பரிசேயன் என்றால் யார் ? (Who is a Pharisee?)

மத் 23:25. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/g3MyNZ-rGvM

மாயக்காரர்கள் அதாவது மாய்மாலம் செய்பவர்கள் தான் பரிசேயர்கள் என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் மத் 6:1-18 பரிசேயர்களின் குணாதிசயத்தை சுட்டிக்காட்டினார். மனிதர்கள் தங்களை புகழ வேண்டும் என்பதற்காக மாய்மாலம் செய்பவர்கள் தான் பரிசேயர்கள் (மத் 6 :2). தானதர்மம் செய்யும்போதும், ஜெபம் செய்யும் போதும், உபவாசம் செய்யும்போதும் மனிதர்கள் தங்களை புகழ வேண்டும் என்று செய்பவர்கள், மாய்மாலம் செய்கிறவர்கள், அவர்கள்தான் பரிசேயர்கள். இந்நாட்களில் அநேக சபைகளில் பரிசேயர்கள் காணப்படுகிறார்கள். மற்றவர்கள் காணும்படி தானதர்மம் செய்து தங்களுக்கு புகழ்ச்சியை தேடிக்கொள்ளுகிறவர்கள், பார்வைக்கு வீண் வார்த்தைகளோடு நீண்ட ஜெபம் செய்பவர்கள், உபவாசத்திலும் உண்மைத்தன்மை இல்லாமல் மற்றவர்கள் தங்களை புகழ வேண்டும் என்று தங்கள் கிரியைகளை வெளிக்காட்டுபவர்கள் எல்லாரும் இன்றைய பரிசேயர்கள் தான்.

மத் 23 :23 கூறுகிறது, மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே என்பதாக. இப்படி இரக்கமற்ற சட்டதிட்டக்காரர்கள் பரிசேயர்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

மத் 23 :6 ,7ன் படி தங்களுக்கு பட்டங்களை தேடிக்கொள்ளுபவர்களும் பரிசேயர்கள் என்று தான் வேதம் கூறுகிறது. விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். பெயருக்கு முன்பாக பல பட்டங்களை போட்டுக்கொள்ள துடியாய் துடிக்கும் ஊழியக்காரர்களும் பரிசேயர்களின் சுபாவத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இதுபோல குற்றம் கண்டு பிடிப்பவர்களும் பரிசேயர்கள். இந்த பட்டியல் இந்நாட்களில் நீண்டு கொண்டே போகிறது. சபையில் தாழ்மையின் சுபாவத்தை அணிந்துகொள்ளாமல், பரிசேய குணங்களை அணிந்துகொண்டிருக்கிற திரளான விசுவாசிகள் உண்டு. அனைத்துவிதமான சபைகளிலும் இவ்வைகையான பரிசேயர்கள் இந்நாட்களில் காணப்படுகிறார்கள். Mainline சபை பரிசேயர்கள், பெந்தேகோஸ்தே சபை பரிசேயர்கள், Methedist சபை பரிசேயர்கள் என்று எல்லா சபைகளிலும் பரிசேயர்கள் காணப்படுகிறார்கள். தேவஜனங்களே, பரிசேயர்களுக்கு ஐயோ என்று ஆண்டவர் கூறியிருப்பதை அறிந்து, இவ்வகையான சுபாவங்களை ஒழித்து, கிறிஸ்துவின் சிந்தையை தரித்து வாழ உங்களை ஒப்புக்கொடுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *