லுக் 14:34,35 உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/66a80moaQ3I
நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கு உப்பு போடாமல் சாப்பிடமுடியுமா? அப்படிப்பட்ட உணவு சுவையாகத்தான் இருக்குமா? சாப்பிடும் உணவில் காரம் இல்லாமலும், இனிப்பு இல்லாமலும், உவர்ப்பு இல்லாமலும் சாப்பிட்டுவிடலாம். ஆனால் உப்பில்லாமல் சாப்பிடுவது நம்முடைய நாக்கிற்கு ஒவ்வாது. ஆகையால் உப்பு நம்முடைய உணவில் முக்கியமான பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட உப்பை வைத்து இயேசு சில சத்தியங்களை நமக்கு கற்றுக்கொடுக்கிறார். நீங்கள் உலகத்திற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்று கூறினார். அவ்வளவு தூரத்திற்கு நீங்கள் இந்த உலகத்திற்கு முக்கியமானவர்கள், இன்றியமையாதவர்கள், நீங்கள் தான் VIP என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
இப்படி இருக்கும்போது, சாரமற்ற உப்பை போல, அதாவது, சுவையில்லாத உப்பை போல நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை காணப்படுமானால், நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு பிரயோஜனமும் இல்லை. அது வெளியே கொட்டப்படுவதற்கு சமமாய் காணப்படுகிறது. சிலர் சபைக்கு உப்பை போல, வெள்ளை நிறத்தில் ஆடைகளை போட்டுகொண்டு, நல்ல மினுக்கான ஆடையாபரணங்களை அணிந்துகொண்டு வருவதுண்டு. அப்படிப்பட்ட சிலர், சபையில் தொலைபேசியை பார்த்துக்கொண்டும், வார்த்தையை அசட்டைபண்ணிக்கொண்டும் இருப்பதுண்டு. இப்படிப்பட்டவர்கள் உப்பை போன்ற நிறத்தில் ஆடைகளை அணிந்துவந்தாலும் என்ன பயன்?
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுத்து, இயேசுவின் மீது அலாதி பிரியமும் நேசமும் வைக்கவேண்டும் (லுக் 14:26). அவர்கள் தான் உப்பை போல ஜீவிப்பவர்கள். மற்றவர்களை கட்டி எழுப்புகிற வாழ்க்கை வாழ்பவர்களே உப்பை போன்ற வாழ்க்கை வாழ்பவர்கள். பதினாயிரம் சத்துரு வந்தாலும் எதிர்த்து நிற்கும் கிறிஸ்தவர்களே உப்பை போன்ற ஜீவியம் செய்பவர்கள் (லுக் 14:31). சத்துருவை பார்த்து பயந்து ஓடுபவர்கள் கிறிஸ்தவ வாழ்வில் முதல் எழுத்தாகிய A கூட கற்றுக்கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். பிசாசின் பிடியில் அகப்பட்டவர்களை விடுவிக்கும் பொறுப்பு உப்பை போல சுவைத்தரும் வாழ்க்கை வாழும் கிறிஸ்தவர்களின் கையில் இருக்கிறது. தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடுபவன் (லுக் 14:33) தான் உப்பைப்போல சுவை தரும் வாழ்க்கை வாழமுடியும். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு (1 தீமோ 6:10,11) என்று பவுல் ஆலோசனை வழங்குகிறான். அதற்கு மாறாக, உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை (லுக் 12:33) என்ற வசனத்தின்படி, மற்றவர்களுக்கு தான தர்மம் செய்யுங்கள். இப்படி வாழ்பவர்களே, வெளியே கொட்டப்படும் சாரமற்ற உப்பிற்கொப்பான வாழ்க்கை வாழாமல், சாரமுள்ள உப்பிற்கு ஒப்பான வாழ்க்கை வாழ்பவர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

