வாய்க்கு பூட்டு போடுங்கள் (Zip your mouth)

சங் 141:3. கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/s7WRZWIy83k

ஒவ்வொரு ஊரும் ஒரு பொருளில் பிரபலமாக இருக்கும். மதுரையில் மல்லிகை பிரபலம், சேலத்தில் மாம்பழம் பிரபலம், திருநெல்வேலியில் ஹல்வா பிரபலம், அதுபோல, திண்டுக்கல்லில் பூட்டு பிரபலம். அப்படிப்பட்ட பூட்டு விசுவாசிகளாகிய ஒவ்வொருவருக்கும் வேண்டும். காரணம் வீட்டிலிருக்கும் கதவை பூட்ட அல்ல, வாயை பூட்டுவதற்கு அது தேவையாய் இருக்கிறது என்றால் மிதமிஞ்சிய காரியமல்ல. இன்றைக்கு அநேக விசுவாசிகள் வாயை கட்டுவதில்லை. மனதிற்கு வந்ததை நான் பேசிவிடுவேன் என்று சொல்லி மற்றவர்களை காயப்படுத்தி, தாங்களும் நிம்மதியாக இல்லாமல் இருப்பதுண்டு. இப்படி தான் ஒரு சகோதரி ஒரு போதகரிடம் சொன்னார், நான் மனதிலிருப்பதை பட்டுனு பேசிவிடுவேன். இருந்தாலும் பேசிவிட்டு நான் பேசியதை பெரிதாக நினைத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்லிவிடுவேன் என்று சொன்னார்கள். அப்பொழுது அந்த போதகர் சொன்னார், நானும் கோபம் வந்தால் என் கையிலிருக்கும் துப்பாக்கியை வைத்து உங்களை சுட்டுவிட்டு, பின்பு, நான் உங்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டேன் என்பதை பெருசுபடுத்தவேண்டாம் என்று சொல்லுவேன் என்றாராம். இப்படித்தான் அநேகர் அநேகரை தங்கள் வாய்க்கு பூட்டு போடாமல், அதாவது, காவல் போடாமல், நினைத்ததையெல்லாம் பேசிவிடுவார்கள்.

உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும் என்று யாக் 1:26 கூறுகிறது. அப்படியென்றால் வாய்க்கு பூட்டு போடாதவர்கள் யாராக இருந்தாலும் தேவ பக்தியற்றவர்கள் என்று அர்த்தம். ஒரு வீட்டிற்கு வாசல் இருப்பதைப்போல, நம்முடைய ஆத்துமாவிற்கு வாய் தான் வாசல். இந்த வாசலை சரியாக நாம் பயன்படுத்தவில்லையென்றால், ஆத்துமா பழுதடைந்துவிடும். இதையறிந்துதான் தாவீது, கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும் என்று ஜெபிக்கிறார். இப்படிப்பட்ட ஜெபத்தை வாழ்நாளில் என்றாவது நாம் ஜெபித்திருக்கிறோமா? என் வாயை நான் காத்துக்கொள்ள உதவிசெய்யும் என்று ஒருமுறையாவது ஜெபித்தது ஞாபகத்திலிருக்கிறதா? அப்படி இல்லையென்றால், இன்றே தாவீது ஏறெடுத்த ஜெபத்தை ஏறெடுங்கள். உங்கள் ஆத்துமாவை காத்துக்கொள்ளுங்கள்.

மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு மத் 12:36ல் கூறினார். ஒரு நாளைக்கு ஒரு ஆண் சராசரியாக 7000 வார்த்தைகளையும், ஒரு பெண் சராசரியாக 20,000 வார்த்தைகளையும் பேசுகிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இப்படி பேசும் வார்த்தைகளில் எத்தனை வார்த்தைகள் வீணான வார்த்தைகள் என்று சற்று உங்களை நீங்களே நிதானித்துப்பாருங்கள்.

அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும் என்று எபே 5:4 கூறுகிறது. புத்தியீனமான பேச்சு, கெட்ட வார்த்தை, பரியாச வார்த்தைகள், பொய் வார்த்தைகள், குற்றப்படுத்துகிற வார்த்தைகள், இரண்டு அர்த்தங்களில் பேசும் வார்த்தைகளை அறவே தவிர்த்து உங்கள் வாய்க்கு காவல் வைக்கும்படி ஆண்டவரிடம் கேளுங்கள். அதற்கு பதிலாக, உங்கள் வாயிலிருந்து ஸ்தோத்திரங்கள் பெருகட்டும். ஸ்தோத்திரம் செலுத்தும் நாவு இருக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் செய்யும் காரியம் மகத்தானவைகளாய் இருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *