அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம் (லூக்கா 4:23).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4D2FGHyCFdQ
இயேசு இரண்டு முறை தன்னை வைத்தியனாகக் குறிப்பிடுகிறதைச் சுவிஷேசப் பகுதியில் வாசிக்கமுடிகிறது. ஒருமுறை ஆயக்காரனும், பின்னாட்களில் இயேசுவின் சீஷனுமாய் காணப்பட்ட மத்தேயுவின் வீட்டில் போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். இயேசு அதைக் கேட்டு: பிணி யாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை என்று கூறி நீதிமான் களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்று கூறினார். இரண்டாவது முறை தன்னை அங்கீகரிக்காத தன்னுடைய சொந்த ஊராகிய நாசரேத்தைச் சார்ந்தவர்களைப் பார்த்து, வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம் என்றார். நாசரேத்தின் குடிகள் இயேசுவை ஒரு தச்சனாகவும், தச்சனுடைய மகனாகவும் பார்த்தார்களே ஒழிய, அவரை மேசியாவாகவும், வல்லமைப் பொருந்தினவராகவும் ஏற்றுக்கொள்ளவில்லை. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்ற பழமொழிக்கேற்ப அதிக அறிமுகமானவர்கள் இயேசுவை அங்கீகரிக்கவில்லை என்பதை அறியமுடிகிறது.
இயேசு பெரிய மருத்துவராகக் காணப்படுகிறார். உலகப்பிரகாரமான மருத்துவர்கள் சரீரத்தில் மாத்திரம் மருந்து மாத்திரைகள் மூலமும், அறுவை சிகிச்சைகள் மூலமும் சுகத்தைக் கொடுக்க முடியும். ஆனால் இயேசு மாம்ச சரீரத்தில் மாத்திரமல்ல, ஆவிக்குரிய சரீரத்திலும் சுகத்தைக் கொடுக்கிறவர். அவர் நின்றால், தொட்டால், பார்த்தால், பேசினால் சரீரத்தில் சுகம் உண்டாகும். பிறவிக்குருடனுடைய கண்களையும், பிறவிசப்பாணிகளையும் அவர் சுகப்படுத்தினார், மரித்து நான்கு நாளாகிப்போன லாசருவையும் உயிரோடு எழுப்பினார். அதுபோல, பாவங்களிலிருந்து பூரணச் சுகத்தை அவரால் கொடுக்கமுடியும், உடைந்து போன இருதயங்களின் காயங்களைக் கட்ட அவரால் கூடும். பிசாசினால் கட்டுண்டவர்களையும், சிறைப்பட்டவர்களையும் விடுவிக்க அவர் வல்லமையுள்ளவர், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், அவர்களை சீர்படுத்தவும் அவரால் முடியும். இயேசுவால் மாத்திரம் ஒரு மனுஷனுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தில் ஆரோக்கியத்தைக் கொடுக்க முடியும். உலக வைத்தியர்களால் கூடாதவைகளெல்லாம் பரம வைத்தியர் சரிசெய்கிறவராய் காணப்படுகிறார். ஆகையால், முதலில் உங்கள் ஆத்துமாவின் வைத்தியராய் அவரை ஏற்றுக் கொள்ளுங்கள், பின்பு, உங்கள் சரீரச் சுகத்திற்காக அவரை நோக்கி வேண்டுதல் செய்யும் போது, அவருடைய சிறகின் கீழிருக்கிற ஆரோக்கியம் உங்களை மூடும், அற்புதச் சுகத்தைப் பெற்றுக் கொள்ளுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

