பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரணகாணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பி விடுங்கள் (1 சாமு. 6:8).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mXN51YHuOJM
ஆசாரியனாகிய ஏலியின் குமாரர் பாவம் செய்தார்கள். ஏலி தேவனைப்பார்க்கிலும் தன் குமாரர்களை மதிக்கிறவனாய் காணப்பட்டான். இந்தச் சூழ்நிலையில் பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாய் யுத்தத்திற்கு வந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியோடு யுத்தத்திற்குச் சென்றால் அது கர்த்தருடைய சமூகம் தங்களுடன் வருவதற்குச் சமம் என்று நினைத்து, கர்த்தருடைய பெட்டியுடன் யுத்தத்திற்கு சென்றார்கள். ஆனால் பெலிஸ்தியர்கள் அவர்களை மேற்கொண்டு, கர்த்தருடைய பெட்டியையும் பிடித்துக்கொண்டார்கள். அதை வெற்றிக் கோப்பையாகக் கருதி பெலிஸ்தியர்கள் ஏழு மாதமளவும் அவர்கள் தேசத்தில் வைத்திருந்தார்கள். பின்பு கர்த்தர் அவர்களைப் பலவிதமான வாதைகளினால் வாதித்தார். ஆகையால் அவர்கள் பயந்து கர்த்தருடைய பெட்டியை இஸ்ரவேல் தேசத்திற்கு அனுப்பிவிடத் தீர்மானித்தார்கள். அதை எப்படி அனுப்புவது என்பதற்குப் பூசாரிகளையும் குறிசொல்லுகிறவர்களையும் வரவழைத்து ஆலோசனை கேட்டு, அதன்படி மாட்டுவண்டியில் வைத்து, இரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து அவைகளை வண்டியிலே கட்டி, அவர்கள் செய்த குற்றத்திற்காகக் குற்ற நிவாரண பலி காணிக்கையையும் வைத்து அனுப்பிவிட்டார்கள். லேவியர் ஒழிய வேறொருவரும் தேவனுடைய பெட்டியைச் சுமக்கலாகாது, தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடை செய்யவும், கர்த்தர் அவர்களையே தெரிந்துகொண்டார் என்பதைக் குறித்த அறிவு அவர்களுக்கு இல்லாதிருந்தது, ஆகையால் அப்படிச் செய்தார்கள்.
கர்த்தருடைய பெட்டி பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து நின்றது. அங்கிருந்து கீரியாத்யாரீமுக்கு அனுப்பி, அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்தார்கள். அங்கே இருபது வருடங்கள் கர்த்தருடைய பெட்டி காணப்பட்டது. அதன்பின்பு, தாவீது ராஜாவாகிய வேளையில் கர்த்தருடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவரத் தீர்மானித்தான். அவன் கர்த்தருடைய பிரமாணங்களை அறிந்திருந்தும், லேவியர்கள் கர்த்தருடைய பெட்டியைச் சுமக்க வேண்டும் என்பதைத் தெரிந்திருந்தும், பெலிஸ்தியர்கள் செய்த முறைமையைப் பின்பற்றி, அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது ரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டு, அதாவது ஒரு புது மாட்டுவண்டியில் மாடுகளைக் கட்டி அதன்மேல் கர்த்தருடைய பெட்டியை வைத்துக் கொண்டுவந்தான். தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழுப் பலத்தோடும் தேவனுக்குமுன்பாகச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள். மாடுகள் இடறினவேளையில் ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினதின் நிமித்தம் கர்த்தர் அவனை அடித்தார். தாவீது பயந்து கர்த்தருடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டான். அவன் பெலிஸ்திய முறைமைகளைப் பின்பற்றியதின் நிமித்தமும், பிரமாணங்களின்படி செய்யாததின் நிமித்தமும், அவன் முழுபெலத்தோடும் சந்தோஷத்தோடும் கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடினபோதும் கர்த்தர் அவனில் சந்தோஷப்படவில்லை. இந்நாட்களிலும் அனேகர் வேத்ததிற்கு புறம்பான வாழ்க்கை வாழ்ந்தும், ஆடிப்பாடி நடனமாடிக் கொண்டு காணப்படுகிறார்கள், கர்த்தர் அவர்களைக் குறித்து மகிழ்ச்சியடையவில்லை.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஒருநாளும் பெலிஸ்திய முறைமைகளைக் கைக்கொள்ளாதிருங்கள். வசனத்தின் வெளிச்சத்தில் வாழ உங்களை முழுவதுமாய் அர்ப்பணியுங்கள். நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியங்களையும் வேதம் அங்கீகரிக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். அப்போது ஆண்டவருடைய பிரியம் உங்கள் மேலிருக்கும். நீங்கள் வாழ்ந்து சுகித்திருப்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

