சந்தோஷமாயிருங்கள்:-

பிலிப்பியர் 4 : 4. கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.

நம்முடைய வாழ்வில் நல்ல சம்பவங்கள் நடக்கும்போது, நமக்கு பிரியமான சூழ்நிலையில் கடந்து செல்லும்போது எளிதாக சந்தோசமாக ஆகிவிடுகிறோம். அதே நேரத்தில் உங்கள் சூழ்நிலைகள் பாடுகளும், வேதனைகளும், துக்கங்களும் நிறைந்ததாக காணப்படுகிறதா? அப்படியென்றால் உங்கள் வாழ்க்கை கரடுமுரடாக இருக்கும்போது உங்கள் விசுவாசம் வளர ஒரு சந்தர்ப்பம் உண்டென்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள். உங்கள் பிரச்சனைகளிலிருந்து நழுவி வெளியே செல்வதை காட்டிலும், அதை சந்தோசமாக எண்ணி களிகூருங்கள். யாக்கோபு 1 : 2 – 3ல்  என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் என்று ஆவியானவர் எழுதி வைத்திருப்பதை பார்க்கலாம்.

கர்த்தர் நம் ஒவ்வருவருடைய வாழ்விலும் ஒரு திட்டத்தை நாம் பிறப்பதற்கு முன்பே வைத்திருக்கிறார். எங்கு பிறக்க வேண்டும், யார் பெற்றோராய் இருக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும், எங்கு வேலை செய்ய வேண்டும் என்று எல்லாம் அவர் முன்குறித்ததினிமித்தமாக நடைபெறுகிறது. ஆகையால் யார் உங்களை துன்பப்படுத்தினாலும்; அது ஒரு வேலை பக்கத்துக்கு வீட்டாராக இருக்கலாம், வேலை செய்யும் இடத்தில உடன் வேலையாட்களாயிருக்கலாம், உயர் அதிகாரியாக இருக்கலாம் எல்லாவற்றிக்காகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி அவர்களிடம் அன்பு கூறுங்கள். அப்பொழுது உங்கள் சந்தோசம் நிறைவாய் இருப்பதை பார்க்கலாம்.

அநேக சோதனைகள் வாழ்வில் வருகிறதா, கர்த்தர் சொல்லுகிற காரியம்  அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும் (1 பேதுரு 1 : 7 ). ஆகையால் விசுவாசம், பொறுமை என்னும் ஆவிக்குரிய கனிகளில் விருத்தியடைவதற்கு எல்லா சோதனைகளிலும் சந்தோசமாய் இருங்கள்.

பாபிலோனுக்கு யூதர்கள் சிறைபட்டுப்போவார்கள் என்பதை எரேமியாவுக்கு காட்டின கர்த்தர், நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே (எரேமியா 29 : 11 ) என்று சொன்னார். சிறைப்பட்ட வாழ்வு இருக்குமென்றால் கர்த்தர் அவற்றை சமாதானத்துக்கு ஏதுவாக மாற்றுவார் என்றெண்ணி சந்தோசமாய் இருங்கள். நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம் என்றும் வேதம் நமக்கு சொல்லுகிறது.

I தெசலோனிக்கேயர் 5:16 எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் என்று வாசிக்கிறோம். எல்லா சூழ்நிலைகளிலும் உயர்வு, தாழ்வு, இழப்பு, காத்திருப்பு, கவலை, கஷ்டம், வியாகுலம், மகிழ்ச்சி என்று எப்பொழுதும் சந்தோசமாய் இருங்கள். கடந்து செல்லுகிற எந்த பாதையாக இருந்தாலும் அதற்கு நன்றி கூறி, ஸ்தோத்திரம் செலுத்தும் போது நம்முடைய இருதயத்தில் சந்தோசம் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க முடியும்.

II கொரிந்தியர் 13:11 கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.

கவலை, போராட்டம், சோர்வை களைத்து சந்தோஷமாயிருங்கள்.

கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.

Bro. Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *