கர்த்தருடைய வசனத்திற்கு நடுங்குங்கள் (Tremble at God’s Word)

என்னுடைய கரம் இவைகளையெல்லாம்  சிருஷ்டித்ததினால்  இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார், ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன் (ஏசாயா 66:2).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/PVsLmtlUa48

கர்த்தருடைய ஜனம் தேவனுடைய வார்த்தைக்கு நடு நடுங்கி ஜீவிக்கவேண்டும். உம்முடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாத படியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது  என்பதாகச் சங்கீதக்காரன் சங்கீதம் 119:136ல் கூறினான். பரலோகத்தின் தேவனும் கூட அவருடைய பிள்ளைகள் அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டு, கீழ்ப்படிந்து நடவாத போது வேதனையடைகிறார். ஆனால் அதைக் கைக்கொண்டு ஜீவிக்கும் போது அவருடைய மனம் மகிழும்.

வேதம் நாற்பது பரிசுத்தவான்களால் சுமார் ஆயிரத்தறுநூறு வருட இடைவெளியில் எழுதப்பட்டாலும் அதை முழுவதுமாய் ஆக்கியோன் தேவனாய் காணப்படுகிறார். கர்த்தர் சீனாய்மலையில்   மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார் என்று யாத். 31:18 கூறுகிறது. கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார், அவருடைய வசனம் என் நாவில் இருந்தது என்று தாவீது 2 சாமு. 23:2ல் கூறினார். கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி என்று எரேமியா 1:5ல் எழுதப்பட்டிருக்கிறதைப்  பார்க்கமுடிகிறது. வேதத்தில் இரண்டாயிரம் இடங்களுக்கு மேலாக பல தீர்க்கதரிசிகளும் பரிசுத்தவான்களும், கர்த்தர் இதைச் சொன்னார் என்றும், கர்த்தர் என்னைக் கொண்டு பேசினார் என்றும், இவைகள் கர்த்தருடைய வார்த்தைகள் என்றும் கூறியிருக்கிறார்கள். ஆகையால் வேதம் முழுவதையும் எழுதிக் கொடுத்தவர் கர்த்தராய் காணப்படுகிறார். மாத்திரமல்ல, கர்த்தர் தன்னுடைய ஜீவனை அவருடைய வார்த்தைக்குள் வைத்திருக்கிறார். நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது என்றும்,  தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயுமிருக்கிறது என்றும் வேதம் கூறுகிறது. உலகத்தில் பல புத்தகங்கள் காணப்படலாம், அவைகளுக்குள் ஜீவன் இல்லை, வேத புத்தகத்தில் மாத்திரம் இயேசுவின் ஜீவன் காணப்படுகிறது. ஆகையால் தான் அவரை ஜீவவார்த்தை என்றும், தேவனுடைய வார்த்தை என்றும் அழைக்கிறோம். அந்த ஜீவன் உங்களுக்கு ஒளியாய் காணப்பட்டு, உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவரும்.

கர்த்தருடைய பிள்ளைகளே, தேவனுடைய வார்த்தையைக் கனம் பண்ணக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பிரியம் கர்த்தருடைய வார்த்தையின் மேல் இருக்கட்டும். பெரோயா பட்டணத்தின் ஜனங்களைப் போல வேதத்தை நீங்களும் ஆராய்ந்துபாருங்கள். கர்த்தருடைய புத்தகத்தில்  பரலோகப் பொக்கிஷங்கள் புதைந்து காணப்படுவதால் நீங்கள் புதையல்களைத் தேடுவது போல அதைத் தேடி வாசியுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாகக் கர்த்தருடைய வார்த்தைக்கு முன்பாக நடுங்குங்கள். அப்போது கர்த்தர் உங்களை நோக்கிப்பார்ப்பேன் என்று வாக்குக் கொடுக்கிறார். அவர் உங்களை நோக்கிப்பார்க்கும் போது அவர் கண்களிலிருந்து கடாட்சத்தைப் பெறுவீர்கள், நீங்கள் பிழைத்துக் கொள்ளுவீர்கள். உங்கள் வாழ்க்கையின் எல்வாவிதமான கடினமான சூழ்நிலைகளும் மாறும். அவருடைய கிருபையும் தயவும் உங்களைச் சூழ்ந்துகொள்ளும், நீங்கள் ஆசீர்வாதமாகக் காணப்படுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *