8:20). மூன்றாவதாக, பேதுரு கடலில் அமிழ்ந்தபோது, அவனுக்குள்ளாக சந்தேகம் வந்தது. இந்த சந்தேகம் அவனுக்குள்ளாக இருந்த விசுவாச குறைச்சலினால் வந்தது. இயேசு சொன்னார், அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார் (மத் 14:31). நான்காவதாக, திரளான ஜனங்கள் புசிக்க அப்பங்கள் இல்லாததினால், அவர்களுக்கு விசுவாச குறைச்சல் வந்தது. இயேசு சொன்னார், அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன? (மத் 16:8) என்றார்.
இப்படி நான்கு முறை அற்ப விசுவாசிகளே என்று சொல்லி இயேசுவிடம் சீஷர்கள் நன்றாகவே திட்டு வாங்கினார்கள். ஆனால் ஒருமுறை தான் சீஷர்கள் இயேசுவிடம் தங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்படியாக கேட்டுக்கொண்டார்கள். அது எப்பொழுதென்றால், ஒரே நாளில் தவறு செய்து மனந்திரும்பி வரும் சகோதரனை கணக்கற்ற அல்லது முடிவற்ற அளவிற்கு மன்னிக்கவேண்டும் என்று அவர் சொன்னபோது தான். சீஷர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக இது தெரிந்தது. ஒருவனை ஒரு முறை மன்னிக்கவே நம்முடைய கர்வமும், நம்முடைய ஆணவமும் அனுமதிப்பதில்லை. ஆனால் கணக்கற்றளவு மன்னிக்கவேண்டுமா? அப்படி மன்னிக்கவேண்டுமென்றால் தங்களுக்கு விசுவாசம் வேண்டும் என்று அறிந்த சீஷர்கள் உடனே கேட்டார்கள், அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள் (லுக் 17:5). பிறரை மன்னிக்க நமக்கு விசுவாசம் காணப்படவேண்டும். மனிதனென்றால் மன்னிக்கவேண்டும் என்று முதியோர்கள் சொல்லுவார்கள். அப்படி மன்னிக்க வேண்டுமென்றால் விசுவாசம் வேண்டும். சின்ன சின்ன தப்பிதங்களையும் மன்னியுங்கள், அப்பொழுது பெரிய தப்பிதங்களை மன்னிப்பது மிகவும் சுலபமாகிவிடும். யார் மீதாவது மனஸ்தாபம் இருக்குமென்றால், விசுவாசத்தோடு அந்த நபரை இப்பொழுதே மன்னித்துவிடுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

