லுக் 22:61,62 அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/3Q3nIs0bH1A
இயேசுவின் 12 சீஷர்களில் பேதுரு மற்றும் யூதாஸ்காரியோத்து இரண்டு பேரும் காணப்பட்டார்கள். பேதுரு இயேசுவின் உள்வட்டத்திற்குள் இருந்தவன்; யூதாஸ் இயேசுவின் வெளிவட்டத்திற்குள் இருந்தவன். யூதாஸ் தான் இயேசுவை முப்பது வெள்ளிக்காசுக்காக பிரதான ஆசாரியரிடத்திலும், பரிசேயரிடத்திலும் காண்பித்துக்கொடுத்தவன். பேதுரு மற்றும் யூதாஸ் இரண்டு பேரும் பாவம் செய்தார்கள். அவர்கள் செய்த பாவத்தில் யார் செய்த பாவம் பெரியது என்று பாருங்கள். யூதாஸ் இயேசுவை தெரியும் என்று சொன்னான். ஆனால் பேதுரு இயேசுவை தெரியாது என்று கூறினான். யூதாஸ் இயேசுவை ஒரு முறை தான் தெரியும் என்று சொல்லி காட்டிக்கொடுத்தான். ஆனால் பேதுரு இயேசுவை மூன்று முறை தெரியாது என்று சொல்லி மறுதலித்தான். கூடவே பேதுரு இயேசுவை சபிக்கவும் செய்தான். இயேசுவிடம் எந்த ஒரு வாக்குறுதியையும் கொடுக்காமல் யூதாஸ் காணப்பட்டான். ஆனால் பேதுரு, ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்று வாக்களித்து, சொன்ன வார்த்தையை நிறைவேற்றாமல், இயேசுவை மறுதலித்தான்.
இப்படி யூதாசை காட்டிலும் பெரிய மற்றும் அதிகமான பாவங்களை செய்தவன் பேதுரு என்று சொல்லலாம். ஆனால் இவ்விரண்டு பேரில் யார் மன்னிப்பை பெற்றுக்கொண்டார்கள்? யூதாஸ் தான் செய்தது பாவம் என்று ஆசாரியர்களிடம் போய் அறிக்கையிட்டான் பின்பு அவன் நான்று கொண்டு செத்தான். ஒருவேளை யூதாஸ் தான் செய்தது பாவம் என்று எண்ணி இயேசுவிடம் வந்திருப்பானென்றால், அவன் தன்னுடைய பாவத்தை அறிக்கை செய்து முடிக்கும் வரைக்கும் இயேசு காத்திராமல், சிநேகிதனே என்று சொல்லி ஆரத்தழுவி அவனை ஏற்றுக்கொண்டிருப்பார். அதுதான் கெட்டகுமாரன் என்று அழைக்கப்படும் இளையகுமாரனுக்கு நடந்தது. அவன் தன்னுடைய பாவம் முழுவதையும் அறிக்கைசெய்து முடிக்கும் வரை தகப்பன் காத்திருக்கவில்லை. உடனே தகப்பன் இளைய குமாரனை ஏற்றுக்கொண்டு பெரிய விருந்தை செய்தான். பரிதாபம் யூதாஸ் மனிதனை நோக்கி கடந்துசென்றான். ஆனால் பேதுரு, தான் செய்தது பாவம் என்று இயேசுவிடம் அறிக்கையிட்டு அவரோடு ஒப்பரவாகி மீண்டும் தன்னுடைய ஸ்தானத்தில் நிலை நிறுத்தப்பட்டான். பேதுரு தான் செய்தது பெரிய பாவம் என்று அறிந்து மனம் கசந்து அழுதான். ஒருவேளை நீங்கள் செய்தது பெரிய பாவம் என்று எண்ணிக்கொண்டிருக்கலாம். நீங்கள் பேதுருவை போல இயேசுவிடம் ஒப்புரவாகும்போது, அவர் உங்கள் பாவங்கள் குற்றங்கள் எல்லாவற்றையும் மன்னித்துவிடுவார். காரணம் அவர் எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி.
பரிசேயன் வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். இவர்களில் இரண்டு பேரில் ஆயக்காரனே இயேசுவோடு ஒப்புரவாகி வீட்டுக்கு திரும்பி போனான் (லுக் 18:10-14). ஆயக்காரனை போலவும், இளைய குமாரனை போலவும், பேதுருவை போலவும் இயேசுவோடு ஒப்புரவாகுங்கள். எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும் எல்லாவற்றையும் மன்னித்து மீண்டும் உங்களை அவர் விரும்பும் ஸ்தானத்தில் உங்களை நிறுத்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

