அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார் (ரோமர் 8:26).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/VeYG3LT0qGM
ஆவியானவர் நம்முடைய வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நமக்கு உதவிசெய்கிறார் என்பதையறியும் போது நமக்குள் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகிறது. நாம் கொஞ்ச அறிவு உடையவர்கள், சில வேளைகளில் பிதாவின் சித்தத்திற்கு ஏற்றபடி வேண்டுதல் செய்ய அறியாமல் காணப்படுகிறோம். ஆனால், பிதாவின் சித்தத்தை முழுவதும் அறிந்த ஆவியானவர் பரிசுத்தவான்களுக்காக, அதாவது நமக்காக வேண்டுதல் செய்கிறவராய் நம்மோடு காணப்படுவது பாக்கியமாய் காணப்படுகிறது. குறிப்பாக நாம் பலவீனத்தோடும், துயரத்தோடும், பயத்தோடும், தோல்விகளின் நடுவிலும் காணப்படும் போது, நாம் ஜெபிக்க முடியாதவர்களாயும், ஜெபிப்பதற்குச் சரியான வார்த்தைகள் இல்லாதவர்களாயும் காணப்படுகிற சூழ்நிலைகள் உண்டு. அவ்வேளைகளில் ஆவியானவர் நம்மோடு இணைந்து நமக்காக, நம்மூலம் ஜெபிக்கிறவராய் காணப்படுவார். பிள்ளைகள் இல்லாத அன்னாள் தேவாலயத்தில் கடந்து சென்று ஜெபித்த போது, அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம் பண்ணுகிறதை ஆசாரியனாகிய ஏலி கவனித்துக்கொண்டிருந்தான். அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள், அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை, ஆகையால் அவள் குடித்து வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து, அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னை விட்டு விலக்கு என்றான். அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ. நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை, நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன் என்றாள். அது அவளுடைய பெருமூச்சின் ஜெபமாகக் காணப்படுகிறது. எகிப்தில் பார்வோனின் ஆளோட்டிகளின் நிமித்தம் இஸ்ரவேல் ஜனங்கள் அதிகமாய் நெருக்கப்பட்ட வேளையில் அவர்களால் ஜெபிக்கமுடியவில்லை, பெருமூச்சுவிடுகிறவர்களாய் காணப்பட்டார்கள், அதுதான் அவர்களுடைய ஜெபமாயிருந்தது. யோசபாத் ராஜாவிற்கு விரோதமாக ஏராளமான ஜனங்கள் யுத்தத்திற்கு வந்த போது, அவன் பயந்து ஜெபிக்க இயலாதவனாய், எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்று கூறினான்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஆவியானவர் நம்முடைய இருதயத்தின் வேதனைகளை அறிந்து, நமக்கு உதவிசெய்வார். அவருடைய நாமங்களில் ஒன்று பராக்கிளிற்றஸ் என்பதாய் காணப்படுகிறது. அவர் நம்முடைய பக்கத்தில் நின்று நமக்கு உதவிசெய்கிறவர் என்பது அதின் அர்த்தம். எப்படி ஜெபிக்க வேண்டும் என்றும், எதற்காக ஜெபிக்க வேண்டும் என்றும், சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்தோடு ஜெபிப்பது எப்படி என்றும் அவர் கற்றுத்தருகிறவராய் நம் அருகில் காணப்படுவார். நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள், அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள் என்பதாக மத். 6:7ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆவியானவர் நம்மூலம் ஜெபிக்கும் போது வீண் வார்த்தைகளை நாம் சொல்லாதபடிக்கு, பிதாவின் சித்தத்தை அறிந்து, கருத்தோடு ஜெபிக்கும் படிக்குச் செய்வார். அப்பொழுது பிதாவாகிய தேவன் நம்முடைய வேண்டுதல்களைக் கேட்டு உடனடியாகப் பதில் தந்து நம்மை களிகூரும் படிக்குச் செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

