அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார், என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது (சங். 54:7)
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fsDu6Xys8Xw
சவுல் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைப் போல தாவீதின் உயிரை வேட்டையாடினான். தாவீது சவுலுக்குப் பயந்து, அவன் கண்களுக்கு மறைவாகப் பல இடங்களில் ஒளித்தும், மறைந்தும் வாழ்ந்து வந்தான். இப்படி காணப்பட்ட வேளையில் இரண்டு முறை சீப்பூராரின் ஜனங்கள் தாவீதின் மறைவிடத்தைப் பற்றி சவுலுக்கு அறிவித்தார்கள். பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா? இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும் அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க எங்களால் ஆகும் என்றார்கள் என்று 1 சாமு. 23:19,20ல் எழுதப்பட்டிருக்கிறது. பின்னும் ஒரு முறை, சீப்ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள் என்று 1 சாமு. 26:1 ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இரண்டு முறையும் தாவீதைக் கர்த்தர் சவுலுடைய கரங்களிலிருந்து தப்புவித்தார். அவ்வேளையில் தாவீது எழுதின இந்த பாடலில், கர்த்தர் எல்லா நெருக்கத்திலிருந்து என்னை விடுவித்தார் என்றும் என் கண் என் சத்துருக்களின் சரிக்கட்டுதலைக் கண்டது என்றும், ஏற்கனவே சவுலுக்குக் கர்த்தர் தண்டனையைக் கொடுத்து என்னை விடுவித்தார் என்று விசுவாசத்தோடு அறிக்கையிடுகிறதைப் பார்க்கமுடிகிறது. அவனுடைய விசுவாசத்தின் படியே பின்னாட்களில் கர்த்தர் சவுலுக்குச் செய்தார். சவுல் தாவீதை நெருக்கியதைப் போல பெலிஸ்தியர்கள் இவனை நெருக்கி, மிகவும் காயப்படுத்தினார்கள், அதினிமித்தம் சவுல் தற்கொலை செய்து மரித்துப்போனான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களுக்கு விரோதமாக அனேக விரோதிகள் காணப்படக் கூடும். நீங்கள் வேலைசெய்கிற இடங்களிலும், வசித்துக் கொண்டிருக்கிற இடங்களிலும் உங்ளை அழித்துப் போடவும், உங்கள் முடிவை எதிர்பார்த்தும் அனேகர் ஆவலோடு காணப்படலாம். மனுஷருடைய சத்துரு அவன் வீட்டார்தானே என்ற வார்த்தையின்படி உங்கள் குடும்பத்தில் கூட அனேகர் உங்கள் வீழ்ச்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். ஊழியங்களின் பாதைகளில் அனேக சத்துருக்கள் சபைகள் பூட்டப்படுவதையும் ஜனங்கள் சிதறடிக்கப்படுவதையும் எதிர்நோக்கிக் காணப்படலாம். அவ்வேளைகளில் நாம் தாவீதைப் போல செய்யவேண்டியது, கர்த்தர் என்னை என் சத்துருக்களின் கைகளிலிருந்து விடுவித்தார் என்றும், என் எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டினார் என்றும் விசுவாச அறிக்கைச் செய்கிறவர்களாய் காணப்பட வேண்டும். அப்போது, சவுல் வீழ்ந்தது போல உங்கள் எதிரிகளைக் கர்த்தர் வீழ்த்துவார். உங்கள் சத்துருக்களுக்கு நேரிடுவதை உங்கள் கண்கள் காணும்படிக்குக் செய்வார், துன்மார்க்கருக்கு வரும் பலனை உங்கள் கண்கள் காணும். இந்த யுத்தம் என்னுடையது நீங்கள் சும்மாயிருங்கள் என்று வாக்குக் கொடுத்தவர் உங்களுக்கு சகாயராய் துணை நின்று, உங்களை விடுவித்து, உங்கள் நெருக்கங்களை மாற்றி, உங்களை மகிழப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

