இயேசு நம்முடைய  நித்தியப் பிரதான ஆசாரியன் (Jesus is our high priest forever).

நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார் (எபி. 6:20)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4gFXvSC6vpQ

ஆசாரியர்களைக் கர்த்தர் நியமித்ததின் நோக்கம் ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டும், அவர்களுக்காகத் தேவனோடு பரிந்து பேசவேண்டும், ஜனங்களின் பாவநிவிர்த்திக்காகப் பலிகளைச் செலுத்த வேண்டும், அவர்களுக்காகத் தேவனோடு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதற்காக. முதல் ஆசாரியனாக ஆரோனை கர்த்தர் நியமித்தார். உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும் படிக்கு, நீ ஆரோனையும் அவனோடே கூட அவன் குமாரராகிய நாதாப்,  அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக என்று யாத். 28:1ல் மோசேயிடம் கர்த்தர் கூறினார். மேலும்  ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை என்று எபி. 5:4ல் எழுதப்பட்டதிலிருந்து புதிய ஏற்பாட்டுச் சபையின் மேய்ப்பனுடைய ஊழியத்திற்கும் அழைப்பு என்பது மிகவும் முக்கியம்  என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

இயேசு, ஆரோனுடைய முறைமையின்படி வந்த ஆசாரியன் அல்ல, ஆரோன் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவன், இயேசு யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் மெல்கிசெதேக்கின்  முறைமையின்படி வந்த நித்திய ஆசாரியன். அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய  மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, ஆபிரகாமை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும்  தசம பாகம் கொடுத்தான் என்று ஆதி. 14:18-20ல் எழுதப்பட்டிருக்கிறது.  இந்த மெல்கிசேதேக்கு தாய், தகப்பன் மற்றும் வம்ச வரலாறு இல்லாதவன். அவனும் ஆசாரியனாய் காணப்பட்டு, ஆபிரகாமையே ஆசீர்வதித்தான்.

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம், உயிர்த்தெழுதலோடு  ஆரோனுடைய ஆசாரிய முறைமை முடிவுக்கு வந்தது.  ஆரோனுடைய ஆசாரிய ஊழியம் தற்காலிகமானது. அவன் ஜனங்களுக்களுடைய பாவநிவிர்த்திக்காகவும், தன்னுடைய பாவநிவிர்த்திக்காகவும் திரும்பத் திரும்பப் பலி செலுத்த வேண்டியதாயிருந்தது. ஆனால் இயேசு சிலுவை என்னும் ஒரே பலிபீடத்தில், நமக்காக ஒரே பலியாக ஜீவனைக் கொடுத்ததினால் இனி பலி செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆகையால  இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நம்முடைய  நித்தியப் பிரதான ஆசாரியராயனாகவும், பிரதான மேய்ப்பராகவும் காணப்படுகிறார். அவர் நம்மை ஆசீர்வதிக்கிறவர், இன்னும் ஒரு வருஷம் இருக்கட்டும் என்று சொல்லி நமக்காகப் பிதாவிடம்  பரிந்து பேசுகிறவர், ஜனங்களுக்காக மத்தியஸ்தம் செய்கிற ஒரே மத்தியஸ்தரும் அவராய் காணப்படுகிறார். நாம் சபை கூடிவரும் போது நிலையங்கி  பொற்கச்சை அணிந்தவராய் நம் நடுவில் உலாவி, ஒவ்வொருவரையும் ஆசிர்வதிக்கிறவராகவும் காணப்படுகிறார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *