ஓடு, நாடு (Flee and follow).

அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு (2 தீமோ. 2:22).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/K1-Bbc6cB38

அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதும் போது இரண்டு காரியங்களை  விட்டோடும்படிக்கு எழுதுகிறார். முதலாவது பாலியத்திற்குரிய இச்சைகளை விட்டோடும்படிக்கு ஆலோசனை கூறினார். இரண்டாவது பண ஆசையை விட்டோடும்படிக்கு கூறினார். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது, சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். நீயோ, தேவனுடைய மனுஷனே,  இவைகளை விட்டோடி, நீதியையும்  தேவபக்தியையும்  விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு என்று 1 தீமோ.6:10,11ல் எழுதப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலாக நீதியையும், விசுவாசத்தையும், அன்பையும், சமாதானத்தையும், தேவபக்தியையும், பொறுமையையும், சாந்தகுணத்தையும் நாடும் படிக்குக் கூறினார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கும் ஆவியானவர் கூறுகிற ஆலோசனையாய்   இந்த வார்த்தைகள் காணப்படுகிறது. நாம் விட்டு ஓட வேண்டிய காரியங்களை விட்டோடி, நாட வேண்டிய காரியங்களையும் விரும்பிச் செய்யும்போது கர்த்தருக்கு பிரியமான ஜீவியம் செய்யமுடியும்.

மாம்சீக இச்சைகளுக்கு   ஏன் விலகி ஓட வேண்டும்? மனுஷன் செய்கிற மற்ற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பானதாய் காணப்படும், ஆனால் வேசித்தனஞ் செய்யும்போது   சுய சரீரத்திற்கு விரோதமாகவே  பாவஞ்செய்கிறோம் என்று 1 கொரி. 6:18ல் எழுதப்பட்டிருக்கிறது. கண்களின் இச்சைகள் கூட வேசித்தனத்திற்கு ஒப்பாய் காணப்படுகிறது. இந்நாட்களில் காணப்படுகிற   ஸ்மார்ட் டிவைஸ்கள் எல்லாம் கண்களின் இச்சைகளைத் தூண்டுகிறதாயும், சரீரத்தைக் கறைப்படுத்துகிறதாயும் காணப்படுகிறது. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள்  உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா என்று வேதம் கூறுகிறது. நம்முடைய சரீரம் நமக்குரியது அல்ல, அது தேவனுடைய ஆலயமாய்க் காணப்படுகிறது. ஆகையால் அதிக நேரங்களை  இப்படிப்பட்டவற்றில்  செலவழித்து, உங்கள் சரீரங்களை ஒருநாளும்  கெடுத்துவிடாதிருங்கள்.

பணம் எல்லோருக்கும் தேவை என்பதையும், அது எல்லாவற்றிற்கும் உதவும் என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் பண ஆசையை விட்டோடும்படிக்கு கர்த்தர் கூறுகிறார். பண ஆசை, அநீதிகளின் வழியை தெரிந்தெடுக்கும் படிக்குச் செய்கிறது, லஞ்சம் வாங்கும்படிக்கும்,  மற்றவர்களை ஏமாற்றும்படிக்கும்,  கொலலைசெய்யும்படிக்கும் தூண்டுகிறது. சிலவேளைகளில் ஆலயங்களுக்கு வருவதைக் கூட தடைசெய்கிறது.  போதுமென்கிற  மனமும், மன ரம்மியமும் கர்த்தருடைய பிள்ளைகளிடம் குறைந்துகொண்டு வருகிற நாட்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்  பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது?  கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும் என்று யாக். 4:13-15 கூறுகிறது. நம்முடைய உயிரானது புகையைப் போல நிலையற்றது என்றும், நாளைய தினம் நம்முடையது அல்ல என்பதையும் அறிந்து, பணத்திற்கு பின்பு  ஓடுகிறவர்களாய்  காணப்படாதிருங்கள். பண ஆசையும் பொருளாசையும் பிடிந்த கேயாசி  நாகமானுடைய குஷ்டத்தைச் சம்பாதித்தான் என்பதை மறந்து போகாதிருங்கள். ஆகையால் இச்சைகளையும், பண ஆசையையும் விட்டோடி நீதிக்குரிய ஜீவியத்தை நாடுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *