அதீத நம்பிக்கை (Overconfidence)

யோசுவாவினிடத்தில் திரும்பிவந்து, அவனை நோக்கி: ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை, ஏறக்குறைய இரண்டாயிரம்  மூவாயிரம் பேர் போய், ஆயியை முறிய அடிக்கலாம், எல்லா ஜனங்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை, அவர்கள் கொஞ்சம் பேர்தான் என்றார்கள் (யோசுவா 7:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/kB7057j39N8

யோசுவாவும் அவன் ஜனங்களும் கர்த்தர் சொன்னபடியே செய்து எரிகோ பட்டணத்தை எளிதாகப் பிடித்தார்கள். அவர்கள் அங்கே இரத்தம் சிந்தி யுத்தம் செய்யவில்லை, யுத்தத்தில் வல்ல தேவன் அவர்களுக்காக யுத்தம் செய்து அதை சுதந்தரிக்கும் படிக்குச் செய்தார். அடுத்ததாக அவர்களுக்கு முன்பாக ஆயி பட்டணம் காணப்பட்டது.  யோசுவா தேவனிடத்தில் ஆயியைப் பிடிப்பது எப்படி என்று ஆலோசனை கேளாதபடி, எரிகோவில் எளிதாகக் கிடைத்த வெற்றியின் நிமித்தம், மிதமிஞ்சிய தன்னம்பிக்கையோடு, சில வேவு காரரை  அந்தப் பட்டணத்திற்கு அனுப்பி வேவு பார்க்கும் படிக்குச் செய்தான். அவர்கள் திரும்ப வந்து, தலைவனைப் போல அதீத நம்பிக்கையோடு, எல்லாரும் யுத்தத்திற்குப் போகவேண்டிய அவசியமில்லை, இரண்டாயிரம் மூவாயிரம் பேர் போய் ஆயியை முறிய அடிக்கலாம், அவர்கள் கொஞ்சம் பேர்தான் என்று எதிரியின் பலத்தை மட்டுப்படுத்தி இவர்களைப் பெரியவர்களாகக் கருதி  அப்படிக் கூறினார்கள். அவ்வாறு அவர்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் யுத்தத்திற்குப் போனார்கள். ஆனால் ஆய் பட்டணத்து ஜனங்களுக்கு முன்பாக தோற்றுப்போய், புறமுதுகுகாட்டி ஓடினார்கள், இவர்களில் சுமார் முப்பத்தாறு பேரை ஆய் பட்டணத்தின் குடிகள் கொன்றுபோட்டார்கள். அதீத நம்பிக்கை தோல்வியைக் கொடுத்தது. அதுபோல சிம்சோனும் கர்த்தருடைய ஆவியானவர் தன்னை விட்டு விலகினதையும், தன்னுடைய பலத்தை    இழந்ததையும் அறியாமல், மிதமிஞ்சிய நம்பிக்கையோடு, எப்போதும் போல பெலிஸ்தியர்களை உதறிவிட்டுச் செல்வேன் என்றான், ஆனால் பெலிஸ்தியர்கள் அவனை மேற்கொண்டு, அவன் கண்களைப் பிடுங்கி ஒரு கோமாளியைப் போல வேடிக்கைக் காட்டுகிறவனாய் மாற்றினார்கள். 

கர்த்தருடைய பிள்ளைகளே, எப்பொழுதும், எல்லாக் காரியத்திலும் ஆண்டவரை சார்ந்து ஜீவியுங்கள். அப்போஸ்தலனாகிய பவுலைப் போல, எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல, எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது என்று 2 கொரி. 3:5ல் எழுதியிருக்கிறபடி நீங்களும் அறிக்கையிடுங்கள். தாவீதைப் போல ஆண்டவரை சார்ந்து ஜீவியுங்கள். அவனை இஸ்ரேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது யுத்தத்திற்கு வந்தார்கள், தாவீது தேவனிடத்தில் விசாரித்தான். அப்பொழுது  பெலிஸ்தருக்கு விரோதமாய்ப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக் கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர்: போ, பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்றார். அப்படியே யுத்தத்திற்குச் சென்று அவர்களை மேற்கொண்டான். இரண்டாம் முறையும்  பெலிஸ்தியர்கள் யுத்தத்திற்கு வந்தபோது, அவன் தன்னம்பிக்கையோடு யுத்தத்திற்குச் செல்லாமல் கர்த்தரிடம் மீண்டும் விசாரித்தான். இந்த முறை கர்த்தர் யுத்த முறைமைகளை மாற்றி, முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும் மட்டும் காத்திருந்து பின்பு யுத்தத்திற்குச் செல் என்றார். தாவீது கர்த்தரை சார்ந்து அவருடைய வார்த்தையின்படி செய்ததால் கர்த்தர் மீண்டும் ஜெயத்தை அவனுக்குக் கொடுத்தார். நீங்களும் ஆண்டவரை எல்லாக் காரியத்திலும் முழுமையாய் சார்ந்து ஜீவிக்கும் போது, கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணி உங்களுக்கு வெற்றியைக் கொடுப்பார். உலகம் உன்னால் முடியும், உனக்குத் தன்னம்பிக்கையிருந்தால் மட்டும் போதும் என்று கற்றுத்தந்து ஆண்டவரை விட்டு விலகும் படிக்குச் செய்யும். ஆண்டவரை அறிந்த நீங்கள், அவரை சார்ந்து நின்றால்தான் எல்லாம் கூடும் என்று நம்பிக்கையோடு வாழ பழகிக் கொள்ளுங்கள், அப்போது உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *