மிகப்பெரிய தள்ளுபடி (Mega Discount)

லுக் 12:23. ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/jj2WjHVU7gk

இந்நாட்களில் தள்ளுபடிக்கு பஞ்சமே இல்லை. ஆகாரம் வாங்கவும் தள்ளுபடி, உடை வாங்கவும் தள்ளுபடி, மற்றும் வாகனம் வாங்கவும் தள்ளுபடி. இந்த தள்ளுபடியை கேள்விப்பட்டாலோ பார்த்தாலோ அநேகருக்கு பொறுக்கமுடியாது. ஆடி தள்ளுபடி, புத்தாண்டு தள்ளுபடி, விடுமுறை தள்ளுபடி என்ற பல தள்ளுபடி விற்பனையை அநேக விற்பனையாளர்கள் செய்வார்கள். இவற்றினால் கவர்ந்திழுக்கப்பட்டு வீணாக பொருட்களை வாங்கி குவித்தவர்கள் அநேகம். என்னதான் தள்ளுபடி போட்டாலும் இந்த குறிப்பிட்ட பொருள் வாங்குவது நல்லதா, தேவைதானா என்றெல்லாம் சிந்தியாமல், தேவ ஜனங்கள் விளம்பரங்களில் மயங்கிவிடக்கூடாது.

ஒரு விசுவாசி இப்படி தான், ஒரு வாகனம் முன்பணம் செலுத்தாமல் வாங்கலாம் என்ற விற்பனை சலுகை இருக்கிறது என்று கேள்விப்பட்டார். இதை கேட்டவுடன் அவர் கவர்ந்திழுக்கப்பட்டு, ஓடோடி அந்த வாகனத்தை வாங்கிவிட்டார். சில நாளில் இன்னொரு வாகனம் முன்பணம் செலுத்தவும் தேவையில்லை, வட்டியும் செலுத்த தேவையில்லை என்ற விற்பனை சலுகை போட்டிருப்பதை அவர் கேள்விப்பட்டார். இதை கேள்விப்பட்டவுடன் அவருக்கு மனம் சரியில்லை. ஐயோ நான் அவரசப்பட்டு இந்த வாகனத்தை வாங்கிவிட்டு இப்பொழுது வட்டி கட்டிக்கொண்டிருக்கிறேனே என்று மனத்தாங்கல் அடைந்தார்.

இப்படி தான் அநேக விசுவாசிகளும் Mega Discount என்று சொல்லக்கூடிய பெரிய தள்ளுபடிகளை பார்த்து ஏமார்ந்து போய்விடுகிறார்கள். இயேசு சொல்லிவிட்டார் உடையை பார்க்கிலும் சரீரம் விசேஷித்தது என்பதாக. ஆகையால் உங்களுக்கு விசேஷித்தது எதுவோ அதையே தேடுகிறவர்களாக காணப்படுங்கள். லுக் 12:15ல் இயேசு சொன்னார், பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். ஒரு கடைக்கு செல்லுகிறீர்களென்றால் கண்களை எல்லா இடங்களிலும் தேவையில்லாமல் அலைபாய விடாதிருங்கள். காரணம் இயேசு பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று சொல்லிவிட்டார். அப்படி அலையவிடுவீர்களென்றால், உங்கள் கண்களை இருள் அடைத்துவிடும்.

இல்லாமையில் அல்லது போதுமின்மையில் வாழக்கற்றுக்கொள்வதே தேவன் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைமுறை என்பதை அறிந்துகொள்ளுங்கள். இதை தான் பவுலும் கடைபிடித்தார். பவுல் சொல்லுகிறார், தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு (பிலி 4:12,13) என்பதாக. ஆகையால் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு இருப்பதில் திருப்தியோடு இருக்க வாழ கற்றுக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட குணாதிசயங்களும் தேவ பிள்ளைகளுக்கு வேண்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *