சுயபுத்தி (Own Understanding)

நீதி 3:5,6 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ORsNM43RBe8

ஒரு மனிதனுக்கு சொல்புத்தியிருக்க வேண்டும் இல்லையென்றால் சுயபுத்தியிருக்க வேண்டும் என்று உலகம் சொல்லும். நமக்கு வேதம் கூறுகிற சத்தியம் என்னவென்றால், சுயபுத்தியின்மேல் சாயாமல், முழு இருதயத்தோடும் கர்த்தர் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்பதாக. இன்று சுயபுத்தியின் மேல் சாய்ந்து அநேக காரியங்களை குறித்து யோசித்து, இது இப்படி நடந்துவிடுமோ, அது அப்படி நடந்துவிடுமோ என்று கவலையின் ஆழத்திற்குள் கடந்துசெல்லுகிறவர்கள் உண்டு.

சொந்த அறிவு, சொந்த ஞானத்தை பயன்படுத்தி சாதிக்கவேண்டும் என்று நினைக்காமல் முழு இருதயத்தோடும் கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருங்கள். முழு இருதயத்தோடும் என்பது வாழ்வின் ஏற்ற தாழ்வுகளிலும், எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருக்க வேண்டும். இன்று அநேக விசுவாசிகள் தாங்கள் கர்த்தர் மேல் முழு நம்பிக்கையாய் இருக்கிறோமென்று சொல்லுகிறார்கள், ஆனால், வாழ்வில் ஒரு சோதனையோ, புயலோ அடிக்கும்போது தங்கள் நம்பிக்கையை இழக்கிறார்கள். தங்களுடைய விசுவாசமும் காற்றில் பறக்கவிட்ட பட்டத்தை போல மாறிவிடுகிறது. ஒரு ஷாப்பிங்மால் போகும்போது அங்கே செல்லாத பணநோட்டுகளை அலங்காரத்திற்காக வைத்திருப்பார்கள். அந்த செல்லா பண நோட்டை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அதுபோல தான் அநேகருடைய விசுவாசம் செல்லா பண நோட்டை போல இருக்கிறது. சோதனை வந்தவுடன், கர்த்தர் மேல் வைத்திருக்கும் விசுவாசம் செல்லா பண நோட்டை போல மாறிவிடுகிறது. வாழ்க்கையில் என்ன புயல் அடித்தாலும், சுயபுத்தியின்மேல் சாயாமல் கர்த்தர் மேல் எல்லா காரியத்திலும் முழு இருதயத்தோடு நம்பிக்கையாய் இருங்கள்.

உங்கள் வழிகளிலெல்லாம் கர்த்தரை நினைத்துகொள்ளங்கள். அர்த்தம் என்னவென்றால், வாழ்க்கையின் எல்லாப்பகுதிகளிலும் ஆண்டவர் ஆளுகை செய்து, அவர் உங்களுக்கு ஆலோசனை சொல்ல உங்களை விட்டுக்கொடுங்கள். இன்று அநேக விசுவாசிகள் செய்கிற காரியம், வாழ்க்கையில் அநேக முடிவுகளை தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்து முடிவெடுத்துவிடுகிறார்கள். ஏதாவது ஒருசில காரியங்களை மாத்திரம் ஆண்டவருடைய கரங்களில் ஒப்புக்கொடுத்து, கர்த்தர் பார்த்து கொள்ளட்டும் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்டவர் உதவுவது இல்லை. ஆண்டவர் உங்கள் வாழ்க்கையின் எல்லாப்பகுதிகளிலும் ஆளுகை செய்ய விரும்புகிறார். உங்கள் வேலை காரியத்தில், பிள்ளைகளின் காரியத்தில், உங்கள் குடும்ப வாழ்வில், உங்கள் ஊழியத்தில் எல்லா காரியங்களிலும் அவர் ஆளுகை செய்து, உங்களுக்கு ஆலோசனை கொடுக்க விட்டுக்கொடுங்கள். Benz Car வாங்கவேண்டுமென்றாலும், சாதாரண Bicycle வாங்கவேண்டுமென்றாலும், வீடு வாங்கவேண்டுமென்றாலும், நிலம் வாங்கவேண்டுமென்றாலும் எல்லா காரியத்திலும் உங்கள் சுயபுத்தியின்மேல் சாயாமல், முழு இருதயத்தோடு கர்த்தரிடம் தெரியப்படுத்துங்கள்.

உங்கள் வழிகளிலெல்லாம் கர்த்தர் ஆளுகை செய்ய விட்டுக்கொடுக்கும்போது, அவர் ஒரு வாக்குத்தத்ததை கொடுக்கிறார். அப்பொழுது, அவர் உங்கள் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் என்று வசனம் கூறுகிறது. நீங்கள் போகும் பாதை ஒருவேளை கரடு முரடானதாக இருக்கலாம்; வழி தெரியாமல் திகைத்துக்கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் பாதைகளை நேராக்குகிற, செவ்வைப்படுத்துகிற கர்த்தர் உங்களுக்கு உண்டு என்பதை மறந்துபோய்விடாதிருங்கள். அவர் கோணலானவைகளை செவ்வைப்படுத்துகிறவர்; திறப்பானவைகளை அடைக்கிறவர். ஆகையால், உங்கள் சுயபுத்தியை பூமிக்கு ஆழத்தில் புதைத்து வைத்துவிட்டு, முழு இருதயத்தோடும் கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருங்கள். அவர் உங்கள் பாதைகளை செவ்வையாக்குவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *