ஜெயங்கொள்ளுகிறவன் (The conqueror)

வெளி 3:21. நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Ew2e8ofhIHs

தாவீது கோலியாத்தை வீழ்த்தி ஜெயத்தை பெற்றான். தாவீது கோலியாத்தை வீழ்த்தியபோது, அவனுக்கு துணையாக எந்தவொரு மனிதனும் கூட நிற்கவில்லை. ஆனால் அவன் பெற்ற ஜெயம் அவனுக்கு மாத்திரமல்ல, முழு இஸ்ரவேல் தேசத்திற்கும் அந்த ஜெயம் சொந்தமாக மாறியது. அதுபோல தான், இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்தபோது, சாத்தானின் சகல தந்திரங்களையும் அவிழ்த்து அவனை தன்னுடைய காலால் மிதித்து, இயேசு சிலுவையில் வெற்றி சிறந்தார். இயேசு வெற்றி சிறந்தது அவருக்கு மாத்திரம் சொந்தமானதல்ல, இன்று நம் ஒவ்வொருவருக்கும் அந்த வெற்றி சொந்தமானதாக காணப்படுகிறது. நாமும் சாத்தானின் தந்திரங்களை அறிந்து இந்த உலகத்தில் பாவத்தை வெறுத்து, நீதிக்கு பிழைத்து வாழவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

ஒலிம்பிக்கில், கால்பந்து போட்டியில், கிரிக்கெட் போட்டி போன்ற எந்த விளையாட்டுப்போட்டியில் பங்குபெற்று வெற்றிபெற்றாலும், ஜெயத்தை பெற்றுக்கொண்டாலும், வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு தொகையை தருவார்கள். உலக போட்டிகளில் வெற்றிபெற்றால் பதக்கங்கள் அதாவது Award கிடைக்கும், கிறிஸ்தவ வாழ்வில் வெற்றியைப்பெற்றால் பலன்கள் அதாவது Reward கிடைக்கும். இயேசு சொன்னார் இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது (வெளி 22:12) என்பதாக. ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்றால் தங்கம், வெள்ளி, மற்றும் வெண்கலம் போன்ற பதக்கங்களை தருவார்கள். கிறிஸ்தவ வாழ்வில் ஜெயத்தை பெற்றால் அநேக பலன்களை நாம் பெற்றுக்கொள்ளுவோம். ஜெயத்தை பெறுகிற நமக்கு வெண்வஸ்திரம் கொடுக்கப்படும், வாழ்வளிக்கும் ஜீவ விருட்சத்தின் கனியை நாம் புசிப்போம், இரண்டாம் மரணம் ஜெயம்கொள்ளுகிறவர்களுக்கு கிடையாது, மறைவான மன்னா கிடைக்கும், தேசங்களின் மீது ஆளுகை கிடைக்கும், தேவாலயத்தில் தூணாகும் பாக்கியம் கிடைக்கும், விடிவெள்ளி நட்சத்திரமாக இருப்போம், புதிய நாமம் நமக்கு தரிப்பிக்கப்படும், மாத்திரமல்ல, ஜெயங்கொள்ளுகிறவன் இயேசுவோடு கூட சிங்காசனத்தில் உட்காரும் சிலாக்கியதை பெற்றுக்கொள்ளுவான். வெளி 21:7ல் ஆண்டவர் கூறுகிறார், ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான் என்பதாக. ஜெயங்கொள்ளுகிறவர்கள் மாத்திரம் சுதந்திரிக்கிற பலன்கள் எத்தனை என்று பாருங்கள். இந்த பலன்களை உலகத்தில் எத்தனை கோடி கிடைத்தாலும் பெற்றுக்கொள்ள முடியாது.

ஆகையால், நாம் ஒவ்வொருவரும் பாவத்தை தோற்கடித்து ஜெயங்கொள்ள வேண்டும்; கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமையை வீழ்த்தி ஜெயங்கொள்ள வேண்டும். பணஆசையை வெறுத்து, அதன் மேல் ஒரு ஜெயமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் மாத்திரம் ஜெயங்கொள்ளுகிறவன் என்ற வார்த்தை அநேக இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஏழு சபைக்கும் ஆவியானவர் சொல்லும்போது ஜெயங்கொள்ளுகிறவன் என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறார். ஒலிம்பிக் போட்டியில் ஒருவர் மாத்திரமே வெற்றிபெற முடியும், கிறிஸ்தவ வாழ்வில் பங்குபெறும் அனைவருக்கும் வெற்றிபெற வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. பதக்கங்களை அல்ல; பலன்களை எதிர்நோக்கி ஜெயமுள்ள வாழ்க்கை வாழ்ந்து, பலன்களை பெற்றுக்கொள்ளுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *